Tuesday, February 4, 2014

விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்?

''நேத்து ஹோமுக்குப் போய் அப்பா அம்மாவைப் பார்த்துட்டு வந்தேன்...'' என்றபடியே என் எதிரில் அமர்ந்த நண்பருக்கு 53 வயது, 7 மாதம், 17 நாட்கள்.

''எப்படி இருக்காங்க?'' என்று கேட்டேன்.

''ம்... சௌக்கியமாதான் இருக்காங்க. ஆனா, தங்கியிருக்கிற இடம்தான் கீக்கிடமா இருக்கு! சின்ன ஹால்; அதைவிட சின்னதா ஒரு பெட்ரூம்; மூட்டைப்பூச்சி வாசம் செய்யும் பழைய கட்டில்; அழுக்குத் தலையணை, போர்வை; சின்னதா ஒரு டாய்லெட்; அங்கே நின்னு குளிக்கறதே கஷ்டம்.''

''உங்க அப்பாவுக்கு எல்லாமே படுசுத்தமா இருக்கணுமே..?''

''அதுக்கென்ன செய்றது? லட்சம் லட்சமா டெபாசிட் கட்டியாச்சு. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிட்டுதான் போகணும்.''

''சரி... சாப்பாடு எப்படி?''

''அரை கிலோ மீட்டர் தொலைவுல கேன்டீன் இருக்கு. காபி, சாப்பாடு, டிபன்னு ஒவ்வொண்ணுத்துக்கும் தினமும் நடந்து போகணும். செம்மண் தரை. மழை பெஞ்சா சேறு, சகதி வேற!''

''போகட்டும்... சாப்பாடு டேஸ்ட் எப்படி இருக்காம்?''

''சுமார்தான். நானே சாப்பிட்டுப் பார்த்தேன். அரிசி சரியா வேகல. சாம்பார்ல உப்பு கம்மி. தயிர் கிடையாது. மோரும் சுமார்தான்''

''உங்க அம்மா கைப்பக்குவம் அலாதியா இருக்கும். நிறைய தடவை நானே சாப்பிட்டிருக்கேன். ஹோம் சாப்பாட்டை, பாவம் அவங்க ரெண்டு பேரும் எப்படித்தான் சாப்பிடறாங்களோ?''

''வேற வழி... மாசமானா பத்தாயிரம் ரூபாய் கட்டிட்டு வர்றோமே! போடறதை விழுங்கத்தான் வேணும். ஆனா, ரெண்டு பேரையும் பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரிதான் தெரியுது!''

''வெளில அப்படித்தான் தெரியும். அதிருக்கட்டும்... உன் பொண்ணு, பிள்ளையெல்லாம் எப்படி இருக்காங்க?''

''ஜாம் ஜாம்னு இருக்காங்க. பெரியவன் நியூஜெர்ஸில இருக்கான். அவனுக்கு ஒரு குழந்தை. பொண்ணு, ஆஸ்திரேலியாவுல இருக்கா. அவளுக்கும் ஒரு குழந்தை. மாப்பிள்ளைக்கு பெரிய வேலை. தேவைக்கு அதிகமாகவே சம்பளம்...''

''ஸோ, இங்கே நீயும் உன் மனைவியும் மட்டும்தான்..?''

''ஆமா. பெரிய வீடு; ஏ.சி., டி.வி-ன்னு எல்லா வசதியும் இருக்கு. சமையலுக்கு வீட்டோடு ஆள் போட்டாச்சு. என்ன ஒண்ணு, பேரக் குழந்தைகளோடு விளையாட எங்களுக்குக் கொடுத்து வைக்கலை. ஸ்கைப்ல பார்த்து சந்தோஷப்பட்டுக்கறோம்!''

'பின்னே? விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்?' என்று நான் முணுமுணுத்தது நண்பரின் காதுகளில் விழுந்துவிட்டது போலும்..!

பேய் அறைந்தது போலாயிற்று அவரின் முகம். பார்க்கலாம், அந்த அறைக்குப் பலன் இல்லாமலா போய்விடும்?!