Monday, February 13, 2017

குழந்தைகளை செய்தித்தாள் படிக்க வைக்க 6 சுலப வழிகள்!


குழந்தைகளைப் பற்றிய புகார்கள் வீட்டுக்கு வீடு மாறும் என்றாலும் ஒரு புகார் மட்டும் எல்லோர் வீடுகளிலும் இருக்கும். 'எப்போ பார்த்தாலும் டிவியைப் பார்த்துட்டு, அதுவும் கார்ட்டூன் சேனலைப் பார்த்திட்டே இருக்காங்க' என்பதுதான் அது.

அதிக நேரம் தொடர்ச்சியாக டிவி பார்ப்பதனால் கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளும் மனநிலையும் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற பல பெற்றோர்களும் குழந்தைகளை பாடப் புத்தகம் அல்லாத புத்தகங்கள் படிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொண்டு, தோல்வி கண்டிருப்பார்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை, குழந்தைகளிடம் உருவாக்க காலை எழுந்ததும் செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை உருவாக்கலாம். 'அதையும் முயற்சி செய்து பார்த்துவிட்டோம்' என உதட்டைப் பிதுக்கும் பெற்றோர்களுக்கு வழிகாட்டும் 6 சுலபமான வழிகள் இதோ:

கிரீடம்

1. செய்திகளை ஏந்தி வரும் கப்பல்: செய்தித்தாளைக் கிழிக்காமல் கப்பல் அல்லது கிரீடம் என... என்னென்ன உருவங்கள் தயாரிக்க முடியுமோ அவற்றைச் செய்யுங்கள். அதை உங்களின் பிள்ளை கண் விழிக்கும்போது, அவர்கள் எதிரில் இருப்பதுபோல வைத்துவிடுங்கள். அவர்கள் அதைப் பார்த்ததும் ஆவலோடு எடுத்துப் பார்ப்பார்கள். பின், இதை எப்படிச் செய்தீர்கள் எனக் கேட்பார்கள். அப்போது, 'அதில் உள்ள செய்திகளைப் படித்துவிட்டு வா கற்றுக்கொடுக்கிறேன்' என்று சொல்லுங்கள். அவர்கள் படித்துவிட்டு, கேட்பார்கள். அப்போது எப்படிச் செய்வது எனக் கற்றுக்கொடுங்கள். இதைப் போல தினந்தோறும் செய்யும்போது, நாளைக்கு என்ன உருவம் தன்னை எழுப்பப் போகிறது என்கிற எதிர்ப்பார்ப்போடு உறங்கச் செல்வார்கள். அந்த எதிர்பார்ப்பு செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை நிச்சயம் உருவாக்கும்.   

செய்தித்தாள்

2. செய்திகளை கட் பண்ணுங்க: செய்தித்தாளின் எல்லா செய்திகளும் குழந்தைகள் படிக்கும் விதத்தில் இருக்காது. அவர்கள் அவசியம் படிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கும் செய்திகளை நறுக்கி எடுங்கள். காலையில் டீ கொடுக்கும்போது, டம்பளரின் அடியில், குளிக்கச் செல்லும்போது டவலில் செல்லோ டேப்பால் ஒட்டியும் டிபன் சாப்பிடும்போது தட்டில் விளிம்பில்... என காலை வேளையில் குழந்தைப் பயன்படுத்தும் பொருட்களில் அவற்றை இணைத்து வையுங்கள். இதைத் தொடர்ந்து செய்யும்போது, நிச்சயம் அந்த துண்டுச் சீட்டுகள் வழியே செய்தித்தாளைச் சென்றடைவார்கள்.

செய்தித்தாள்

3. டோரா சொல்லும் செய்திகள்: முந்தைய வழியைப் போலவே இது. குழந்தைகளுக்கான செய்தியைச் சுற்றி, அவர்களுக்குப் பிடித்தமான உருவத்தை, உதாராணமாக டோரா பிடிக்கும் எனில் டோராவின் படத்தை அவுட் லைனாக வரைந்து விடுங்கள். டோராவைப் பார்க்கும் ஆவலில் அதனுள் இருக்கும் செய்தியைப் படிக்க ஆரம்பிப்பார்கள். நாட்கள் செல்லச் செல்ல, மற்ற செய்திகளையும் படிக்க விருப்பம் கொள்வார்கள்.

கரும்பலகை

4. மீதி செய்தியைத் தேடிச் செல்லுதல்: அநேகமாக பலரின் வீடுகளில் கரும்பலகை இருக்கிறது. இல்லையென்றாலும் சுவரின் ஏதேனும் ஓர் இடத்தில் கறுப்பு வண்ணம் தீட்டி வைத்திருப்பர். அதில், காலையில் நீங்கள் படித்த செய்தியின் ஒரு பகுதியை எழுதுங்கள். அதாவது, அந்தப் பகுதி முழுமையடையாமல் ஒரு சஸ்பென்ஸோடு இருக்க வேண்டும். அது என்னவென்று தேடி, செய்தித்தாளை ஆவலோடு படிக்கும் விதத்தில் எழுதி வைக்கலாம். செய்தித் தேடும் பழக்கம் செய்தித்தாளைத் தொடர்ந்து வாசிக்கவும் வைக்கும்.

5. வட்டமிட்டு பரிசு பெறு: நீங்கள் காலையில் எழுந்து செய்தித்தாளைப் படிக்கும்போது அதில் உள்ள சொற்களைத் தனியே குறித்துக்கொள்ளுங்கள். அந்தச் சொற்கள் உள்ள பகுதி, குழந்தைகள் படிக்க வேண்டிய பகுதியாக இருக்கட்டும். குழந்தைகள் எழுந்ததும் அந்தச் சொற்கள் ஒவ்வொன்றாகச் சொல்லி, செய்தித்தாளில் எங்கிருக்கிறது எனக் கண்டுபிடிக்கச் சொல்லுங்கள். சொற்களைத் தேடும்போது, அந்தச் செய்தியையும் படிப்பார்கள். சரியாக கண்டுபிடித்ததும் பாராட்டி, சின்னதாக பரிசு ஒன்றையும் கொடுங்கள். இது நாள்தோறும் தொடர்ந்தால், நீங்கள் சொற்களைச் சொல்லும் முன்பே செய்திகளைப் படித்து தயாராக இருப்பார்கள்.

book reading

6. படித்துக்காட்டும் பழக்கம்: 'அம்மாவுக்கு நேரமே இல்லை. நியூஸ் பேப்பரைக் கொஞ்சம் படித்துக்காட்டு' எனப் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, தம்பி, தங்கை இவர்களில் யாருக்கேனும் ஒருவருக்கு தினமும் செய்தித்தாளைப் படித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள். அது நாளடைவில், யாருக்கும் படித்துச் சொல்ல வேண்டியதில்லை என்றாலும் தனக்காக செய்திகளைத் தேடிச் சென்று படிப்பர்.

இந்த வழிகளைச் செயல்படுத்தும்போது, செய்தித்தாள் கிழிக்கவோ, கோடுகள் இட்டு சேதமாகவோ செய்யலாம். இவையெல்லாம் குழந்தைகள் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வரைதான். அதுவரை இரண்டு செய்தித்தாளாக வாங்கலாம். குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புப் பழக்கம் புதிய உலகைத் திறக்கும்.