Saturday, November 1, 2014

பெண் கொடுக்க பலரும் தயங்குகின்றனர்.

கல்யாண புரோக்கர்கள் சிந்திக்கலாமே!


என் நண்பரின் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக நானும், என் நண்பரும் ஒரு கல்யாண புரோக்கர் அலுவலகத்திற்கு சென்றோம். புரோக்கர் இல்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டோம்.


அவசரம் என்றோம். அதற்கு அவர், 'நான் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் இருக்கிறேன். அங்கு வாருங்கள்...' என்றார். நானும், நண்பரும் அவர் இருக்கும் ரத்தப் பரிசோதனை நிலையத்திற்கு சென்றோம்.


இரண்டு இளைஞர்களுடன், அவர்களின் மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் வாங்கியபடி வெளியே வந்தார் புரோக்கர்.


'இங்கு என்ன வேலை?' என்றோம்.


'டாஸ்மாக் பணியாளர், நடத்துனர், டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோருக்கு பெண் கொடுக்க பலரும் தயங்குகின்றனர். காரணம், அவர்களின் உடல்நலன் மீது சந்தேகப்படுகின்றர்...' என்றார்.


மேலும், 'எயிட்ஸ் உள்ளிட்ட பல டெஸ்ட்டுகளுக்கான ரிப்போர்ட்டை நானே நேரில் சென்று வாங்கி, நகல் எடுத்து அவர்களின் ஜாதகத்துடன் இணைத்து, பெண் வீட்டாருக்கு கொடுக்கிறேன்...' என்றார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.


இதை அனைவருக்கும் கட்டாயமாக்கினால் நன்றாக இருக்குமே என நினைத்தோம். கமிஷனுக்காக புரோக்கர்கள் பொய் சொல்லாமல், மிகையாக சொல்லாமல் உண்மையை சொல்ல வேண்டும் என்பதை அவரின் பேச்சு எங்களுக்கு உணர்த்தியது.


கல்யாண புரோக்கர்களே... இந்த மருத்துவ பரிசோதனை விஷயத்திலும் உங்கள் பார்வை திரும்பினால் வாழ்வு சிறக்குமே வருங்கால புது ஜோடிகளுக்கு!

 

 

(Dinamalar, 02/11/2014)