Saturday, August 4, 2012

இ-கோல்டு: ஒரே நேரத்தில் டெலிவரி கேட்டால்..?

ங்கம் வாங்குவதில் நம்மவர்களுக்கு அலாதி ஆனந்தம் உண்டு. நகைக் கடைக்குச் சென்று தங்கத்தை ஆபரணமாக வாங்கியது அந்தக் காலம். இப்போது கோல்டு இ.டி.எஃப்., இ-கோல்டு என நவீன முதலீட்டுக் கருவிகள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது இந்தக் காலம். இதில் இ-கோல்டில் முதலீடு செய்ய வழி? தங்கமாகவே வாங்கிக்கொள்ளலாமா? என பல சந்தேகங்கள் இருக்கவே செய்கிறது.  

திருட முடியாத தங்கம்!

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் முதலீட்டுத் திட்டம்தான் இ-கோல்டு. பங்குகளை வாங்குகிற மாதிரி இந்த இ-கோல்டையும் வாங்கலாம். இ-கோல்டை யூனிட் முறையில் வாங்கலாம். ஒரு யூனிட் இ-கோல்டு என்பது ஒரு கிராம் தங்கத்திற்கு நிகரானது. ஒரு யூனிட் தங்கத்தைகூட வாங்கலாம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரங்களுக்கு ஏற்ப, இ-கோல்டு தங்கத்தின் விலை மாறும். நீங்கள் வாங்கிய யூனிட்களின் விலை உயரும்போது அல்லது உங்களின் தேவையைப் பொறுத்து விற்று பணமாக்கி, நமக்குப் பிடித்த மாதிரி நகைகளாகவோ அல்லது பார்களாகவோ வாங்கிக்கொள்ளலாம். இ-கோல்டு பேப்பர் வடிவில் இருப்பதால் திருடு போய்விடுமோ என அஞ்சத் தேவையில்லை.

என்னென்ன தேவை?

இ-கோல்டு வாங்குவதற்கு தனியாக டீமேட் கணக்கு தேவை. பங்குகள் வாங்குவதற்கு டீமேட் கணக்கு இருந்தாலும், இ-கோல்டு வாங்குவதற்கு என்று தனியாக டீமேட் கணக்கு வேண்டும். மேலும், தனியாக டிரேடிங் அக்கவுன்டும் தேவை. இந்த இரண்டும் இருந்தால் நீங்கள் இ-கோல்டு வாங்கலாம். ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு யூனிட் முதல் அதிகபட்சமாக 10,000 யூனிட்கள் வரை வாங்கலாம். இந்த யூனிட்களை விற்று காசாகவும் ஆக்கிக்கொள்ளலாம். அல்லது 99.95% சுத்த தங்கமாகவும் டெலிவரி பெற்றுக்கொள்ளலாம்.    

டெலிவரி கட்டாயமா?

நீங்கள் வாங்கும் இ-கோல்டு யூனிட்களை சுத்தத் தங்கமாக டெலிவரி எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தங்கத்தை டெலிவரியாக எடுத்தாக வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை. தற்போது மும்பை, டெல்லி, அகமதாபாத், சென்னை, கொச்சின், பெங்களூரு உள்ளிட்ட 13 இடங்களில் டெலிவரி சென்டர்கள் இருக்கிறது. பராமரிப்புக் கட்டணம் மற்றும் பரிவர்த்தனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஒரு கிராம் தங்க காயின் அல்லது கட்டியாக டெலிவரி எடுக்கும்போது 100 ரூபாயும், எட்டு மற்றும் பத்து கிராம் டெலிவரி எடுக்கும்போது 400 ரூபாயும் கட்ட வேண்டும். ஆனால் ஒரு கிலோ டெலிவரி எடுக்கும்போது எந்தவித கட்டணமும் கட்ட வேண்டியதில்லை.

பாசிட்டிவ் பாயின்ட்!

குறைந்த பராமரிப்பு கட்டணத்தில் சுலபமான வழியில் இ-கோல்டு வாங்க முடியும்.

தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்திற்குத் தகுந்த யூனிட்கள் கிடைக்கும்.

உங்களுக்குத் தேவையான நேரத்தில் தங்கமாக டெலிவரி எடுத்துக்கொள்ளும் வசதி இதில் உண்டு.

நெகட்டிவ் பாயின்ட்!  

டெலிவரி மையங்கள் குறைவாக இருப்பதால் தங்கமாக டெலிவரி எடுப்பதில் சிக்கல் இருக்கிறது.

யூனிட்களை விற்று பணமாகப் பெற்று அதை நகைக் கடையில் கொடுத்து நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரத்திற்குச் செலவிட வேண்டியிருக்கும்.

 நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் எவ்வளவு தங்கத்தை வாங்கி வைத்திருக்கிறது என்பது என்.எஸ்.டி.எல். மற்றும் சி.டி.எஸ்.எல். ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும்தான் தெரியும். இதுபற்றிய விவரங்கள் இன்னும் முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.


ஒரேநேரத்தில் டெலிவரி கேட்டால்?

இ-கோல்டு மூலம் வாங்கிய யூனிட்களை ஒரேநாளில் டெலிவரி எடுக்க அத்தனை முதலீட்டாளர்களும் முன்வந்தால் உங்களால் டெலிவரி தரமுடியுமா? என நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் தமிழ்நாடு பிஸினஸ் டெவலப்மென்ட் மேனேஜர் வி.ஜெகதீசனிடம் கேட்டோம்.

''கடந்த ஜூலை 31-ம் தேதி அன்று மட்டும் 6,97,297 கிராம் இ-கோல்டு நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் ஆனது. இந்த வால்யூம் அளவுக்கான இ-கோல்டு யூனிட்களை ஒரேநாளில் டெலிவரி கேட்டாலும் எங்களால் கொடுக்க முடியும். டெலிவரி வேண்டும் என விண்ணப்பித்த ஏழாவது நாள் தங்கமாகத் தந்துவிடுவோம். இதுவரை அதிகபட்சமாக ஒரேநாளில் 200 கிராம் தங்கமும், 90 கிலோ வெள்ளியும் டெலிவரி கொடுத்துள்ளோம். டெலிவரி கேட்பவர்கள் பெரும்பாலும் தங்க காயின்களாகவே கேட்கிறார்கள். நாங்கள் தங்க காயின்களாகவும், பார்களாகவும் முதலீட்டாளர்கள் கேட்கிறபடி தருகிறோம்'' என்றார்.

தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறுவதால் இதுபோன்ற சேமிப்பு திட்டங்கள் மூலம் வாங்கி சேமிப்பது நல்லது!