Monday, February 10, 2014

ஜெயமுண்டு பயமில்லை மனமே!

நம் நாட்டு இளைஞர்களுக்கு எல்லாத் திறமைகள் இருந்தும் மற்ற நாட்டு இளைஞர்களைப்போல முன்னேற முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம், நம் மனதில் பரிபூர்ணமாக நிறைந்திருக்கும் பயம். உலகப் போருக்குப் பிறகு நிர்மூலமாகிப்போன ஜப்பான் பயமே இல்லாமல் எழுந்து நடந்து அதிநவீன நாடாக உலகத்தை வலம் வருகிறது.

பயம்தான் ஒருவரைத் தப்புச் செய்யத் தூண்டுகிறது. கல்லூரியில் அசைன்மென்ட் எழுதாமல் போகிறோம். பேராசிரியர் கேட்டால், சார், உடம்புச் சரியில்லை என்று பொய்ச் சொல்கிறோம். ஏன் இந்தப் பொய்? பேராசிரியர் திட்டுவார் என்கிற பயம்.

அற்ப காரணத்துக்காக ஆபீஸில் லீவு போடுகிறோம். ஏன் என்று கேட்டால், சார், பயங்கரத் தலைவலி என்று பொய்ச் சொல்கிறோம். உண்மையைச் சொன்னால், மேலதிகாரி திட்டுவார் என்கிற பயம்தான் இப்படி ஒரு பொய்யைச் சொல்லவைக்கிறது.

இப்படி ஒவ்வொரு விஷயத் திலும் நாம் பயப்படுவதால், அதுவே நம்முடைய பெரிய பலவீனமாகி விடுகிறது. பயம் என்பது ஒரு மனரீதியான உணர்வுதான். கோபம், அழுகை, சந்தோஷம், ஏக்கம், துக்கம், சிரிப்புப் போன்றதுதான் அது. மற்ற உணர்வுகள் ஏற்படும்போது உடல் எவ்வாறு 'ரியாக்ட்' செய்கிறதோ, அதைப் போன்று பயம் ஏற்படும்போதும் உடலில் சில மாற்றங்கள் உண்டாகும். அதைக் கட்டுப்படுத்துவதற்கான மனப் பயிற்சி நமக்கு இருந்தால், எளிதில் அதிலிருந்து வெளியே வந்து நம்மால் பல சாதனைகளைச் செய்யமுடியும்.

பயம் ஏன் உண்டாகிறது? இதற்கு  முக்கியமான நான்கு காரணங்கள்.

1. சிறு வயது அனுபவங்கள்!

சின்ன வயதில் நாய்க் கடித்திருக்கும். அப்போதிலிருந்தே நாயைப் பார்த்தால், அரண்டு ஓடுவோம்.

2. பிறருடைய அனுபவங்களின் பாதிப்பு!

நமக்குத் தெரிந்த நண்பர்களுக்கோ, நம்முடைய சகோதரர்களுக்கோ ஏதாவது நடந்தால் நமக்கும் அதுமாதிரி நடந்துவிடுமோ என்கிற பயம்.

3. நம்பிக்கைகள்!

சில நம்பிக்கைகள் எங்கே இருந்து பிறந்ததுன்னு தெரியாமல் நமக்குள்ளேயே இருக்கும். பூனைக் குறுக்கே போனால் அபசகுனம் என்று நினைத்துப் பயப்படுகிறவர்கள் எத்தனையோ பேர்.

4. காரணமற்ற பயம்!

நாம் எந்த முயற்சியும் எடுக்காமல், ஒரு காரியத்தில் தோற்றுப் போய்விடுமோ என்கிற பயம். உதாரணத்துக்கு, பரீட்சைக்குப் படிக்காமலேயே, ஃபெயிலாகி விடுவோமோ என்கிற பயம்.

இத்தகைய பயங்களுக்கு நாம் மதிப்பளிக்கத் தொடங்கிவிட்டால், அதுவே நமக்கு ஒரு தடையாகிவிடும். அதன்பிறகு, நம்மால் எந்தவொரு விஷயத்தையும் நம்பிக்கையுடன் செய்ய முடியாது. எந்த விஷயத்தைச் செய்தாலும் அதில் ஒரு சந்தேகம் நமக்கு இருந்துகொண்டே இருக்கும். இந்தப் பயம் ஒருகட்டத்தில் எல்லை மீறிப்போய், பயம் என்பதே இல்லாத ஒரு மனநிலை நமக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை. இந்த அதீதமான  மனநிலையிலும் ஒருவர் தவறு செய்வதற்கே நிறைய வாய்ப்பு உண்டு.


உங்களிடம் உள்ள பயங்கள் பற்றி நீங்கள் புரிந்துகொள்ளச் சில எளிய வழிகள்.

 உங்களுடைய பயங்கள் என்னென்ன என்பதை எழுதுங்கள். உதாரணத்துக்கு, 'தன்னம்பிக்கை இல்லாமை' ஒரு காரணம்.

 ஒவ்வொரு பயத்திலிருந்தும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங் களையும், அதிலிருந்து நீங்கள் மீள முயற்சித்ததையும் எழுதுங்கள்.

 உங்களுக்கு ஏற்படும் வெற்றிகளை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

 உங்களுக்கு உண்மையென்று புலப்பட்ட நம்பிக்கைகளை வரிசைப்படுத்துங்கள்.

 வெற்றிபெற்ற மனிதர்கள் எப்படி யோசித்து, பயத்திலிருந்து வெளியில் வந்தார்கள் என்று பார்த்தால், சில வழிகள் நமக்குத் தெரியும்.

1. எதற்கெடுத்தாலும் நெகட்டிவ்வாக யோசிக்காமல் இது நடக்காதோ என்ற தேவையற்ற கவலைகள் இல்லாமல் இருப்பது.

2. நம்மால் கண்டிப்பாக இதைச் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையோடு இருப்பது.

3. வாழ்க்கையில் குறிக்கோளோடு வாழ்கிறோம் என்ற உறுதியோடு இருப்பது.

4. நாம் உண்டு, நம் வேலை உண்டு என்றே இருந்து நமக்குள்ளேயே ஒரு வட்டம் வரைந்துகொண்டு இருக்காமல், மற்றவர்களோடு சகஜமாகப் பழகுவது.

5. உலகத்தில் யாரோ ஒருவருக்குத் தவறாக நடந்த விஷயம் நமக்கு நடந்துவிடுமோ என்று பயப்படாமல் இருப்பது.

உலகத்தில் எந்த ஒரு சம்பவத்தையோ அல்லது ஜெயித்தவர்களையோ உதாரணமாக எடுத்துக்கொண்டால், அவர்களின் தைரியம்தான் அவர்களைத் தனிமனிதராக  எழுச்சியடைய வைத்திருக்கும்.

ஒல்லிக்குச்சியான காந்தி ஒரு பேரரசையே மிரட்டக் காரணம், அவரிடம் இருந்த தைரியம்தான். நெல்சன் மண்டேலாவிடம் இருந்த தைரியம்தான் தென் ஆப்பிரிக்காவின் அடக்குமுறை அரசை எதிர்த்துப் போராட வைத்தது

.

பயமில்லாமல் ஜெயிக்க  என்னதான் செய்ய வேண்டும்?

 உங்களைவிட மேலான சக்தி ஒன்று உள்ளது என்று நம்புங்கள்.

  நல்லதே நடக்கும் என்றே நினைக்கப் பழகுங்கள்.

 உலகில் படைக்கப்பட்ட பொருட்கள் யாவும் நம் நண்பர்கள் என்று பழகுங்கள்.

   உங்கள் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்.

 உங்கள் திறமைகளை நீங்கள் முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். தோல்வி மனப்பான்மை வேண்டாம். தாழ்வு மனப்பான்மையைத் தவிருங்கள்.

எதற்காக நாம் பயப்படுகிறோமோ, அதனைக் கொஞ்சம்

கொஞ்சமாகப் பழகிக்கொள்ளுங்கள். உதாரணமாக, தண்ணீர் பயம் என்றால் மற்றவர்கள் துணையுடன் நீச்சல் பழகுங்கள்.

வீணான குழப்பத்தைத் தவிருங்கள்.

8. பயம் என்பது ஒரு நினைப்பே. அது எந்தவிதப் பாதிப்பையும் உண்டு பண்ணுவதில்லை என்று அழுத்தமாக மனதில் பதியுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்று உணருங்கள்.

பயந்து பயந்து பதுங்கி வாழ்ந்தால், இருப்பதையும் இழந்துவிடுவோம்! பயமில்லாமல் இருந்தால் பாற்கடலும் நமக்குச் சொந்தமாகும்! ஜெயமுண்டு பயமில்லை!