Friday, November 7, 2014

உனக்கு எப்படி இந்த நல்ல குணம் வந்தது?

ஓர் இஸ்லாமியத் துறவி இருந்தார். அவர் ஆண்டவனின் பெரும் பக்தர். நாள் ஒன்றுக்கு, ஐந்து முறை தவறாமல் வழிபாடு செய்வார்.

ஒருநாள் அவருக்கு ஏற்பட்ட களைப்பால் தூங்கிவிட்டார். வழிபாட்டு நேரம் வரவே யாரோ அவரைத் தட்டி எழுப்பினார்கள்.

"எழுந்திரு! வழிபாட்டுக்கு நேரமாகிவிட்டது!' என்று நினைவு படுத்தினார்கள்.
துறவி எழுந்து உட்கார்ந்தார். தம்மைத் தட்டி எழுப்பியவருக்கு நன்றி கூறி, "அன்பரே! உங்கள் இந்த உதவிக்கு என்ன கைமாறு செய்தாலும் பற்றாது. என் வழிபாட்டு நேரம் தவறி இருந்தால் என்ன ஆகியிருக்கும், ஆமாம் தங்கள் பெயர் என்ன?' என்று கேட்டார்.

"என் பெயரா? இப்லீஸ்' என்றார் தட்டி எழுப்பியவர்.

"இப்லீஸ் என்றால், சாத்தான்-துர்தேவதை' என்று பொருள்.

துறவிக்கு ஒரே வியப்பாகி விட்டது.

"அட, சாத்தானா நீ? வழிபாடு செய்கிறவர்களைத் தடுப்பதல்லவா உன் வேலை? நற்காரியங்களுக்கு இடையூறு செய்வதும், தீங்கு புரிவதும்தானே உன் தொழில்? அப்படி இருக்கும்பொழுது என்னை வழிபாட்டுக்கு எழுப்பினாலே! உனக்கு எப்படி இந்த நல்ல குணம் வந்தது?' என்று கேட்டார்.
சாத்தான் பதில் சொன்னான்:

"இதிலும் என் குணம் மாறவில்லை. என் குறிக்கோளை நான் மறக்கவில்லை. உங்களை எழுப்பியதனால் எனக்கு நல்ல பயனே! முன்னம் ஒரு தடவை இதேபோலத்தான் தாங்கள் தூங்கி விட்டீர்கள். வழிபாட்டு நேரம் தாண்டி விட்டது. என் மகிழ்ச்சியும் எல்லை தாண்டி விட்டது! நன்றாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நீங்கள் விழித்து எழுந்ததும் மிகவும் வருத்தப்பட்டீர்கள். அழுதீர்கள். புலம்பினீர்கள். தலையில் அடித்துக் கொண்டீர்கள். ஆண்டவனுக்கு என்ன தவறு செய்து விட்டோம் என்று ஒரே நினைவாக இருந்தீர்கள். அதனால் ஆண்டவனுக்கு இன்னம் பிடித்தமானவராக ஆகிவிட்டீர்கள். எனவேதான் நான் மிகுந்த யோசனைக்குப்பின் உங்களை எழுப்பினேன். நீங்கள் தூங்கி, அதனால் வருந்தி, ஆண்டவனின் பிரியத்திற்கு இன்னும் அதிகப் பாத்திரராகி விடக்கூடாது, பாருங்கள்! அதனால் நேரத்திற்கு எழுப்பி உங்களை பிரார்த்தனை புரிய வைத்து விட்டால் ஆண்டவனின் அன்பு அளவுக்கு அதிகமாகிவிடக்கூடாதல்லவா?' என்றது அந்த பிசாசு.