Wednesday, August 1, 2012

ஐயையோ ரிசல்ட்..!


பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!

பின்ன என்ன தலைவா.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.

பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும். எட்டாவது நிமிஷம் டீ வரும்.

அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.

எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..

காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் ஜூன் மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?

அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

கடவுளே.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.. உன் உண்டியல்ல 10 ரூபா போடறேன்.

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. ஐயையோ.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு மகேஷ் மட்டுமாவது பெயில் ஆயிடணும்.. அவன் பிட் அடிச்சிருப்பானோ.. கடவுளே.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க மகேஷையும் பெயில் ஆக்கிடு.. 20 ரூபா டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, கோவில், சர்ச், மசூதி எதையும் விடலை.. என் ரிசல்ட்டுக்காக எல்லா சாமிகிட்டயும் சொல்லி வெச்சாச்சு.. என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. அம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. அப்பா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. கடவுளே.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. உண்டியல் அக்கவுண்ட்டில் இன்னும் ஒரு 5 ரூபாய் கூடியது.

இப்ப மாதிரி ரிசல்ட்டை பிரவுசிங் சென்டர்ல எல்லாம் போய் பாக்க முடியாது.. பேப்பர் தான்.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு மகேஷ் வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. மகேஷை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!

மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க மகேஷ் வீட்டு கிட்ட போனேன்.  " பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா மகேஷ் நம்பரை பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.

அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத அப்பாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!