Saturday, August 27, 2011

மாரடைப்புக்கு மகத்தான யோசனைகள்!




மாரடைப்புக்கு மகத்தான யோசனைகள்!

மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றால்,  மீளமுடியாத கடனில் தவிக்க வேண்டியதுதான். அந்த அளவுக்கு, இன்று மாரடைப்பு சிகிச்சைக்கான செலவுத் தொகை நடுத்தரவர்க்கத்தினரின்  நெஞ்சை அழுத்துகிறது.  மாரடைப்பினால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி, சிகிச்சை பில்லை பார்த்து மறுபடியும் அட்மிட் ஆகும் அளவுக்கு சேமிப்பும், கையிருப்பும் கரைந்து கடனில் மூழ்க வைத்துவிடுகிறது. இப்படி நோய்களிலேயே அதிக அளவு செலவு வைப்பது மாரடைப்புக்கான சிகிச்சைதான். இந்த நிலையை தவிர்க்க ஒரே வழி மாரடைப்பு வராமல் தடுப்பதுதான்!

'மன மகிழ்ச்சி, சத்தான உணவு, சீரான உடற்பயிற்சி இவைதான் இதயத்தை காக்கும் மூன்று மந்திரங்கள்' என்கிறார் சென்னையின் முன்னணி இதய நிபுணர் டாக்டர்  வி.சொக்கலிங்கம்.  


'முன்பெல்லாம் 40 வயதானவர்கள்தான் ரத்தம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது.  ஆனால், இப்போதோ 30 வயதை தாண்டுவதற்குள், கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தத்திற்காக பரிசோதிக்க வேண்டிய நிலை. இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் வருவதற்கு, முக்கிய காரணமே, மாறிவரும் நம் வாழ்க்கை சூழல்தான்.

வாய்க்கு ருசி என்று, உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவை  வெளுத்துக் கட்டுகிறோம். உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போகும்போது, சாப்பிட்ட உணவு எப்படி ஜீரணமாகும்?  வீட்டு வாசலைத் தாண்டியவுடன், பக்கத்து தெருவுக்குகூட ஆட்டோவில் பறக்கிறோம். இவையெல்லாம் முதலில் தவிர்க்கப்பட வேண்டும்.  

அலுவலகத்தில் மற்றவர்களின் ஏளன பேச்சுக்கு ஆளாகும்போது, அடுத்தவர்களைவிட சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்கிற உத்வேகம் அதிகரிக்கும்போது, மன அழுத்தம் ஏற்படுகிறது. அதுவே நாளடைவில் மாரடைப்புக்கு காரணமாகி விடும். பெரும்பாலான நோய்களின் நிவாரிணியே மௌனம், தியானம், நிதானம்தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மேலும் அதிக ரத்த அழுத்தம்,  ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, உடல் பருமன், குறிப்பாக ஆப்பிள் வடிவ தொப்பை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது'' என்றவர், வராமல் தடுக்கும் வழிகளையும் விளக்கினார்.

''உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும். எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். அவ்வப்போது சில நிமிடம் காலார நடை போடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள். வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது!''

இதமான உணவு!

தவிர்க்க வேண்டியவை:  

நெய், தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, ஐஸ் கிரீம், சாக்லேட், ஊறுகாய், முட்டை மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டின் ஈரல், மூளை.

மிதமான அளவு:  

முட்டையின் வெள்ளைக் கரு, கோழி இறைச்சி (வாரம் இரு முறை), மீன், மட்டன் அல்லது சிக்கன் சூப் (வாரம் மூன்று முறை)

வெளுத்து கட்ட:

பூண்டு, வெங்காயம், கீரை வகைகள், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், முள்ளங்கி, அனைத்து பழ வகைகள்.

நீரிழிவு பாதிப்பா... நோ...

மாம்பழம், பலாப்பழம் போன்ற அதிக இனிப்பு உள்ள பழங்கள்.

 இந்த உணவு முறையை பின்பற்றினாலே போதும். ஓரே ஆண்டுக்குள் இதயத்தில் ரத்தக் குழாய் அடைப்பு குறைந்து மாரடைப்பு தடுக்கப்பட்டுவிடும்.