Sunday, August 21, 2011

பட்டாம்பூச்சிகளின் கதை!

பிரியமானவர்களே... இந்த வாரம், இரண்டு சகோதரிகளின் கதையை சொல்லப் போறேன்...

இவர்களது அம்மா, பெண் பிள்ளைகளை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்; ஒரே மகனை சட்டை செய்ய மாட்டார். காரணம், பெண்கள் இருவரும் நல்ல நிறம், அழகு, உயரம், படிப்பு, விளையாட்டு, டான்ஸ் என, சகலகலா வல்லிகள்; ஆனால், ஆண் மகனோ, கறுப்பு, ரொம்பவும் அமைதியாக இருப்பான். இதனால், பெண் குழந்தைகளுக்கு ஓவர் செல்லம் கொடுத்து வளர்த்தார் தாயார். அப்பா பேச்சை கேட்க மாட்டார்கள்; அம்மா சொல்வது தான் வேதவாக்கு.
திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்தனர்... பார்க்கின்றனர்... பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். எந்த மாப்பிள்ளை என்றாலும், ஒரு நொட்டம் சொல்வர் பெண்கள் இருவரும். "இந்த மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கான்; ஆனால், பி.எச்டி., பண்ணலியே...' என்பர்.

"இவனுக்கு படிப்பு, அந்தஸ்து எல்லாம் இருக்கு; ஆனா, அஜீத் மாதிரி இல்ல... ரொம்ப சாதாரணமா இருக்கான்!' என்பர்.

"என்னம்மா சொல்றீங்க... அழகெல்லாம் கொஞ்சம் நாளைக்கு தானேம்மா... ரொம்ப நல்ல குடும்பம்; பையனுக்கு சொத்து நிறைய இருக்கு... எம்.என்.சி., கம்பெனியில் வேலை செய்யறான்ம்மா...' என்பார் அப்பா.

அதற்கு அம்மாகாரி குறுக்கிட்டு, "என்னங்க... என் பொண்ணோட அழகுக்கு, இவன் ஏத்தவன் இல்லை. ரெண்டு பேரும் ஜோடியா வெளில போனா, விஜய் - த்ரிஷா மாதிரி இருக்க வேணாமா?' என்பார்.

"ஏய்... நீ இப்படி பேசியே உன் பொண்ணுங்க வாழ்க்கையில மண்ண போடுற... ஒழுங்கா உன் பொண்ணுங்களை அடக்கி வை... என்னால வெளில தல காட்ட முடியலடீ... ரெண்டு பொண்ண வச்சிகிட்டு எப்ப கல்யாண சாப்பாடு போடுவேன்னு எல்லாரும் பிடுங்கி எடுக்குறானுக. மரியாதையா சொல்றேன்... சீக்கிரமா நல்ல முடிவு எடுங்க!' என்று திட்டுவார் அப்பா.

"அப்பா... உங்க வேலைய பாருங்க. எங்களுக்கு வர்றவங்க சூப்பரா இருக்கணும்... அதே சமயம் நல்ல, "வெயிட்டு' பார்ட்டியா இருக்கணும்!' என்பர்.

"அப்படியா... அப்படின்னா நல்ல, "இரும்பு' வியாபாரியோட மகனா பார்க்குறேன்; அவன் தான், "வெயிட்' பார்ட்டியா இருப்பான்!' என்பார் அப்பா.

"இது நொட்டை... நொள்ளை...' என்று சொல்லி சொல்லியே, 30 - 32 வயது ஆகிவிட்டது. அடுத்து, மிகவும் அடக்கமான, பணக்கார குடும்பத்திலிருந்து உயர்ந்த வேலையில் உள்ள, மாப்பிளளை ஒருவன், இவர்களது அழகில் மயங்கி, திருமணம் செய்ய முன் வந்தான். எல்லா காரியமும் ஓ.கே., ஆகிவிட்டது. கடைசியில், நம்ம ஹீரோயின்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

"அம்மா... அந்தப் பையனோட அம்மா, நடுத்தர வயதுடன் ரொம்பவும் திடமா இருக்காங்க. இவங்க எப்ப போறது? அத்தோடு நாத்தனார் வேறு இருக்கு. எனக்கு பார்க்கிற மாப்பிள்ளை வீட்டில், மாமியார், நாத்தனார் எல்லாம் இருக்கவே கூடாது!' என்றனர்.

மகள்களுக்கு ஒரு அம்மா எப்படி புத்தி சொல்லணும்...

"மகள்களே... இதெல்லாம் ரொம்ப தப்பு... நாளைக்கு நாம் மாமியார் ஆக மாட்டோமா?' என்று சொல்லணுமா இல்லையா?, "ஆமாம்... ஆமாம்... என் மகள்கள் சொல்வது சரிதான். சரி... சரி... வேறு இடம் பார்ப்போம்...' என்றார்.

அப்பாவுக்கு வந்ததே ஆத்திரம்...

"ஏண்டீ... உன் மருமகளை மட்டும் நீ என்ன பாடு படுத்தற... அப்பாவிப் பொண்ணு வந்து உன்கிட்ட மாட்டிகிச்சி... நீ அதை ஒரு வேலைக்காரியை விட கேவலமா, "ட்ரீட்' பண்ற... அப்பப்ப எங்கே உன் மருமகள், மகனை உன்கிட்ட இருந்து பிரிச்சிகிட்டு போயிடுவாளோன்னு பயந்து, உன் மகனுக்கு என்னெல்லாம் தூபம் போடுற... இது உனக்கே அடுக்குமாடி...நீயும், பொண்ணுங்களும் எக்கேடோ கெட்டு ஒழியுங்கள். இந்த யுகத்தில், உன் பொண்ணுங்களுக்கு கல்யாணமே ஆகப் போறது இல்ல... இனி, உங்க விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன்!' என்று சபித்தார் அப்பா.

இதற்கெல்லாம் காரணம், பெண்கள் இருவரும் நன்றாக சம்பாதிக்கின்றனர். தனியாக ஒரு வீடு எடுத்து, அங்கே எல்லா பொருட்களையும் வாங்கி வைத்து, தனிக்காட்டு ராணிகள் போல், சுதந்திரமாகத் திரிவதுதான். அவர்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது... யாராவது கேள்வி கேட்டால், "எங்களது சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாதீங்க!' எனத் திட்டுவர்.

சமீபத்தில் மிகவும் அழகான ஒரு மாப்பிள்ளை வந்தார். மூத்த மகள், ஜொள்விட்டு, "அம்மா இந்த மாப்பிள்ளைய பேசி முடிச்சிடு!' என்று கிரீன் சிக்னல் காட்டினாள்.

குடும்பத்தினர் மிகவும் ஆச்சரியப்பட்டு, மாப்பிள்ளை வீட்டாருடன் பேசினர்; ஆனால், மாப்பிள்ளையோ, "பொண்ணு பார்ப்பதற்கு வயசானவள் போல் இருக்கிறார்... முகம் எல்லாம் கிழடு தட்டி விட்டது. நிச்சயமாகவே நீங்கள் சொல்ற வயசு பொய்... பெரிய பொம்பளையை என் தலையில் கட்டப் பாக்குறீங்களே...' என போட்டானே ஒரு போடு.

அம்மா, மகள்கள் மூவருக்கும் இப்படி ஒரு சாட்டையடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

தாங்கள் இன்னும், "அழகி மீனாக்கள்' என நினைத்து, "அந்த மாப்பிள்ளைக்கு பிரஷ் மீசை, இவனுக்கு பர்ஸ் வாய்... இவன் மூஞ்சி இடிச்சி வச்ச ஈயச் சொம்பு போல இருக்கு...' என திட்டியவர்கள், முதல் முறையாக இப்படிப்பட்ட அம்புகள் தாக்கியதும், மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இது, அவர்களது, "ஈகோவை' பயங்கரமாக தாக்கியது.

ஏறு, ஏறு... என்று ஏறினார் அப்பா.

"ஏண்டி... ஜாதகத்தை தூக்கிட்டு தேதியை மாத்தாதீங்க... போலி ஜாதகம் தயாரிக்காதீங்கன்னு... எத்தனை வாட்டி சொன்னேன் கேட்டீங்களா... எத்தனை மாப்பிள்ளைகளை, "இவன் நொட்ட, நொள்ளை, குள்ளம், கவுண்டமணி, செந்தில்...'ன்னு கிண்டல் செய்தீங்க. இப்ப உங்க நிலைமை என்னாச்சு... கிழடு தட்டிப் போன முகத்த வச்சிட்டு நீங்க, அஜீத், விஜய் மாதிரி மாப்ள எதிர்பார்க்கிறீங்களே... உங்களுக்கு ரஜினி, கமல் வயசுலதான் மாப்ள வருவான்னு எனக்கு தெரியும்; ஆனா, இப்ப இருக்கிற நிலமையை பார்த்தா, அதுவும் சந்தேகம் தான். இதுக்கெல்லாம் உங்க அம்மா தான் காரணம். இவளை நாலு போடு போட்டிருந்தா, இந்நேரம் நீங்கள் ரெண்டு பேரும் கையில் ஒரு குழந்தையுடன் இருந்திருப்பீங்க. உங்களை கெடுத்து வளர்த்ததும் இல்லாம, <உங்க வாழ்க்கையையே சீரழிச்சிட்டா...' என, புலம்பி தீர்த்தார்.

இப்போது உண்மையை <உணர்ந்த சகோதரிகள், ஓரளவுக்கு நல்ல வரன் வந்தாலே போதும் என நினைக்கின்றனர். ஆனால், வருவதெல்லாம் மனைவியை இழந்தவர், விவாகரத்து ஆனவர் போன்றோர் தான். அப்படியே முதல் தார மாப்பிள்ளைகள் வந்தாலும், முக்கால்வாசி வழுக்கை, தொப்பை போன்றவற்றுடன் வருவதால், சகோதரிகள் இருவரும் அழுது, கண்ணீர் வடிக்கின்றனர். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தங்கள் தவறை ஒத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார் தாயார்.

இப்படி மிதமிஞ்சிய கற்பனைகளை வளர்த்து, உங்கள் வாழ்க்கையில் கிடைத்த பொன்னான அதிர்ஷ்டங்களை மிஸ் பண்ணிடாதீங்க பட்டாம்பூச்சிகளே...