Saturday, November 19, 2011

கலாசார மாறுதல்களை சமாளிப்பது எப்படி?

உறவுகளையும், குடும்பத்தையும் ஒருசேர பேலன்ஸ் செய்வது
என்பது அவ்வளவு சாமான்யமான விஷயமில்லை!

இன்று இந்தியா ஒரு அதிவேக வளர்ச்சியில் உள்ளது. இந்த வளர்ச்சியை நீங்கள் உங்கள் சம்பளத்திலும்,  வாழ்க்கைத் தரம் உயர்வதிலும் நன்றாகவே பார்க்கலாம்.  

இந்த வளர்ச்சிகளெல்லாம் நல்லதுதான்! இருப்பினும் இந்த வளர்ச்சியின் காரணமாக இன்றைய தலைமுறையினர் சில கலாசார பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றை சரியாக அணுகித் தீர்வு காணாமல், நிம்மதி இழந்து தவிப்பவர்கள் பலர். இந்த கலாசார பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பற்றி பார்ப்போம்.

1. மகன்/மகளிடம் அதிக பணத்தை எதிர்பார்க்கும் பெற்றோர்கள்!

சில வருடங்களுக்கு முன்பு, என் நண்பரின் நண்பர் ஒருவர் 35 வயதில் இறந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள். மகன் உயிருடன் இருக்கும்போது கணக்குவழக்கு இல்லாமல் பெற்றோருக்குப் பணம் தந்தார். அப்பணத்தை வாங்கி பெற்றோர்கள் உல்லாசமாக செலவு செய்தனர். மகன் இறந்தவுடன், அவருடைய மனைவிக்கு இன்ஷூரன்ஸ் பணமெல்லாம் வந்தது. அதிலிருந்து ஒரு பெரும் தொகையை அவரது பெற்றோர் கேட்டனர். ஆனால், மருமகளோ தருகிற மாதிரி இல்லை. இத்தனை நாளும் மகனை நம்பி வாழ்ந்தவர்கள், அடுத்து வேறு மாதிரிதான் நிலைமையைச் சமாளித்தனர்.

பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது குழந்தைகளின் கடமைதான். ஆனால், பெற்றோர்கள் தங்கள் தேவைக்கு அதிகமாக குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு. அத்தியாவசிய செலவுக்கு மட்டும் பணம் கிடைக்கும்; ஆடம்பரமான வாழ்க்கை வாழ தர வாய்ப்பில்லை என்பதை மகனோ / மகளோ நாசூக்காகச் சொல்லிவிடுவது நல்லது.

2. சகோதர சகோதரிகளின் குழந்தைகளைப் படிக்க வையுங்கள்!

ஒருவருக்கு கல்விக் கண்ணை திறந்து வைப்பது என்பது மிகவும் உன்னதமானச் செயல்.  ஆகவே, உங்கள் சகோதர, சகோதரிகளின் குழந்தைகளுக்கு தாராளமாக உதவி செய்யுங்கள்.  உங்களால் முடியாத பட்சத்தில், வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெற்றுக் கொடுப்பதற்கு உதவி செய்யுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் நேரடியாக பணம் தந்து அவர்களை சோம்பேறி ஆக்கிவிடாதீர்கள்.

3.என் குடும்பமா? என் பெற்றோரா?

சிலர், தான் அமெரிக்காவில் ஏ.சி. போன்ற வசதிகளுடன் வாழ்கிறோம்; ஆனால், தமது பெற்றோர்கள் அந்த வசதியை அனுபவிப்பதில்லையே என்ற குற்ற உணர்வில் அமெரிக்காவில் தன்னுடன் இருக்கும் குடும்பத் தினருக்குப் பார்த்துப் பார்த்து செலவு செய்துவிட்டு, இந்தியா வில் இருக்கும் பெற்றோருக்கு அவர்களின் தேவைக்கும் அதிகமான அளவு பணத்தை அனுப்பி விடுகிறார்கள். பெற்றோர்களின் தேவைகளை கவனிக்க வேண்டும் என்றாலும், தன்னுடன் இருக்கும் குடும்பத் தினருக்கும் முன்னுரிமை தர வேண்டும்.

4. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்!

ஒவ்வொருவரின் வாழ்க்கை யிலும் 'க்ரீம் பீரியட்' என்று சொல்லக்கூடிய (25 வயதில் இருந்து 50 வயது வரை) காலகட்டத்தில் சொந்தபந்தம் அனைத்திற்கும் உழைத்துவிட்டு, 50 வயதிற்கு மேல் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒன்றும் செய்யவில்லையே என்று கவலையோடு அலைவது கொடுமையான விஷயம்! 'க்ரீம் பீரியடில்' சொந்தபந்தங்களுக்கு தாராளமாக உதவுங்கள். அதே சமயத்தில் உங்களின் எதிர்காலத் தேவைகளான ரிட்டையர்மென்ட், குழந்தைகள் கல்வி மற்றும் திருமணம், வீடு வாங்குதல் போன்றவற்றிற்காகவும் சேமியுங்கள்; முதலீடு செய்யுங்கள். உறவினர் களுக்குப் பயந்து, உங்கள் பாதுகாப்பை கேள்விக் குள்ளாக்கி விடாதீர்கள்.

5. பெற்றோர்களுக்குத் தேவை அன்பு!  

பெற்றோர்கள் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது நமது அன்பைத்தான். அதை தாராளமாகக் கொடுங்கள். இன்றைய காலகட்டத்தில் பல வசதிகளுடன் ரிட்டையர்மென்ட் ஹோம்கள் வந்துவிட்டன. பல சீனியர் சிட்டிஸன்ஸ் அவர்களாகவே முதியோர் இல்லத்திற்குச் சென்று செட்டிலாகிறார்கள். ஆக, பெற்றோர்கள் சொந்த வீட்டில் இருந்தாலும், முதியோர் இல்லத்தில் இருந்தாலும் அவர்களிடம் வஞ்சனை இல்லாமல் அன்பு காட்டுங்கள். அந்த அன்பு ஒன்றே அவர்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.

6. ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளுங்கள்!

இன்றைக்கு சென்னையில் வேலை பார்க்க வரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், முதலில் பயப்படுவது நாலு பேரிடம் தைரியமாக ஆங்கிலத்தில் எப்படி பேசுவது என்பதற்குத்தான். ஆங்கிலத்தில் சரளமாக பேச / எழுத மற்றும் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸை கற்றுத் தரும் அமைப்புகள் இன்று சென்னையிலும் பிற நகரங்களிலும் எத்தனையோ வந்துவிட்டன. மொழியையும் கம்யூனிகேஷன் திறமையையும் வளர்த்துக் கொள்ள நீங்கள் செலவு செய்யும் பணத்தை ஒரு முதலீடாக கருதுங்கள். இதற்காக பணம் செலவழிக்கத் தயங்காதீர்கள்! கம்யூனிகேஷனில் நீங்கள் ஸ்ட்ராங்காகிவிட்டால், தன்னம்பிக்கை உங்களுக்குத் தானாகவே வரும்.

7. இரண்டு குழந்தை பெறுவது தவறா?

சிலர் ஒன்றிரண்டு குழந்தை களை பெற்றுக் கொண்டால், தான் உறவினர்களுக்குச் செய்யும் பண உதவி நின்றுவிடுமோ என்று அஞ்சி குழந்தை பெற்றுக் கொள்வதைகூட  ஒத்திப் போடுகிறார்கள். இது அர்த்தமற்ற பயமாகும்.  குழந்தைகள் பெற்றுக் கொள்ளாவிட்டால், நமது வாழ்க்கை பூரணமடையாது! பிறருக்கு உதவி செய்வது நின்றுவிடுமே என்பதற்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது முட்டாள்தனம்! எனவே, காலகாலத்தில் குழந்தைகளை பெற்றுக் கொண்டுவிடுங்கள்.

8. அதிக செல்லம், அதிக கெடுபிடி வேண்டாமே!  

நாம் குழந்தையை அதிகம் செல்லம் கொடுத்து வளர்க் கிறோம். இல்லாவிட்டால் அதிக கெடுபிடி தந்து நம் ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்க ஆரம்பிக்கிறோம். நீங்கள் எதிர்பார்த்ததற்கு நேர்எதிர் மாறான விளைவைத்தான் இது உருவாக்கும். நீக்குபோக்குடன்  குழந்தையை வளர்த்தால் அவன் முழுமையான மனிதனாவான்.

9. வெளிநாட்டு படிப்பு தேவையா?

குழந்தைகளை 12-ம் வகுப்புவரை படிக்க வைப்பது பெற்றோரின் கடமை. அதற்கு மேல் ஒருபடி சென்று நாம் காலேஜிற்கும் பணம் கட்டுகிறோம். காலேஜ் முடித்தவுடனேயே ஒரு குழந்தை முழு மனிதனாக மாறி விடுகிறான். அதற்கு மேல் உங்கள் குழந்தை தன்னைத் தானே கவனித்துக் கொள்ள ஏதுவாகி விடுகிறான். முதுகலைப் படிப்பிற்கு உங்களிடம் நிறையப் பணம் இருந்தால் தாராளமாக கொடுத்து உதவி செய்யுங்கள்.

ஆனால், ரிட்டையர்மென்ட் பணத்தைக் கொடுத்து வெளிநாட்டிற்குப் படிக்க அனுப்புவது முட்டாள்தனம். தவிர, அமெரிக்கா,  ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. எனவே, உங்கள் குழந்தை அங்கு படித்தாலும், இந்தியாவில்தான் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

10. தொழிலோடு குடும்பத்தையும் கவனியுங்கள்!

வீட்டைக் கண்டு கொள்ளாமல் நான் நெட்வொர்க்கிங் செய்கிறேன்/ சமூக சேவை செய்கிறேன்/ தொழிலில் மிகவும் பிஸியாக இருக்கிறேன் என்று கூறுவது இன்றைய நம் குடும்ப உறுப்பினர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நாம் அவர்களை கவனிக்கத் தவறினோம் எனில், அவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் கைகளில் அடைக்கலம் புக நிறைய வாய்ப்பிருக்கிறது. குடும்பம்தான் கோயில்! குடும்பத்திற்கு முதலிடம் தந்து, மற்றவற்றிற்கு இரண்டாவது இடத்தைக் கொடுங்கள்.

11. கணவன் - மனைவி சம்பாத்தியம்!

கணவன், மனைவி ஆகிய இருவரும் பெரிய பதவிகளில் பெருவாரியாகச் சம்பாதித்து விட்டு, வீட்டில் குழந்தைகளை கவனிக்க முடியாமல் ஆதங்கப்படுகிறார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்ய குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட் கொடுக்கிறார்கள் அல்லது மெகா மால்களுக்கு அழைத்துச் சென்று விருப்பப்பட்டதை வாங்கித் தருகிறார்கள். குழந்தை தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க ப்ளே ஸ்டேஷன்/ கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்கித் தருகிறார்கள். இதனால் அந்த குழந்தைக்கு நீங்கள் நல்லது செய்யவில்லை என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.  

வாழ்வதற்காகத்தான் பணம் சம்பாதிக்கிறோம். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்காக கொடுக்கும் சிறந்த அன்பளிப்பு அவர்களுக்காக ஒதுக்கும் நேரம்தான். அவர்களுடன் முடிந்தவரை சேர்ந்து இருங்கள் - தேவையென்றால் உங்கள் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ளுங்கள். அதனால் உங்கள் சம்பாத்தியம் குறையும் என்றாலும் பரவாயில்லை!

12. அண்டை வீட்டாரின் பொறாமை வேண்டாம்!

'பியர் பிரஷர்' - இன்று பரவலாக புழங்கும் வார்த்தை யாக இது மாறிவிட்டது. கூட வேலை செய்பவர் 50 லட்சத் திற்கு வீடு வாங்கிவிட்டார், ஐரோப்பா டூர் போகிறார் என்றாலும், நாமும் அவ்வாறு செய்ய நினைப்பது; அல்லது அப்படி செய்ய முடிய வில்லையே என நொந்து கொள்வது.

ஒவ்வொருவரின் வாழ்க்கை யும் ஒரு விதம். உங்கள் தேவை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்! அதைவிட்டு விட்டு அடுத்தவன் பின்னால் நாம் ஓட ஆரம்பித்தால், அது நாம் போய்ச் சேர நினைக்கிற இடத்தில் கொண்டு போய் சேர்க்காது.