Wednesday, October 16, 2013

கொஞ்சமா குடிச்சா தப்பில்லையாமே

6,840 கடைகள், 30,000 ஊழியர்கள், 22,000 கோடி ரூபாய் வருமானம்... டாலர் மதிப்பு சரிந்து நாடே பொருளாதாரத் தள்ளாட்டத்தில் இருந்தாலும்,  வருடத்துக்கு 20 சதவிகித வியாபார வளர்ச்சியுடன் கொடிகட்டிப் பறக்கிறது தமிழக அரசு நடத்தும் சாராய வணிகம்! குடிப்பவர்களில் 40-50 சதவிகித நபர்களை கிட்டத்தட்ட நிரந்தரக் குடி அடிமைகளாக மாற்றிவரும், இந்தப் புனிதத் தொழில் மூலம் வரும் வருமானத்தில்தான், அரசு பல நலத்திட்டங்களை நடத்துவதாகச் சொல்லும் அவலம், உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை!
'கொஞ்சமாக் குடிச்சா தப்பில்லையாமே', 'இதயத்துக்கு நல்லதாமே', 'ஹார்ட் அட்டாக் வராதாமே', 'கொஞ்சமா ஆல்கஹால் உள்ள பீர், ஒயின் சாப்பிடலாமே...' என சப்பைக்கட்டு கட்டி ஆல்கஹால் சுவைக்கும் சகோதர - சகோதரிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி... ஆல்கஹால் விகிதம் 40 சதவிகிதத்துக்கு அதிகமான விஸ்கி, பிராந்தி போன்ற ஹாட் டிரிங்க்ஸ் என்றால் 'பெக்' கணக்கு, 68 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள பீர்/ஒயின் என்றால் 'மக்' கணக்கு... இதைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வயிற்றுக்குள் செல்லும் ஆல்கஹாலுக்கும் அது நடத்தும் அட்டூழியத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!
'திராட்சை ஒயினில் நிறைய பாலிஃபீனால் இருக்கிறது... அது இதயத்துக்கு நல்லதாமே' என மெத்தப் படித்தவர்கள் ஒரு வாதத்தை முன்வைப்பார்கள். உணவியல் வல்லுநர்கள் சிலர்கூட சந்தோஷமாக இதை ஆதரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அவர்களுக்கு எல்லாம் அதே பாலிஃபீனால்கள் பச்சைத் தேயிலையிலிருந்து கத்திரிக்காய் வரை எத்தனையோ பொருட்களில் இருக்கிறது என்பதும் தெரியும்தானே? அதற்கெல்லாம் வக்காலத்து வாங்காத அறிவுஜீவிகள் ஒயின் மீது காட்டும் கரிசனத்துக்கு, இதயம் மீதான அக்கறையா காரணம்?
'ஒயினை உணவாக்க வேண்டும். சரவண பவன் முதல் கையேந்தி பவன் வரை அனைத்து உணவகங்களிலும் அதை வழங்க அனுமதி வேண்டும்' என பெரும் வணிகக் கூட்டம் அரசுக்குத் தொடர்ந்து அறிவுரை சொல்லிவருகிறது. பெண்களும் மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்தால், குடும்பத்தோடு குடிக்கச்செய்து, மாதாந்திர மளிகைக் கடை பட்டியலில் ஒயினையும் இடம்பெறச் செய்யலாம் என்ற சந்தை உத்தியில் பிரபல திரைப்படங்களால் இந்த நிகழ்வு தொடர்ந்து ஊக்குவிக்கப்பட, நகர்ப்புற இளம்பெண்களில் குடிப்பழக்கம் கணிசமாகப் பெருகிவருகிறது. ஆணைவிட பெண்ணுக்கு மதுவினால் வரும் நோய்க் கூட்டம் 100 சதவிகிதம் அதிகம்!
இப்போதைக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ஈரல் சிர்ரோசிஸ் நோயாளிகள் இந்தியாவில் இருப்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது. பெரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள், ஈரல் துறைப் பிரிவுகளை உருவாக்கி போஷாக்காகப் பராமரித்துவருகின்றன. ஏனெனில், ஈரல் பாதிப்படைந்தவர்களில் சரிபாதி பேர் ஈரல் புற்றுநோய்க்கும் ஆளாவார்களாம். 'குடிப்பதால் புற்று, சிர்ரோசிஸ் எல்லாம் எனக்கு வரலை. லேசா ஈரலில் கொழுப்பு படிஞ்சிருக்கு. அவ்வளவுதான்' என்பவர்களுக்கும் ஒரு செய்தி. தொடர்ச்சியாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், சிர்ரோசிஸ் நோய்க்கு 'காத்திருப்பு நிலை'யில் உள்ளவர்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் மது அருந்துவதால், உங்கள் பிள்ளை ஈரல் வியாதியாலோ அல்லது வேறு புற்றுநோய்க்கோ அல்லது சர்க்கரை முதலான பல வியாதிகளுக்கோ ஆளாகலாம் என்கிறது எப்பிஜெனிடிக்ஸ் துறையின் ஆய்வுகள்.
மது போதையில் ஒரு நபர் தள்ளாடுவது போல, அந்த நபரின் மரபணுக்களும் தள்ளாடி, மரபணுத் தகவல்களை மிகத் துல்லியமாகப் பிரதியெடுக்கவேண்டிய பணியை மறந்துவிடுகிறது. தன் செல்களைப் படியெடுக்கும்போது, சந்திப்பிழை, கமா, ஃபுல்ஸ்டாப் எல்லாம் வைக்க மறந்ததில் 'DNA demethylation' நடந்து, அது குடித்தவருக்கோ, குடித்தவரின் பிள்ளைகளுக்கோ சிர்ரோசிஸ் முதல் பல வியாதிகளை வரவழைக்கக்கூடும் என்கிறது எப்பிஜெனிடிக்ஸ் துறை.
'சங்க காலத்தில் கள் உண்ணலையா? இப்போது மட்டும் ஏன் இத்தனை அலறல் அறிவுரை?' என்று கேட்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். கள் வேறு; எத்தனால் கலந்து விற்கும் சாராயம் வேறு. கள்ளைவிட நவீன சாராயத்தில் 10 மடங்கு எத்தனால் அதிகம். 'அப்படியென்றால் அந்தக்கால கள் குடிக்கலாமே?' என்றும் அவசரப்பட வேண்டாம். சங்க காலத்தில் இளவட்டக் கல் தூக்கி, காதலித்து, குமரியிலிருந்து மதுரைக்கு குதிரையில் பயணிக்க உடல் வலிமை தேவையாக இருந்தது. இப்போது யாரோ எழுதிய எஸ்.எம்.எஸ்-ஐ அனுப்பி காதலிக்கும், 'பஸ்ல படுத்துட்டுப் போக ஸ்லீப்பர் சீட் இருக்கா?' என சொகுசு தேடும் நோஞ்சான்களுக்கு கள் அவசியமே இல்லை.
இன்றளவில், ஈரல் மாற்றுசிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய். பழுதடைந்த ஈரல் பராமரிப்பு செலவு சிலபல ஆயிரங்கள். 'டாக்டர்... இந்த வியாதி குடிச்சதினால் வந்துச்சுனு கேஸ் சீட்ல எழுதிடாதீங்க. இன்சூரன்ஸ் கிடைக்காது' என ஈரல் மருத்துவரிடம் கெஞ்சும் கூட்டம் இங்கே இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவுதான். குடியில் ஈரல் அழிந்து மரணத்தருவாயில் பெரிய மருத்துவமனைக்கு நுழையவே முடியாத பாமர, ஏழை மக்கள் கூட்டம்தான் 98 சதவிகிதம்.
வருடத்துக்கு 22,000 கோடி வரு மானம் பெற்றுத்தர அரசாங்கம், பொருளாதார நிபுணர்களைத்தான் திறம்படச் செயலாற்றப் பணிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை அல்ல!

Click below to read Liquor and Sexual Disability