Saturday, November 29, 2014

குழந்தைகள் பாதுகாப்பு!

குட்டிக் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்தாலும், நாம் அஜாக்கிரதையாக இருக்கும் சிறு விஷயங்கள்கூட, அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அவற்றில் முக்கிய ஐந்து 'கூடாது'கள் இங்கே!

1. அயர்ன் பாக்ஸ் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்காதீர்கள். மேலும், அயர்ன் செய்யும்போது குழந்தைகள் நெருங்காதவாறு பார்த்துக்கொள்வதுடன், அயர்ன் பாக்ஸை ஸ்விட்ச் ஆஃப் செய்தாலும், அதிலிருக்கும் சூடு வெளியேறும்வரை குழந்தைகள் தொட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இதே போல சூடான குக்கரை அவசரத்தில் நீங்கள் இறக்கி வைக்க, அதை ஓடி வந்து தொடுவது, குட்டி சேர் என்று நினைத்து குழந்தைகள் உட்கார்ந்து அவதிக்குள்ளான சம்பவங்கள் எல்லாம் இங்கே நடந்ததுண்டு... கவனம்.

2. ஆணி, பொட்டு, மாத்திரை, பட்டன் போன்ற சின்னச் சின்னப் பொருட்களை, குழந்தைகள் எடுக்கும் இடத்தில் வைக்காதீர்கள். அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால், விபரீதம்தான். அதிக பட்டன், வேலைப்பாடுகள் நிறைந்த டிரெஸ்களை குழந்தைகளுக்கு அணிவிப்பதைத் தவிர்ப்பதும் நல்லது.

3. இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் சமயத்தில், குழந்தை சைலன்ஸரில் கை வைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு. எனவே, இத்தகைய கொடும் சூழல் ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், வீடுகளில் மட்டுமல்லாமல், வெளியிடங்களுக்குச் செல்லும்போது எந்த பைக்கின் சைலன்ஸர் ஏரியாவையும் தொடக்கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

4. வாஷிங்மெஷின், இ்ண்டக்‌ஷன் அடுப்பு என எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும்போது சைல்ட் லாக் வசதியுடன் வாங்குங்கள். ஃப்ரிட்ஜை பூட்டி வையுங்கள். குழந்தைகள் ஃப்ரிட்ஜை திறந்து விளையாடும்போது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. மேலும் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பது நல்லது. ஸ்விட்ச் பாக்ஸ், ஏ.சி பாயின்ட் இருக்கும் இடங்களின் அருகே கட்டில், நாற்காலி என எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், சுட்டி அதன் மேல் ஏறி சுவிட்சில் கை வைக்க வாய்ப்புள்ளது. முடிந்த வரை எலெக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தியவுடன் பிளக்கை எடுத்துவிடவும்.

5. பாத்ரூமை மூடியே வைத்திருங்கள். பாத்ரூமில் வாளி, 'டப்'களில் தண்ணீர் பிடித்து வைக்காதீர்கள். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் விளையாடச் சென்று, அதற்குள் விழுந்துவிடலாம். பாத்ரூமை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ஆசிட்கள், துவைக்கும், குளிக்கும் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை கீழே வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

னைத்து எலெக்ட்ரானிக் பொருட்களையும் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து வயது வந்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதும் அவசியம்.