Wednesday, August 15, 2012

அனுபவங்கள் அனுபவங்கள்

பொட்டு... குட்டு!

சமீபத்தில் வெளியூர் கோயில்களுக்குச் சென்றிருந்தோம். சென்ற இடங்களில் ஹோட்டல்களில் ரூம் எடுத்துத் தங்கி, ஆலய தரிசனம் முடித்து வந்தோம். வந்த பின்பு எனக்கு நெற்றியில் ஒரே அரிப்பு. டாக்டரிடம் செல்ல, 'அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது... பொட்டு வைப்பதால் கூட இது ஏற்பட்டிருக்கலாம்' என்று சொன்னார். அப்போதுதான் நினைவுக்கு வந்தது... தங்கியிருந்த ஹோட்டல் பாத்ரூம் ஒன்றில் பல்பு வெளிச்சம் குறைவாக இருந்ததால், நெற்றியில் இருந்த பொட்டை பாத்ரூம் கண்ணாடியில் ஒட்டிவிட்டு, குளித்துத் திரும்பும்போது கண்ணாடியில் ஏற்கெனவே ஒட்டியிருந்த வேறு யாருடைய பொட்டையோ மாற்றி ஒற்றிக்கொண்டது.

'நீங்க பொட்டை மாத்தி ஒட்டிக்கிட்டது மட்டும் தப்பில்ல... ஒரே பொட்டை பசை போகிற வரை இப்படி கண்ணாடி, கதவுனு பல இடங்களில் ஒட்டி, மறுபடியும் நெற்றியில் ஒட்டிக்கொள்வதும் மிகத் தவறான பழக்கம். தரமான பொட்டானாலும், அதையும் ஒருமுறைதான் உபயோகிக்கணும்' என்று விளக்கி அனுப்பினார் டாக்டர்.

பொட்டு பழக்கம் கற்றுக்கொள்வோம்!



மதிப்பெண்களை பறிக்கும் மொபைல்!

பள்ளியில் படிக்கும் என் மகள், டேபிள் டென்னிஸில் முதல் பரிசு வாங்கியதால், அவள் அப்பா அவளுக்கு ஒரு புது மொபைல் வாங்கிக் கொடுத்தார். சில மாதங்களில் அவள் பள்ளியில் இருந்து எங்களை வரச்சொல்லி அழைப்பு வந்தது. எங்களைப் போலவே இவள் தோழிகளின் பெற்றோர்கள் சிலரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். 'நம்ம பசங்க எல்லாருமே நல்லா படிக்கிறவங்களாச்சே... எதுக்கு வரச் சொல்லி இருக்காங்க..?' என்று குழம்பியவாறே பிரின்ஸிபால் அறைக்குள் நுழைய, அவர் எங்கள் பிள்ளைகளின் தேர்வுத் தாள்களைக் கைகளில் கொடுத்தார். படித்தால் b4 (before), gud (good), tanq (thank you), ws(was)- இப்படி தேர்வுத் தாள்களிலும் 'எஸ்எம்எஸ்' மொழி அவர்களை அறியாமல் வெளிப்பட்டிருந்தது. 'தயவுசெஞ்சு ஸ்கூல் முடிக்கற வரையாவது அவங்களுக்கு மொபைல் வேண்டாம்' என்று கோபம், வருத்தத்துடன் கூறி அனுப்பினார் பிரின்ஸிபால்!

நாங்கள் கைப்பற்றிவிட்டோம் பள்ளி படிக்கும் எங்கள் பிள்ளைகளிடம் இருந்து மொபைலை. நீங்கள்..?!



பான் கார்டுக்கு புரோக்கர் எதற்கு..?!

இன்ஜினீயரிங் படிக்கும் தன் மகனுக்கு பான் கார்டு வாங்குவதற்காக, இடைத்தரகரை அணுகினாள் என் தோழி. பையனின் கையெழுத்தும், முந்நூறு ரூபாய் பணமும் வாங்கிக்கொண்டு போனார் அவர். ஒரு மாதத்தில் பான் கார்டு வந்தது. அதற்குள் பையன் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாக, அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் வந்துவிட்டது. பான் கார்டை சப்மிட் பண்ணும் போதுதான் தெரிந்தது, மகனின் பெயரில் ஸ்பெல்லிங் தவறாக இருந்தது. 'திருத்தி வாருங்கள்... அடுத்த பேட்சில் பார்க்கலாம்...' என்று கம்பெனி திருப்பி அனுப்பிவிட, பான் சென்டரில் இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டபோது, விண்ணப்பத்தில் உள்ளபடிதான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார்கள். அப்போதுதான் இடைத்தரகர் விண்ணப்பத்தில் தவறாக ஸ்பெல்லிங் எழுதியிருந்தது தெரியவந்தது.

மாணவர்களோ, மற்றவர்களோ இடைத்தரகர்களைத் தவிர்த்து பான் கார்ட் சென்டருக்கு நேரடியாகச் சென்றால், இது போன்ற தேவையில்லாத சங்கடங்களையும், பணத்தையும், நேரத்தையும் மிச்சம் பண்ணலாமே!



சூப்பர் செக்கிங்!

என் தோழியுடன் அவளுடைய வீட்டில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அலுவலகம் சென்றிருந்த தோழியின் கணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் மெக்கானிக் மதியம் வருவார் என்றும், அவரிடம் பழுதடைந்த தனது வண்டியை கொடுத்தனுப்புமாறும் கூறினார். உடனே மெக்கானிக்கின் செல்போன் எண்ணைக் கேட்டுக் குறித்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் ஒரு மெக்கானிக் வர, அவரிடம் செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கிக்கொண்டு, உள்ளே சென்று தனது கணவர் கொடுத்த எண்ணுடன் சரிபார்த்தது மட்டுமல்லாமல், ஒரு மிஸ்டு கால் கொடுத்து உறுதிப்படுத்திய பின்னரே, வண்டியைக் கொடுத்து அனுப்பினாள்.

இப்போது இருக்கும் தில்லாலங்கடி உலகத்தில், இப்படி இரு மடங்கு உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன்!