Thursday, February 16, 2017

நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு. ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம் மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில் வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன், அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.

ஜென் கதைகள் 

ஒரு ஜென் கதை இதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.  

"அவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள். ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம் தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவார். அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப் பங்கெடுத்துக்கொள்வார்கள். ஒருமுறை அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் இருவரும் பேசியபடியே நடந்து சென்றார்கள்.

ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு தோன்றிவிட்டது.

கருத்து வேறுபாடே அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறி, ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்துவிட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம் வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில் அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது. அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால், 'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்துவிட்டான்' என்று எழுதினான்.

அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை. இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் தாகம் வாட்டியது.

பாலைவனம் 


அவர்களின் அதிர்ஷ்டம் வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து அந்த ஊற்றில் இருந்த நீரை தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினார்கள். 

அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கன்னத்தில் அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோல் இருந்தது. ஆம், அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.

புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில் அறைந்த நண்பன்.
ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன் சற்று தொலைவு சென்று அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டி தட்டி நன்றிஎதையோ எழுத ஆரம்பித்தான்.

அவன் எழுதியது இதுதான்...

'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக் காப்பாற்றினான்' என்று.

இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ''நான் உன்னை அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக் காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில் சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?'' என்று.

அறை வாங்கிய நண்பன் சொன்னான்: ''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடும்; ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்'' என்றான்.