Saturday, August 6, 2011

ஆளும் வளரணும்...ஆளுமையும் வளரணும் !

'பி.இ. படிக்கும் என் மகள், நல்ல பர்சன்டேஜ் எடுக்கும் 'டாப்பர்' மாணவி. ஆனால், ஏனோ வைவா, பேப்பர் பிரசன்டேஷன், குரூப் டிஸ்கஷன், சிம்போஸியம், டிபேட், செமினார் போன்றவற்றில் அவளால் சோபிக்க முடியவில்லை. இருக்கும் மிச்ச கல்லூரி காலத்துக்குள் அவளது ஆளுமைத்திறனை மேம்படுத்த வழி காட்டவும்'' என்று கேட்டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவகாமி சுந்தரம். அவருக்கு பதில் தருகிறார் திருச்சியைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராதா ராஜ்குமார்.

'எவ்வளவுதான் பாட அறிவு இருந்தாலும், தேவையான ஆளுமைத்திறனை இளம் வயதினரிடம் வளர்ப்பதற்கான ஆயத்தங்களைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆரம்பத்திலேயே துவக்க வேண்டும். உதாரணத்துக்கு, முதல் மதிப்பெண் எடுக்கும் ஒரு ஸ்டூடன்ட்டின் தலையிலேயே பல பொறுப்புகளைக் கட்டுவதற்குப் பதில், ஒவ்வொரு ஸ்டூடன்டுக்கும் அவரவர் ஈடுபாடு, திறமையைப் பொறுத்து பொறுப்புகளைப் பகிர்ந்து தரலாம்.

வீட்டிலும், விருந்தினர்களை வரவேற்பது, விசாரிப்பது, தன்னை அறிமுகம் செய்து கொள்வது போன்றவற்றுக்குக் குழந்தைகளைப் பழக்கலாம். இவ்வாறு பொறுப்புகள் அளிக்கப்பட்ட குழந்தைகள், அதைத் தக்க வைத்துக் கொள்ளத் தவிப்பார்கள்; அதற்காக, தனக்குள் பொதிந்திருக்கும் தனித் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். மாறாக, பொத்தி வைத்து வளர்க்கப்படும் குழந்தைகள், பின்னாளில் சிறு சிறு சமூக இடறல்களுக்குக்கூட சங்கடப்பட்டு முடங்கிப் போவார்கள்.

சரி... கல்லூரிப் படிப்பின் பாதியில் இருக்கும் உங்கள் மகள் பிரச்னைக்கு வருவோம். ஆளுமைத்திறனுக்கு முக்கியமானது 'கம்யூனிகேஷன் ஸ்கில்'. இது... வெர்பல், நான்வெர்பல் என்று இரண்டு வகைப்படும். தன்னுடைய படிப்பு சார்ந்து அதில் விஷய ஞானத்தோடு ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது... வெர்பல் ஸ்கில். அதையே சரியான உச்சரிப்பு, குரல் ஸ்தாயி, உடல்மொழி, உடுப்பு என சூழலுக்கு ஏற்றவாறு வெளிப்படுத்துவது... நான்வெர்பல் ஸ்கில். வெர்பல் கம்யூனிகேஷனில் ஒருவர் எவ்வளவு வித்தகராக இருந்தாலும், அதற்கு உயிரோட்டம் கொடுப்பது நான்வெர்பல் மட்டுமே.

வீட்டு உறுப்பினர்கள் மற்றும் இணக்கமான நட்பு வட்டம் இவர்கள் முன்பாக ஒரு தலைப்பின் கீழ் பேசிப் பழகலாம். இதிலும் சங்கடத்தை உணர்பவர்கள், கண்ணாடி முன்பாக பேசிப் பழகலாம். உலகப் புகழ்பெற்ற பேச்சாளரான பெர்னாட்ஷா, தன் வீட்டுக் கண்ணாடி முன்நின்று பேசிப்பார்த்துதான் பட்டைத் தீட்டிக் கொண்டாராம்.

மூன்றாம் நபர்கள் முன்பு மேடையேறும்போது, முதலாவதாக கருத்தில் தெளிவும் தேர்ச்சியும் வேண்டும். அடுத்ததாக, கூட்டம் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய புறத்தோற்றத்தில் தெளிவாக இருக்க வேண்டும். மேக்கப், உடை அடிப்படை அம்சங்களில் அதீதத்தைவிட, நீட்னஸ் முக்கியம். மூன்றாவதாக, மொழியில் சரளம் இருப்பதோடு, துறை சார்ந்த வார்த்தைகளில் புலமை இருப்பதும் வேண்டும். முக்கியமானது, மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடும் பழக்கம் வேண்டாம். ஒரே கருத்தை, வெளிப்படுத்தும் பாணியில் வித்தியாசம் காட்டி அப்ளாஸ் அள்ளலாம்.

உலகில் உங்களுடைய வெற்றிடத்தை உங்களால் மட்டுமே நிரப்ப முடியும். 'என்னால் முடியாவிட்டால், வேறு யாரால் முடியும்?' (If not me, Who else)என்ற தன்னம்பிக்கை பொதிந்திருந்தால், தாழ்வு மனப்பான்மை ஓடி ஒளிந்துவிடும். சிலருக்கு பங்கெடுப்பதிலேயே தகராறு இருக்கும். 'வெற்றி பெறுவதைவிட மகத்தானது பங்கெடுப்பதே' என்பதுதான் அவர்களுக்கான அரிச்சுவடி.

இந்தத் திறமைகளை எல்லாம் வளர்த்துக் கொள்ள கல்லூரியை விட்டால் வேறு சிறப்பான களம் இருக்க முடியாது. படிப்பு தவிர்த்த மற்ற புரோகிராம்களில் பங்கெடுக்கலாம். ஈடுபாடு இல்லையென்றாலும் பங்கெடுப்பவர்களுக்கு தன்னாலான உதவிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யலாம். இப்படி சமூகத்துடன் ஊடாடுவதைப் பொறுத்தே அவரரின் சமூகப் பண்பு பளிச்சிடும்.

மற்றவர்களிடம் இல்லாத, அதேசமயம் தனது முன்னேற்றத்துக்கு வாய்ப்பளிக்கும் ஏதோவொரு திறனை வளர்த்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு... ஆங்கிலம் தவிர்த்து பிரெஞ்சு, ஜெர்மன், சைனீஸ், ஜாப்பனீஸ் போன்ற மொழிகளில் ஒன்றைக் கற்கலாம்; கூடுதலாக ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் படிப்பைக் கற்கலாம்; இசை கற்றிருக்கலாம், பார்ட் டைமாககூட வேலை பார்க்கலாம். மற்றவர்களைவிட, ஏதோ ஒரு வகையில் தான் மேம்பட்டவர் என்ற உத்வேகத்தை இது பாய்ச்சும்.

என்.எஸ்.எஸ்., என்.சி.சி., ஸ்கவுட், ரெட் கிராஸ் என்று செயல்படும் பல்வேறு சேவை தொடர்பான அமைப்புகளில் பங்கேற்று சமூகத்திலும், கல்லூரியிலும் பிறருடன் பழகுவதற்கான வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளலாம். தேவைப்பட்டால், தனியார் 'பர்சனாலிட்டி டெவலப்மென்ட்' வகுப்புகளிலும் சேரலாம்.

பெரும்பாலானவர்கள் நல்ல மதிப்பெண்களோடு கல்லூரியை விட்டு வெளி வருகிறார்கள் என்றாலும், வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இந்த 'சாஃப்ட் ஸ்கில்ஸ்' அம்சங்களையே பரிசீலித்து முடிவெடுக்கின்றன என்பது கவனத்தில் இருக்கட்டும்!''