Sunday, January 8, 2017

இதயத்தை காக்கும் மீன் எண்ணெய்

ன்று மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன மீன் எண்ணெய் மாத்திரைகள். இவற்றை பெரியவர், சிறியவர் என அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், `உடலுக்கு நல்லது' என்ற பொதுவான அபிப்பிராயத்தில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள்தான் அதிகம். 

  அந்தக் காலத்தில் வடக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மக்கள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், அதிகப்படியான குளிரைத் தாங்கிக்கொள்ளவும் மீன் எண்ணெயைப் பயன்படுத்தினர்.  இன்று உலகம் முழுவதும் இந்த மீன் எண்ணெய் மாத்திரை உட்கொள்வது ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன, எதற்கு உட்கொள்ள வேண்டும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாமா?

"மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன?"

"நம் உடலுக்கு மிகவும் அவசியமான, அதேநேரம் இயற்கையாக எளிதில் கிடைக்காத பல வகைச் சத்துக்கள், திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன்களில் இருக்கின்றன. இந்த மீன்களை நம்மால் சமைத்துச் சாப்பிட முடியாது. இந்த மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பல கட்ட சுத்திகரிப்புக்குப் பிறகு, கேப்ஸ்யூல்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. 'காட் லிவர் ஆயில்' (Cod liver oil) என்ற பெயரில் மீன் எண்ணெய் மாத்திரைகள் அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்."

"மீன் எண்ணெயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?"

"ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி மற்றும் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மீன் எண்ணெயில் நிறைவாக உள்ளன. இது உடலுக்குத் தேவையான நல்ல கொலஸ்ட்ரால். இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ எனப்படும் அமிலங்களும் இந்த மீன் எண்ணெயில் உள்ளன. மீன் வகைகளை எப்போதும்போல உணவில் சேர்த்துக் கொண்டாலும், இந்தச் சத்துக்கள் உடலில் சேரும். சொல்லப்போனால் இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ போன்ற சத்து அமிலங்கள் மீன் எண்ணெயைவிட மீன்களை நேரடியாக உண்ணும்போது உடலில் அதிகமாகச் சேரும் என்கின்றன ஆய்வுகள். ஆயினும், மீன் எண்ணெய் பல கட்டங்களாகப் பதப்படுத்தப்பட்ட பிறகு மாத்திரைகளில் கிடைப்பதால், இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்னை கொண்டவர்களுக்கு உணவோடு கூடிய சத்து மாத்திரையாகப் பரிந்துரைக்கபடுகிறது."

"மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாமா?"

"சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் மருத்துவர்களின் பரிந்துரைக்குப் பின்தான் இந்த மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீன்கள் சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுபவர்கள், இந்த மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. 


ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்துத்தான் இந்த மாத்திரைகளை தினமும் உட்கொள்ளலாமா அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாமா என்று முடிவெடுக்க முடியும். எனவே, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதோடு, என்னதான் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டாலும் இறைச்சி, சமைக்கப்பட்ட மீன், பச்சைக் காய்கறிகள், பால், பழங்கள் என உண்டு இயற்கையாகக் கிடைக்கும் சத்துக்களே என்றைக்கும் உடலுக்கு நல்லது. அதனால், உங்கள் உடலின் சத்துத் தேவைக்கு மீன் எண்ணெய் மாத்திரைகளை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி இருக்க வேண்டாம்."

"மீன் எண்ணெய் மாத்திரைக்குப் பதிலாக வேறு மாற்று இல்லையா?"


``மீன் எண்ணெய் மாத்திரைகளில் கிடைக்கும் நல்ல கொழுப்பை, ஃபிளக்ஸ் சீட், பாதாம், வெண்ணெய், சோயாபீன்ஸ் உட்கொள்வதன் மூலமும் பெறலாம்.''



மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள் 

மீன் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் மூட்டு வலி, மறதி நோயான அல்சைமர், கண் நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு இதயத்துக்குப் பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். 

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். மாரடைப்பு ஏற்பட்டவர்களும் மீன் எண்ணெயால் பயன் பெறலாம். 

இதய ரத்தக் குழாய்களில் மாறுதல் ஏற்படுத்தும் டிரைகிளிசரைட்ஸ், மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

சருமப் பாதுகாப்புக்கும் மீன் எண்ணெய் முக்கியமானது. காயங்களை விரைவில் ஆற்றும்.

மேலும், எப்போதும் டென்ஷன், மனஅழுத்தம் எனப் படபடப்பாகவே இருப்பவர்களையும் இந்த மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் அமைதிப்படுத்தும். 

மனநிலை பாதிப்பு மற்றும் உளவியல்ரீதியான  பிரச்னை கொண்டவர்களுக்கு, மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் பக்கவிளைவுகள் இல்லாமல் நிவாரணம் தரவல்லவை.