Tuesday, February 4, 2014

இல்வலன், வாதாபி கதை

டைத் தெருவில் செண்பகாவைப் பார்த்தபோது, அவள் அப்படி ஒரு வேண்டுகோளை முன்வைப்பாள் என்று நான் சற்றும் நினைக்கவில்லை.

''உங்க கம்பெனியிலே சொல்லி, உங்க நண்பருடைய வேலைப் பளுவை கொஞ்சம் குறைக்கச் சொல்ல முடியுமா?'' என்றாள்.

என் நண்பன் சேகர், அவளின் கணவன். 'எதற்காக இந்த வேண்டுகோள்?' என்று கேட்டேன். ''உங்களுக்குத் தெரியாதா?  இப்பல்லாம் அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலிக்குது. டாக்டர் கிட்டே போகலாம்னாலும், வரமாட்டேங்கிறார்'' என்றாள்.  எதையோ சொல்லி அப்போதைக்குச் சமாளித்தேன் என்றாலும், மனதில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருந்தது. சேகர் பல விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்துகொள்வான். நெஞ்சு வலி வந்திருந்தால், அதுவும் பலமுறை எனில், அதை என்னிடம் மறைத்திருக்கமாட்டானே!

​அடுத்த நாள் உணவு இடைவேளையில் இதுபற்றிக் கேட்டபோது, அவன் ஓர் அசட்டுச் சிரிப்பை வெளிப்படுத்தினான்.

''அப்படியெல்லாம் இருந்தால், உன் கிட்டே சொல்லியிருக்க மாட்டேனா?'' என்றான்.

''பின்னே எதுக்கு செண்பகாகிட்டே அப்படியொரு பொய் சொன்னே?'' என்றேன்.

''வேற வழியில்லை நண்பா! கம்பெனியிலே உள்ள வேலை பளு காரணமா, வாரத்துக்கு நாலு நாளாவது ரொம்ப லேட்டாத்தான் வீட்டுக்குப் போக முடியுது. அதைப் புரிஞ்சுக்காம, பட்டாசா ​வெடிக்கிறா அவ. களைப்பா வீட்டுக்குப் போனா, இவளுடைய கோபத்தையும் தொணதொணப்பையும் தாங்கமுடியலே!''

''அதுக்காக, நெஞ்சுவலின்னு சொல்லி பயமுறுத்தறதா?''

''அப்படிச் சொன்னதனாலதான் அவ கோபம் குறைஞ்சிருக்கு. அவளுடைய தொணதொணப்பிலிருந்து எனக்கு விடுதலை கிடைச்சிருக்கு. இப்பல்லாம் வீட்ல ராஜ உபசாரம்தான். இந்த டெக்னிக்கை இன்னும் கொஞ்சம் அதிகமாகக்கூட கடைப்பிடிக்கலாம்னு தோணுது.''

எனக்குக் கோபம் வந்தது.  ''உளறாதே! இல்வலன், வாதாபி கதை ஆயிடப்போகுது!'' என்றேன்.

அவன் முகபாவத்திலிருந்தே, இந்த இரண்டு பெயர்களும் அவன் கேள்விப்படாதவை என்பது புலப்பட்டது. அப்படியானால், அந்தக் கதையைக் கூறிவிட்டுப் பிறகுதானே விளக்கமுடியும்?      

****

ரு காலத்தில் இல்வலன், வாதாபி என்று இரு அரக்கர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முனிவரிடம் சென்று, ''எங்களுக்கு இந்திரன் அளவுக்குச் சக்தியை அளியுங்கள்'' என்று கேட்க,

அவர் கோபத்துடன், ''ஆசைக்கு ஓர் அளவு இல்லையா? உடனே சென்று விடுங்கள். இல்லை யென்றால், சாபம் கொடுத்துவிடுவேன்'' என்றார்.

அதிலிருந்து அந்த இரண்டு அரக்கர்களுக்கும் முனிவர்கள் என்றாலே வெறுப்பு உண்டானது. 'ஏதோ தவவலிமை இருப்பதற்காக இவ்வளவு செருக்கா!' என்று கருதிய இருவரும், முனிவர்களைக் கொன்று தீர்க்க, வஞ்சகத் திட்டம் தீட்டினார்கள். அதற்கு, ஏற்கெனவே அவர்கள் பெற்றிருந்த ஒரு வரம் உதவியது.  

வழியில் தென்படும் எந்த ஒரு முனிவரிடமும், ''தயவுசெய்து நீங்கள் என் வீட்டுக்கு அதிதியாக வந்திருந்து, விருந்து சாப்பிட்டு, என்னை கௌரவிக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் வைப்பான் இல்வலன். மகிழ்ச்சியோடு சம்மதிக்கும் முனிவர், நதியில் குளிக்கச் செல்வார். அந்த வேளையில், ஆடாக மாறியிருக்கும் வாதாபியை வெட்டி கறி சமைத்து, வீட்டுக்கு வரும் முனிவருக்கு விருந்து படைப்பான் இல்வலன். முனிவர் சாப்பிட்ட பிறகு, ''வாதாபி, வெளியே வா!'' என்று குரல் கொடுப் பான். உடனே, முனிவரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருவான் வாதாபி. இப்படிப் பல முனிவர்களை இந்த அரக்கர்கள் கொன்றனர்.

ஒருமுறை, அகத்திய முனிவரிடமும் இல்வலன் அப்படியரு வேண்டு கோள் வைத்தான். ''என் குடிசைக்கு எழுந்தருளி, விருந்து உண்ண முடியுமா? அப்படிச் செய்தால், நான் பாக்கியம் அடைந்தவன் ஆவேன்'' என்றான்.

அகத்தியர், அவன் கண்களில் கள்ளம் தெரிந்ததை உணர்ந்தார். என்றாலும், ''சரி, உணவு தயார் செய். அதற்குள் நான் ஸ்நானம் செய்துவிட்டு வருகிறேன்'' என்று கிளம்பிச் சென்றார்.

தன் வீட்டை அடைந்த இல்வலன், வழக்கம்போல் வாதாபியை ஆடாக மாற்றிக் கொன்று சமைத்தான். குளித்துவிட்டு வந்த முனிவர், இலை முன் அமர்ந்தார்.

விருந்து பரிமாறப்பட்டது. ஒரு பருக்கை விடாமல் அதை முழுவதுமாகச் சாப்பிட்ட அகத்தியர், கைகளைக் கழுவிக்கொண்டு, தனது வயிற்றைத் தடவியபடி, 'வாதாபி ஜீர்ணோபவ' என்றார்.

அதை அறியாத இல்வலன் குரூரப் புன்னகையோடு, ''வாதாபி, வெளியே வா!'' என்று அழைத்தான். ''வாதாபியா? யார் அது?'' என்று புன்னகையுடன் கேட்டார் அகத்தியர்.

இல்வலனுக்குப் பதற்றம் உண்டானது. வாதாபியை வெளியே வரச் சொல்லி மீண்டும் மீண்டும் கூக்குரலிட்டான். பலன் இல்லை. ''உன் சகோதரன் வாதாபி ஜீரணமாகிவிட்டான்!'' என்றபடி,  கிளம்பிச் சென்றார் அகத்தியர்.

****

''எப்போதுமே நாம் நினைப்பதுதான் நடக்கும் என்று சொல்ல முடியாது. இல்வலன் ஏமாந்ததுபோன்று ஏமாற நேரிடலாம். நாம் சொல்கிற பொய், நம்மைப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய்த் தள்ளலாம். நெஞ்சுவலி என்றால், தொடர்ந்து அனுதாபம்தான் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு கட்டத்தில், அவளுக்கும் அலுப்பு வரலாம். 'சரி, விடு! ஏதோ சாதாரண வலி. அடிக்கடி வருவதுதான்' என்று தோன்றிவிடலாம். அல்லது, நீ பொய் சொல்வது எப்படியோ அவளுக்குத் தெரிந்துவிடலாம். அப்போது உன் நிலைமை என்ன ஆகும் என்று யோசி!'' என்றேன்.

சேகர் திடுக்கிட்டான். அடுத்த அஸ்திரத்தையும் வீசினேன்.

''அவள் உன் பொய்யை நம்பி, உனக்கு நிஜமாகவே நெஞ்சுவலி என நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். இந்தக் கவலையிலேயே அவள் உடல்நிலை பலவீனமானால், என்ன ஆகும் என யோசித்தாயா? அப்போது வருத்தப்பட்டுப் பலனில்லை'' என்றேன்.  

அவன் முகத்தில் தெரிந்த பதற்றமும், தன் தலையை உதறிக்கொண்ட விதமும், தனது கடந்த காலத் தவற்றை வருங்காலத்தில் தொடரமாட்டான் என்பதை உறுதி செய்தன.