Monday, November 28, 2011

பழமொழியும் கிழமொழியும்!

ங்கள் ஊருக்கு வெளியே ஆற்றங்கரையை யட்டி ஒரு நூலகம் உண்டு. அதன் அருகில் பெரிய அரசமரமும், பிள்ளையாரும் உண்டு. நூலகத்தில் படித்த களைப்பு தீர, அரசமரப் பிள்ளையார் கோயில் மேடையில், சந்தோஷமாகப் படுத்துக்கொண்டே, ஊர்வம்புகள் மற்றும் உலகச் செய்திகள் எனப் பேச்சு துவங்கும். வழக்கமாக அங்கே ஒரு பெரியவர், விடுகதை போட்டு, சுற்றி இருப்போரை விடை கண்டுபிடிக்கச் சொல்வதுண்டு. அன்றைக்கு அவரிடம் சிக்கியது, நாங்கள்!

'காலேஜ்ல பெரிய படிப்பு படிக்கிற பிள்ளைக தானே நீங்க' என்று கேட்டுவிட்டு, என் நண்பனிடம், 'எங்கே நீ சொல்லுப்பா... காணப் பூ பூக்கும், காணாம காய் காய்க்கும், அது என்ன செடி?' என்றார்.

நாங்கள் திடுக்கிட்டோம். நண்பனோ, 'அது எங்க சிலபஸ்ல கிடையாது தாத்தா' என்றான்.

பெரியவரும் விடாமல், 'சிலபஸ்ல இல்லைன்னா என்ன, நீங்கதான் பல பஸ்ல போறீங்களே?' என்று சொல்ல, நண்பன் ஆடிப்போனான். அதற்குள்,

கால்மேல் கால் போட்டு ஹாயாகப் படுத்திருந்த கிழவர் ஒருவர், 'அதிகப் படிச்ச மூஞ்சூறு கழனிப் பானைல விழுந்துச்சாம்' என்றார், சேட்டையாகச் சிரித்தபடி. 'அப்படிப் போடுறா என் சேடப்பட்டி சிங்கக் குட்டி' என்று அந்தக் கிழவரை இந்தக் கிழவர் பாராட்டிவிட்டு, 'தம்பிகளா! இந்தப் பழமொழிக்காவது அர்த்தம் தெரியுமா?' என்றார் குறும்பாக.


'இங்க வந்ததே தவறோ?' என்று உள்ளுக்குள் புலம்பினோம். அந்தக் கோயிலுக்கு முன்னால் எள்ளுருண்டை, எலந்தவடை, கைச்சுத்து முறுக்கு என்று விற்றுக்கொண்டிருந்த கிழவி, 'பேராண்டிகளா! ஏதோ, ஏழைக்கேத்த எள்ளுருண்டை, குருவிக்கேத்த ராமேஸ்வரமுன்னு போகவேண்டியதுதானே...' என்று தன் பங்குக்குப் பழமொழியில் சிலம்பம் ஆடியது. அப்போது தெய்வம் போல வந்து சேர்ந்தார் எங்களின் பழைய பள்ளிக்கூட வாத்தியார்.

வந்தவர், எங்க நிலைமையை சட்டுன்னு புரிஞ்சுக்கிட்டார். 'ஏன்டா இப்படி முழிக்கிறீங்க?' என்று எங்க ளிடம் கேட்டுவிட்டு, 'ஐயா, பெரியவரே! உங்க எல்லாத்துக்கும் வணக்கம். காணப் பூ பூத்து, காணாம காய் காய்க்கிறது, கடலை. சரிதானே?' என்று கேட்க, 'ஆமா, அது இந்த விடலைகளுக்குத் தெரியலையே?' என்றார் அந்தக் கிழவர் கிண்டலாக. பிறகு, வாத்தியார் மற்றொரு கிழவர் பக்கம் திரும்பி, 'பெரியவரே! அதிகப் படிச்ச மூஞ்சூறுன்னு ஒரு பழமொழி சொன்னீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்னு உங்க ளுக்குத் தெரியுமா?' என்று கேட்க, 'எனக்கென்ன தெரியும்... ஏதோ எல்லாரும் சொல்றதை நானும் சொன்னேன்' என்று ஜகா வாங்கினார் கிழவர்.

''பழைய காலத்துல மண்பானையில சோறு வடிப்பாங்க. அப்ப சோறோடு இருக்கிற சுடுநீர், கீழே இருக்கிற பானையில வடியும். அந்த வடிச்ச கஞ்சியை கழனிப்பானையில மாட்டுக்கு ஊத்துவாங்க. சில நேரம் வடிக்கிறப்போ, முன்னாடி இருந்த சோறும் கொஞ்சம் கழனிப்பானைக்குப் போயிரும். இதைத்தான், அதிகம் வடிச்ச முன்சோறு கழனிப்பானையில விழுந்துச்சாம்னு சொல்வாங்க. நம்மாளுக அதை அதிகம் படிச்ச மூஞ்சூறுவா ஆக்கிட்டாங்க!'' என்ற வாத்தியார், அடுத்து அந்தக் கிழவி பக்கம் திரும்பினார்.

''பெரியம்மா! ஏழைக்கேத்த எள்ளுருண்டைங்கிறது சரி. அதாவது, ஏழையால எள்ளுருண்டைதான் வாங்கமுடியும். ஆனா, அதென்னவோ சொன்னியே, குருவிக்கேத்த ராமேஸ் வரம்னு... அப்படின்னா என்ன தெரியுமா? ராமபிரான் ஒரு பொருளைக் குறி வைத்து வில்லில் இருந்து சரத்தை (அம்பை) விட்டால், அது ஒருபோதும் தப்பாது. 'குறி வைத்தால் தப்பாது ராம சரம்' என்பதைத்தான் 'குருவிக்கேத்த ராமேஸ்வரம்'னு மாத்திப்புட்டீங்க!'' என்று எங்கள் வாத்தியார் விளக்க, நாங்கள் படபடவென்று கைதட்டினோம்.

'வாத்தியாரா கொக்கா? கத்துக் கொடுக்கிற வாத்தியும்...' என்று பெரிசுகள் அடுத்த பழமொழியைத் தொடங்க, தலைதெறிக்க ஓடினோம்.