"ஒரே மாதிரியான செயல்களைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதற்குப் பெயர், முட்டாள்தனம்" - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. ஒரே மாதிரியான செயல்களை நாம் செய்யும்போது தோல்வி ஏற்படுகிறதெனில், நாம் அதற்கான மாற்று வழிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நமது தோல்விக்கான விடையும் கிடைக்கும். தோல்வி வேண்டவே வேண்டாம். வெற்றி மட்டுமே வேண்டும் என்பது சாத்தியமில்லைதான். ஆனாலும், வெற்றி மட்டும்தான் வேண்டுமென்பவர்களுக்கான ஐந்து டிப்ஸ்..
"எங்கு தவறு செய்தீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்"
நீங்க எங்கு தவறு செஞ்சிருப்பீங்கனு கண்டுபிடிக்கச் சுலபமான வழி. நீங்க செய்த செயல்களை அப்படியே ஒரு படம் பார்ப்பதைப் போல முன்னிறுத்திக்கொள்ளுங்கள். கொஞ்சம் நிறுத்தி நிதானமாக ரீவைண்ட் பண்ணிப்பாருங்க. ஒரு படம் பார்க்கும்போது எப்படி பாடல், வசனம், காமெடியெல்லாம் நினைவில் வருமோ, அதே போல நீங்க எந்த இடத்தில் தப்பு பண்ணினீங்கனு கரெக்டா உங்களால கண்டுபிடிக்க முடியும். அந்த இடத்தைத்தான் நாம் நம்முடைய செயல்பாடுகளில் சரி செய்துகொள்ள வேண்டும்.
"வேற லெவல்ல யோசிங்க பாஸ்"
வேற லெவல்ல யோசிக்கணும்னு சொன்னதும் பயந்துட வேண்டாம் பாஸ். எல்லா சக்ஸஸ் ஃபார்முலாவும் ரொம்ப எளிமையானதாதான் எப்பவும் இருக்கும். அதனால, ரொம்ப எளிமையான விஷயங்கள் மேல கவனம் செலுத்தி, நாம் எந்த இடத்தில் எப்போது தவறு செய்திருக்கிறோம் என்பதை அறிந்து, அதைத் தவிர்த்து, வெற்றி பெறுவதற்கான வழிகளை அமைத்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவது என்பதைக் கண்டறிந்து, நமக்கான படிநிலைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் வேண்டும்.
"உங்க குருகிட்ட அடிக்கடி பேசுங்க"
நீங்கள் வாழ்க்கையில் தடுமாறும்போது, வழிகாட்ட உங்களுக்கென்று எப்போதும் உறுதுணையாய் இருக்கும் உங்கள் வழிகாட்டியிடம் உரையாடுங்கள். உங்கள் தோல்விக்கான பதில் கிடைக்கும். அவர்கள் உங்கள் வெற்றிக்குப் பரிந்துரைக்கும் செயல்களைக் கடைப்பிடியுங்கள்.
"நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கருத்துக்களைக் கேளுங்கள்"
நம்மைக் காட்டிலும் நம்மை நன்கு அறிந்தவர்கள் நமது நண்பர்களும், பெற்றோர்களுமே. நாம் எதை எப்படிச் செய்தால், வாய்க்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்கள். ஆக, அவர்களின் கருத்தையும் கேட்பது சிறந்தது. அது, மேலும் நமது வெற்றிக்கு வித்திடும்.
"உங்களைச் சுற்றி எப்போதும் நல்ல மனிதர்களை வைத்துக்கொள்ளுங்கள்"
சில சமயம் சிலருடைய தீய எண்ணம்கூட உங்களை தோல்வியில் கொண்டுப்போய்ச் சேர்த்துவிடும். அவர்கள் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள். நாம் துவண்டுபோகும் நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் கொடுக்கும் உற்சாகமே நம்மை வழி நடத்திச் செல்லும். எனவே, நமக்கு ஊக்கமளித்து நல்வழிப்படுத்தும் மனிதர்களை நமது சுற்றத்தில் வைத்திருப்பது நல்லது. நமது இலக்கை அடைய இவர்கள் தரும் உற்சாகம், நமக்கான வெற்றியில் பாதியைத் தேடித் தரும்.
தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் கையாண்டால் வெற்றி நிச்சயம்!