Tuesday, February 4, 2014

உண்மையில், பிரச்னைகள் என்பது ஒரு பிரச்னையா?

உண்மையில், பிரச்னைகள் என்பது ஒரு பிரச்னையா?

''எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு. ஆனால், ஒவ்வொரு தீர்வும் ஒரு புதிய பிரச்னையின் ஆரம்பம்'' என்று கிரேக்கப் பேரறிஞர் அரிஸ்டாட்டில் கூறியுள்ளார்.

பிரச்னையே வரக்கூடாது என எச்சரிக்கையாக வாழ்பவர்களுக்கும் ஏதேனும் பிரச்னை வரத்தான் செய்யும். பிரச்னை பெரிதானால் பார்த்துக் கொள்ளலாம் என்று, வெளியே தைரியமாகப் பேசிக்கொண்டு, உள்ளே பயத்துடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். பிரச்னைகளைத் தள்ளிப்போட்டுவிட்டால், தானாகத் தீர்ந்துவிடும் என்கிற இவர்களின் நினைப்புக்கு மாறாக, பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து பூதாகாரமாக பயமுறுத்தும்.

எதிர்ப்புச் சக்தியை உடலில் ஏற்றிக்கொண்டால், நோய் வராமல் தடுக்கலாம். அதுபோல பிரச்னைகளை சமாளிக்கும் திறனை நாம் அதிகப்படுத்திக்கொண்டால், பிரச்னைகள் நம்மை பயமுறுத்தாது.

ஒரு பிரச்னை உருவானால், சந்தர்ப்பத்தையோ, சூழ் நிலையையோ அல்லது மற்றவர் களையோதான் பிரச்னைக்குக் காரணம் என்று நாம் குற்றம் சாட்டுகிறோம். அதை விடுத்து, நமது பிரச்னைக்கு நாம்தான் காரணம் என்று எண்ணும்போதுதான், அதற்குத் தீர்வு காணும் முதல் படியில் நாம் கால் வைக்கிறோம்.

வாழ்க்கையில் பிரச்னை இருக்கலாம்; ஆனால், பிரச்னையே வாழ்க்கையாகிவிடக்கூடாது. வாழ்க்கையில் வெற்றி பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும்; தோல்வி ஏற்படும்போது துவளாமல் இருப்பது கூட ஒருவகையான வெற்றிதான்!


புதிய உலகைக் கண்டவன்!


14-ஆம் நூற்றாண்டு! புதியன படைக்கவும், புதுமைகள் காணவும் துடிப்பான பலர் இடையறாது உழைத்துக்கொண்டிருந்த கால கட்டம் அது. புதியதோர் உலகம் காண, ஸ்பெயின் நாட்டில் இருந்து புறப்பட்டார் ஒரு மாலுமி. அவர் பெயர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். இருபது மாலுமிகளுடன் சிறு கப்பலில் அவரது பயணம் பசிபிக் கடலில் தொடங்கியது. சுற்றிலும் கடல்... கடல்... கடல்... என, வேறு எதையுமே காணாமல் அவர்கள் பயணம் நீண்டு கொண்டிருந்தது. 24 நாட்கள் கழிந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கரையே தென்படவில்லை!

கப்பலில் உள்ளவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கும் அதிகாரி ரொனால்ட். அதில் பயணம் செய்துகொண்டிருந்த 21 பேருக்கு இன்னும் 24 நாட்களுக்கு மட்டுமே போதுமான உணவும் குடிதண்ணீரும்தான் கையிருப்பில் உள்ளது என்பதை அறிந்தான் அவன். உடனே கப்பலைத் திருப்பி, வந்தவழியே வந்த வேகத்திலேயே சென்றாலும், புயலும் மழையும் குறுக்கிடாமல் இருந்தால்தான், 24 நாட்களில் உயிருடன் அனைவரும் ஸ்பெயின் நாட்டை அடைய முடியும் என்று கணக்கிட் டான். இதற்கு மாறாக, பயணத்தை மேலும் சில நாட்கள் தொடர்ந்து, கரை காண முடியாமல் போகுமானால், கடலிலேயே அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடும் என்கிற தன் எண்ணத்தை மாலுமிகளிடம் தெரிவித்தான்.

ஏற்கெனவே சோர்ந்துபோயிருந்த, உயிரின் மீதும் உற்றார் உறவினர் மீதும் பாசமும் பற்றும் கொண்டிருந்த அனைவரும் ரொனால்டின் கருத்தை ஏற்று, கப்பலைத் திசை திருப்பி, தாய்நாட்டை நோக்கிப் பயணத்தைத் தொடர்வதென ஏகமனதாக முடிவெடுத்தனர். தங்கள் தலைவர் கொலம்பஸிடம் இதைத் தெரிவிக்கவும் செய்தனர்.

உணவும் தண்ணீரும் தனது வாழ்க்கை லட்சியத்தில் குறுக்கிடுவதா? புதியதோர் உலகம் காணப் புறப்பட்ட முயற்சியிலிருந்து பின்வாங்குவதா? கொலம்பஸால் இதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

''எக்காரணம் கொண்டும் பாதையை மாற்றுவதற்கில்லை. கப்பலை முன்னோக்கியே செலுத்துங்கள்; நடப்பது நடக்கட்டும்!'' என்று கட்டளையிட்டார்.

ஆனால், தன் கட்டளைக்குக் கட்டுப்படாமல் கப்பல் திசை திரும்பி, ஸ்பெயினை நோக்கி நகர்வதை

தளத்திலிருந்து பார்த்த கொலம்பஸ் அதிர்ச்சியுற்றார். ஆம்... தலைமைப் பதவியை ரொனால்ட் எடுத்துக் கொண்டான். கொலம்பஸ் காவல் கைதியாக்கப்பட்டு, பாய்மரக்கம்பத்தில் கட்டிப் போடப்பட்டார்.

தலைமைப் பதவி போய்விட்டது; நண்பர்களே விரோதிகள் ஆகிவிட்டார்கள். கட்டுண்ட நிலையிலும், புதியதோர் உலகம் காண விழைந்த கொலம்பஸ் கலங்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என ஆழ்ந்து சிந்தித்தார். ரொனால்டை அழைத்தார். ஒரு சிறு கணக்குப் போட்டார்.

''21 பேருக்கு 24 நாட்களுக்கான உணவும் தண்ணீரும் உள்ளதுதானே?'' என்று கேட்டார் கொலம்பஸ்.

''ஆம். 24 நாட்களுக்கு மட்டுமே அவை போதுமானது!''

''அந்த 21 பேரில் நானும் ஒருவன்தானே?''

''அதிலென்ன சந்தேகம்? உங்களையும் சேர்த் துக் காப்பாற்றுவதற்காகத்தான் உங்களையே எதிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என்று வருத்தத்துடன் தெரிவித்தான் ரொனால்ட்.

''நான் ஒருவன் சாப்பிடாமலும், நீரருந்தா மலும் இருந்தால், என்னுடைய 24 நாள் உணவும், தண்ணீரும் மீதியுள்ளோருக்கு மேலும் கூடுதலாக ஒரு நாளைக்குப் போது மல்லவா?'' என்று கேட்டார் கொலம்பஸ்.

ரொனால்டுக்குக் கணக்கு புரிந்தது; காரணம் புரியவில்லை. கொலம்பஸ் தொடர்ந்தார்...

''கப்பலை முன்னோக்கி மேலும் ஒரே ஒரு நாள் மட்டும் செலுத்துங்கள். ஒருவேளை, கரை காணாது போனால், என்னைக் கடலில் தள்ளிவிடுங்கள். மிச்சமாகும் என் உணவும், தண்ணீரும், திரும்பி ஊர் சேரும்வரை உங்களுக்குப் போதுமானதாக இருக்கும்.''

மாலுமிகளுக்கு இப்போது கணக்கும் புரிந்தது; கொலம்பஸின் கொள்கைப் பிடிப்பும் புரிந்தது; இதில் தங்கள் கடமை என்ன என்பதும் புரிந்தது.

கொலம்பஸைக் கட்டியிருந்த கயிறுகள் உடனடியாக அவிழ்க்கப்பட்டன. கப்பல் முன்னோக்கி நகர்ந்தது. அடுத்த இருபதாவது மணி நேரத்தில், கப்பல் கரை சேர்ந்தது. புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்கா கண்டம் கொலம்பஸால் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தர்ப்பத்துக்காகத் தன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை கொலம்பஸ். மாறாக, கொள்கைக்கேற்ப சந்தர்ப்பத்தையே மாற்றியமைத்து வெற்றி கண்டார்.

பிரச்னைகளை ஒழிக்க முயல்வதைவிட, அதற்கான காரணங்களை ஆராய்ந்து செயல் படும்போதுதான் அவற்றுக்கான தீர்வுகளைக் காணமுடியும். இது கொலம்பஸ் காட்டிய வழி!