கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் பங்கேற்கும் கூட்டங்களில், மாணவர் சந்திப்புகளில் சில சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லி கூட்டத்தை திகைப்பில் ஆழ்த்துவார். அப்படிப்பட்ட ஒரு கதையைத்தான் சுந்தர் பிச்சை சமீபத்தில் தான் படித்த கல்லூரியில் (ஐ.ஐ.டி. கான்பூர்) சொன்னார். அந்த கதை உலக அளவில் வைரலாக பரவி வருகிறது.
கரப்பான்பூச்சி ஒன்றை மையமாக கொண்ட இந்த கதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றி குறித்த ஒரு தெளிவை உருவாக்கும் என்பது உண்மை. அது மட்டுமின்றி இப்போது தமிழகம் இருக்கும் சூழலில் இந்த கதை தமிழக ஆளுநருக்கும் பொருந்துப்போகிறது என்பது தான் ஆச்சர்யம்.
சுந்தர்பிச்சை தன் கதையை இப்படித்தான் துவங்கியுள்ளார். ''ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்தேன். எனக்கு சற்று தள்ளி இருந்த டேபிளில் ஒரு நண்பர்கள் குழு அமர்ந்திருந்தது. அவர்களுக்குள் பேசியபடி உணவருந்திகொண்டிருந்தனர்.
அப்போது எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி பறந்து வந்து ஒரு பெண்ணின் தோள் மீது அமர்ந்தது. உடனே, அந்த பெண்மணி கத்தி கூச்சலிட்டபடி எழுந்தார். அதிர்ச்சியில் உறைந்த முகத்துடணும், நடுங்கும் குரலுடனும் பதறியபடி கைகளை வீசி ஆடியபடி எழுந்து கரப்பான் பூச்சியை தட்டி விட முயற்சி செய்தார். சற்று நேர முயற்சிக்கு பிறகு அதை தட்டி விட்டுவிட்டார்.
ஆனால், அந்த பூச்சி கீழே விழாமல் அவர் பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது போய் அமர்ந்து விட்டது. அந்த பெண்மணி இவரைவிட அதிக குரலில் கத்தியபடி அந்த பூச்சியை விரட்ட முயற்சித்தார். சிறிது நேர முயற்சியில் வெற்றியும் பெற்றார்.
மீண்டும் அந்த பூச்சி பறந்து மற்றொருவர் மீது அமர்ந்து கொண்டது. இந்த முறை அது அமர்ந்த இடம் அந்த ஹோட்டலின் சர்வர் ஒருவரின் தோள்பட்டை. அந்த பெண்களின் செயல்களுக்கு நேர் எதிராக எந்த பதட்டமும் இன்றி அந்த கரப்பான்பூச்சியின் நடமாட்டத்தை கவனித்து சரியான நேரத்தில் அதனை தன் கை விரல்களால் பிடித்து வெளியே எறிந்தார்.
இதனை பார்த்த நான் சிந்திக்க தொடங்கினேன். அந்த பெண்களின் செயல்களுக்கு காரணம் அந்த கரப்பான் பூச்சியா? இல்லை. அந்த பெண்களின் பயந்த சுபாவம் தான், அவர்களை பதட்டப்பட செய்து உள்ளது. அதே நேரம் அந்த சர்வரின் தீர்க்கமான பதட்டமில்லாத சிந்தனையால் அவரால் சரியாக அந்த பூச்சியை பிடிக்க முடிந்தது.
அப்போது தான் எனக்கு புரிய தொடங்கியது. நம்மை வெளியில் நடக்கும் எந்த நிகழ்வும் நம் கட்டுபாட்டில் இருக்கும் வரை நம்மை பாதிக்காது. நம்மால் எந்த சூழலையும் எதிர்கொள்ள முடியும். அதற்கு தேவை மன கட்டுப்பாடு தான். எந்த ஒரு விஷயம் குறித்தும் உடனடியாக முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான் பயன் தரும்" என்றார்
இந்த கதை மூலம் அவர் கூறிய கருத்து எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடி முடிவு எடுப்பதைவிட சிந்தித்து முடிவு எடுப்பது தான் வெற்றிகரமான வாழ்க்கைக்கு சிறந்தது.