Wednesday, November 16, 2011

குளிருக்குக் குடை பிடிக்கலாம்!

டைமழை ஓய்ந்து அடர் குளிர் வெகு விரைவில் அரவணைக்கவிருக்கிறது. கிச்சன் அம்மா, கிண்டர் கார்டன் பாப்பா, டீன்-ஏஜ் பெண்கள், அனைவருக்குமான டயட் என ஒட்டுமொத்த ஃபேமிலி பேக்கேஜ் டிப்ஸ் தருகிறார்கள் நிபுணர்கள்...  

 உணவுப் பழக்கம்: சுகன்யா, டயட்டீஷியன்.

செய்யலாம்:

 குளிருக்கு இதமாக இருக்கும் என்று காபி, டீ போன்ற பானங்களை அருந்தாமல், காய்கறி சூப் குடிப்பது நலம்.

 குளிர் காலத்தில் அதிக தாகம் எடுக்காது என்றாலும், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நன்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை மட்டும் குடியுங்கள்.

 குளிர் காலத்தில் மோர் குடித்தால் சளித்தொல்லை உண்டாகும் என்பது எல்லாம்  கட்டுக்கதை. சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தவிர, மற்றவர்கள் லிட்டர் கணக்கில் மோர் குடிக்கலாம்.  

 நொறுக்குத் தீனிகளை மட்டுமே சாப்பிடாமல், கீரை, காய்கறி வகைகளை யும் உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரையை நன்கு அலசிக் கழுவி உபயோகிக்கவும்.

செய்ய வேண்டாம்:

 இந்த சீஸனில் காபி, டீ  அதிகமாகத் தேடும். ஆனால், வழக்கத்தைவிட அளவுக்கு அதிகமாக இவற்றைக் குடிப்பதால் பித்தம், லோ பிரஷர் போன்றவற்றுக்கு நாமே அழைப்பு விடுக்கிறோம்!  

 காய்கறிகள் கலந்த உணவை அடிக்கடி சூடுபடுத்தி உண்ணக் கூடாது!

 இக்காலத்தில் ஜீரண சக்தி குறை வாக இருப்பதால், அசைவ உணவு வகை களில் பொரித்த மசாலாக்களைக் காட்டி லும் செமி க்ரேவி வகை உணவுகளை உண்ணலாம்!

குழந்தைகள் நலம்: டாக்டர் தீபா ஹரிஹரன்,  குழந்தைகள் நல மருத்துவர்.

''சிசுக்களின் உடலுக்கு எளிதில் ஜில்லிடும் தன்மை இருப்பதால், கொஞ்சம் கனமான துணியால் குழந்தையின் எல்லா பக்கமும் சுற்றிப் பாதுகாக்க வேண்டும். மழையில் நனைந்து மூன்று நாட்களுக்கு மேல் ஜலதோஷம் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுங்கள்.

டெங்கு, டைஃபாய்டு காய்ச்சல்கள் வெகு வீரியமாகப் பரவும் காலம் இது. 'என் பிள்ளையை நான் வெளியிலேயே அனுப்ப மாட்டேன். அதனால், அந்தக் காய்ச்சல் பாதிக்காது' என்று நினைத்தால், அது தப்பு. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்கள் பல்கிப் பெருகி வாழ்வது வீட்டில் உபயோகிக்கும் நன்னீரில்தான். மினரல் வாட்டர் கேனுக்குக் கீழே சேகரமாகும் தண்ணீர், வரவேற்பறை அழகுக்காகப் பூக்களை மிதக்கவிடும் பாத்திரத்தின் நீர் ஆகியவற்றில் கொசுக்கள் இருக்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம், இவை பகல் நேரங்களில் மட்டுமே படை எடுக்கும். அதனால் இரவு நேரங்களில் மட்டும் கொசு மேட் பயன்படுத்திவிட்டு பகலில் அசட்டையாக இருக்க வேண்டாம். கொசு வலை, க்ரீம்கள் என்று குழந்தைகளை நாள் முழுக்கப் பாதுகாத்திடுங்கள். குட்டிப் பாப்பாக்களுக்கு ஏற்ற பாதுகாப்பான மஸ்கிட்டோ க்ரீம்கள்கூட இப்போது கிடைக்கின்றன.

இந்தச் சமயங்களில் பரவும் வைரஸ் காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி கைகளைக் கழுவும் பழக்கம் கற்றுக்கொடுங்கள். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு குளிர் காலத்தில் காதில் சீழ் பிடிக்கும். அதனால் குளிர்காலம் முடியும் வரை தாய்ப் பால் கொடுப்பது சிறந்தது!''

அழகு: வசுந்தரா, அழகுக் கலை நிபுணர்.

''மழைக் காலத்தில் கிருமித் தொற்று காரணமாக முடி கொஞ்சம் அதிக மாகவே உதிரும். ஆன்ட்டி-டாண்ட்ரஃப் ஷாம்பு அல்லது ஆலிவ் ஆயில் மசாஜ் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம். அல்லது காய்ந்த நெல்லிக்காய், வெந்தயம், செம் பருத்தி இலை, கறிவேப்பிலை, போன்ற வற்றை 10 கிராம் அளவில் எடுத்துஅரைத்து பேக் போட்ட பின், மைல்டு ஷாம்பு அல்லது சீயக்காயினால் கூந்தலை அலச வேண்டும். இதனால் கேசம் வலுவடைவதுடன், நோய்த் தொற்றும் ஏற்படாது.  

சிலருக்கு பனியினாலும் சரிவர நீர் அருந்தாததாலும் உதடுகள் வறண்டு ரத்தம் வரும் அளவுக்குப் பலவீனமாக இருக்கும். இதைப் போக்க பால், மற்றும் தேனைச் சம அளவு கலந்து நான்கு நாட்கள் தொடர்ந்து உதடுகளில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் ஷூ அணிபவர்கள்  முதலில் காலில் டஸ்டின் பவுடர் போட்ட பின்பு ஷூவை மாட்டிக்கொள்ளலாம். இது துர்நாற்றத்தைக் குறைக்கும்!''

சமையலறை: செஃப் தாமோதரன்.

''சமையல் மேடையில் தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். ஈரப் பதமாக இருந்தால் காய்ந்த துணியைக்கொண்டு துடைத்துவிடுங்கள். மளிகைச் சாமான்களை அடைத்து வைத்து இருக்கும் எந்த டப்பாவையும் கட்டாயமாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை திறந்து மூட வேண்டும். எக் காரணம் கொண்டும் அரிசியை ஈரக் கை கொண்டு எடுக்காதீர்கள்.

காய்கறி, பாத்திரம் என எதுவாக இருந்தாலும் சுடுநீரில் கழுவுவது கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிக்க உதவும். குளிர்நேரங்களில் இட்லி மாவு, தயிர் போன்றவை விரைவில் புளிக்காமல் மல்லுக்கட்டும். சூடான அடுப்புக்கு அருகில் சிறிது நேரம் தயிர் பாத்திரத்தை வைத்தாலே உடனடியாகப் புளித்துவிடும்!''