Monday, November 7, 2011

இரட்டை வாழ்க்கை இம்சை !

'ஆணும் பெண்ணும் சமம்' என்பதுதான் மார்க்ஸ் முதல் பாரதி வரை உலக முற்போக்கு சிந்தனையாளர்கள் படித்துப் படித்துச் சொன்ன விஷயம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் சமூகத்தில் அந்த நிலை, பெரும்பான்மையாக உருவாகவில்லை... குறிப்பாக கணவன் - மனைவி இடையே! கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சரிசமமாக நடத்தக்கூடிய தாம்பத்யத்தில்... ரொமான்ஸ் என்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதே உண்மை!

முரளி, சுலோச்சனா... அந்த விதி பழகாத தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். சுலோச்சனா, மத்திய அரசுத் துறையில் நல்ல பொறுப்பில் இருப்பவர். கிராமப்புற பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்தில் அரசாங்கம் தொடங்கிய ஒரு துறையில், கிரியேட்டிவான முறையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி நிறைய விருதுகளையும், பதவி உயர்வுகளையும் வாங்கியவர். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு நிம்மதி இல்லை.

தன்னால் இயன்றவரை வீடு, அலுவலகம் என்று இரண்டு பொறுப்புகளை சுலோச்சனா சுமந்தாலும், கணவர் எப்போதும் கரித்துக் கொட்டிக் கொண்டே இருப்பார். தன் அலுவல் தொடர்பாக மேற்கல்வி படித்து அதில் முனைவர் பட்டமும் பெற்றார் சுலோச்சனா. கை நிறைய சம்பளம். எந்நேரமும் அவரிடம் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி விவாதிக்க வரும் கிராமத்தினரின் கூட்டம், அரசியல்வாதிகள், கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் காட்டும் மரியாதை, அரசு தந்த கார் என்று மிக மரியாதையான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்தாலும், கணவர் முரளிக்கு அவர் தன் கை மீறிப்போய் விட்டதாக எண்ணம்.

''ரொம்ப படிச்சவனு திமிரு!''

''ஊர்ல எல்லாரும் மதிக்கிறாங்க இல்லை... அதான் என்னைப் போட்டு மிதிக்கிறே.''

''வீட்டை முழுசா பார்த்துக்க வக்      கில்லை... உனக்கெல்லாம் ஏன் குடும்பம், புருஷன், புள்ளகுட்டிங்க?''

''போகிற போக்கை பார்த்தா எலெக்ஷன்ல நின்னு மந்திரி ஆயிடுவபோல. அப்புறம் என்னைத் துரத்தி விட்டுட்டு வேற ஆள் பார்த்துப்ப.''

- கணவன் கூசாமல் கொட்டும் இந்தக் கொடும் சொற்களுக்கு, ஆரம்பகாலத்தில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் சுலோச்சனா. நாட்கள் செல்லச் செல்ல முரளியின் குரூரமும், வக்கிர சிந்தனையும் அதிகமாகிக் கொண்டே வந்ததால், வெறுத்துப் போய் மௌனம் காக்க ஆரம்பித்தார். அதற்கும் வசை தொடர்ந்தது. 'அம்மாவை உலகமே பாராட்டுகிறதே... அப்பாவுக்கு மட்டும் ஏன் விபரீத சிந்தனை' என்று அவர்களின் குழந்தைகளுக்குப் புரியவே இல்லை... பாவம்தான்.

வெளியுலகில் ஒரு வாழ்க்கை, வீட்டுக்குள் ஒரு நரக வாழ்க்கை என்று சுலோச்சனாவின் இரட்டை நிலை இன்றும் பரிதாபமாகத் தொடர்கிறது. அவர்களுக்குள் காதல் என்கிற வார்த்தையே அடிபட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறன்றன.

மாறி வரும் இன்றைய சூழலில், தடைகளைத் தாண்டி அலுவலக வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் வெற்றிகரமாக பெண்கள் நடத்திவரும் பெரும் சாதனையை, ஆண்கள் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.

இந்த விஷயத்தை ஒரு தம்பதிக்கு மட்டுமல்ல, ஊருக்கே... ஏன் உலகுக்கே பிராக்டிகலாக புரிய வைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், நேரடியாக இறங்கிய அனுபவத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

''தமிழ்நாட்டின் புதிரன்கோட்டை கிராமத்தில் நடந்திருந்தது ஒரு மௌனப்புரட்சி. ஆயிரக்கணக்கான படிப்பற்ற கிராமத்தவர்களை, மிகவும் குறுகிய காலத்தில், 'என்.ஏ.எஃப்' (NAF) எனப்படும் தேசிய விவசாய ஃபவுண்டேஷன் தன்னுடைய முயற்சியினால் படிப்பறிவு பெற்றவர்களாக மாற்றிஇருந்தது. கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பாடத் திட்டத்தில், நவீனமுறையில் அளிக்கப்பட்ட பயிற்சி அது.

அதிகாலையில் வெள்ளி முளைக்கும்போது எழுந்திருக்கும் பெண்கள்... வீட்டு வேலை, குழந்தைகளைப் பராமரிப்பது, சமையல் இவற்றுடன் காடு, கழனி என்று வயல்வேலையும் பார்த்துவிட்டு, இரவு கண்களை மூடிப் படுக்கும்போது நிலவு உச்சிக்கு வந்திருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நேரம் கண்டுபிடித்து எழுத்தறிவிப்பது, சாதாரண விஷயமல்ல. அவர்களுக்கான கல்வியை இரவு நேரத்தில்தான் கொடுக்க முடியும். 'என்.ஏ.எஃப்' அப்படித்தான் செயல்பட்டது.

நான் அங்கே சென்றிருந்தபோது சுமார் 4,200 பேர் இரவு பாடசாலை மூலம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் 80 சதவிகிதத்தினர் பெண்கள். அந்தச் சுற்றுவட்டார கிராமங்களில் 288 சுய உதவிக் குழுக்களையும் 'என்.ஏ.எஃப்' உருவாக்கியிருந்தது. அவர்களின் மொத்த சேமிப்பு 48 லட்சம் ரூபாயை எட்டியிருந்தது. சுமார் 70 லட்சம் ரூபாய்க்கான தொழில் கடன்களை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தது.

கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஒரு பெண். அவருடைய கணவர் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றார். நான் அந்தப் பஞ்சாயத்துத் தலைவியிடம், 'நீங்கள் சுதந்திரமாகச் செயல்பட உங்கள் கணவர் விடுகிறாரா? அல்லது தலையிடுகிறாரா?' என்று கேட்டேன். அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல தடுமாறினார்.

நிலைமையைச் சமாளிக்கும்பொருட்டு, 'அவ்வப்போது சில உதவிகளைச் செய்வதுண்டு' என்று பூசி மெழுகினார் கணவர். உண்மையில் அந்தப் பெண்மணியின் வேலைகளில் அவர் தலையிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. நம் நாட்டில் பெரும்பான்மையான பெண் பஞ்சாயத்துத் தலைவிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.

'இதோ பாருங்கள், நீங்கள் உங்கள் மனைவியைச் சுதந்திரமாக வேலை பார்க்கவிட வேண்டும். அவரால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். உங்கள் மனைவியின் வேலைகளில் தலையிட மாட்டேன் என்று உங்களால் உறுதி கூற முடியுமா?' என்றேன். அவர் 'நிச்சயமா சார்!' என்றார். சுற்றி நின்றிருந்த பெண்கள் எல்லாம் அதற்குக் கரகோஷம் செய்தார்கள். அந்தக் கரகோஷம், அவர்களும் அப்படிப்பட்ட சுதந்திரத்தையே விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது. பெண்கள் லீடர்ஷிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், அதற்கு ஆண்கள் முழுமனதோடு வழிவிட வேண்டும் என்பதே என் எண்ணம்''

- இப்படி எழுதியிருக்கிறார் அப்துல் கலாம்.

பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட மண வாழ்க்கையிலும் இனி ஆண்கள், பெண்களை அடக்கி ஆளாமல் அவர்களின் சுதந்திரத்துக்கும், திறமைக்கும் வழிவிட்டு நடந்தால்... அவர்களின் காதல் வாழ்க்கையும் கடைசி வரை இனிக்கும். இது 21-ம் நூற்றாண்டின் புதிய விதிகளில் ஒன்று.

'காதல் ஒருவனைக் கைபிடித்து, அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து...' என்பது பெண்ணுக்கு மட்டுமில்லை, ஆணுக்கும் பொருந்தும்.

- அகிலன் சித்தார்த்