காலையில் தாமதமாக எழுவது... அவசர அவசரமாகக் குளித்து, உடையணிந்து, அரைகுறையாகச் சாப்பிட்டு அலுவலகம் செல்வது... நாள் முழுவதும் சோர்வுடன் வேலை பார்ப்பது... இரவில் தூக்கம் வராமல் பல மணிநேரம் ஃபேஸ்புக்கில் சாட் செய்வது... நள்ளிரவில் உறங்குவது... மீண்டும் அடுத்தநாள் காலை தாமதமாக எழுவது... இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்றைய இளையதலைமுறையினரின் அன்றாட வாழ்க்கை. அதீத வேலைப் பளு, உடல் சோர்வு காரணமாக வார இறுதி எப்போது வரும் என ஏங்கித் தவிக்கிறார்கள். வார இறுதி விடுமுறை கொண்டாட்டங்களும் ஓய்வும் முடிந்தாலும், மறுபடியும் திங்கள் திரும்பத் தொடங்கிவிடுகிறதே! பிறகு..? இதே சோர்வு... களைப்பு... அலுப்பு... வேலை! உடல் சோர்வைப் போக்குவதற்கு இவர்களில் பலருக்கும் யோகா பயிற்சி செய்வதற்குக்கூட நேரமில்லாமல் போகிறது. வேலைப் பளு காரணமாக ஏற்படும் இந்தச் சோர்வை, அலுவலகத்தில் உட்கார்ந்த இடத்திலிருந்தே விரட்டும், சில எளிய பயிற்சிகள் பற்றித் தெரிந்துகொள்வோமா ?
முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து, தலையை இடப் பக்கத்திலிருந்து வலப் பக்கமாக மெதுவாகச் சாய்க்கவும். வலது தோள் மேல், வலது காது படும்வரை சாய்க்க வேண்டும். பின்னர் இதேபோல் வலப் பக்கத்திலிருந்து இடப் பக்கமாக தலையைச் சாய்க்கவும். இதேபோல ஐந்து முறை செய்யவும்.
கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து, கழுத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கீழ்நோக்கி முன்னே சாய்க்கவும். இப்படிச் செய்யும்போது மூச்சை வெளியேற்றவும். அதேபோல் மெதுவாக மூச்சை உள்வாங்கிக்கொண்டு கழுத்தை மீண்டும் மேலே உயர்த்தவும். இப்படி தொடர்ந்து 10 முறை செய்யவும். இதனால் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் தசை இறுக்கம் நீங்கும்.
இரு புருவங்களுக்கும் மேலே, முன்நெற்றியில் இரு கைக்கட்டை விரல்களால் ஒரு நிமிடம் வரை அழுத்திக்கொண்டேயிருந்து பின்னர் விடவும். இதனால் வேலைக்கு நடுவில் ஏற்படும் சோர்வு நீங்கும்.
இரண்டு கை ஆள்காட்டி விரல், நடுவிரல் இரண்டையும் சேர்த்துவைக்கவும். இந்த நான்கு விரல்களையும் முகத்தின் இருபுறமும் படுமாறு வைத்து, முகம் முழுக்க மெதுவாக அழுத்திவிடுகிற மாதிரி தேய்க்கவும். இதனால் முகத்தில் ஏற்படும் சோர்வு, தளர்ச்சி நீங்கும்.
கண் விழியை இட வலமாக, மேல் கீழாக ஐந்து முறை சுழற்றவும். எண் '8' வடிவில் சுழற்றவும். இதுபோல் இரண்டு நிமிடம் செய்யவும். இதன் மூலம் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம், சுருக்கம், சோர்வு நீங்கும்.
இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று அழுந்தத் தேய்த்தால், உஷ்ணம் அதிகரிக்கும். இப்படி தேய்த்த பிறகு, இரு உள்ளங்கைகளாலும் முகத்தை மூடி 5-8 விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும். இதனால் கண்கள் சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெறும்.
ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு, அதனை முதலில் விழிக்கு 10 சென்டிமீட்டர் தொலைவில் வைத்துப் பார்க்கவேண்டும். பின்னர் ஒரு அடி தொலைவில் வைத்துப் பார்க்க வேண்டும். பின்னர் 10 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்க்கவேண்டும். இதோப்போன்று 10 முறை தொடர்ந்து செய்யவேண்டும். இதனால் கண்ணின் குவித்துப்பார்க்கும் திறன் (Focus ability) அதிகரிக்கும். கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர்ந்து, தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்த்து பின்னர் நிமிரவும். தலையை நேராக வைத்துக்கொண்டு, வாயை நன்றாகத் திறந்து கீழ்த்தாடையை இடம் வலமாக அசைக்கவும். இதனால் கழுத்து, தோள் தசை இறுக்கம் நீங்கும்.
ஆங்கில எழுத்தான 'E' -யை உச்சரிக்கும்படி பற்களைக் கடித்துக்கொண்டு, அதன் வழியாக வாய்க்குள் காற்றை உள்ளிழுக்கவும். பின்னர் உள்ளிழுத்த காற்றை மூக்கு வழியாக வெளியேற்றவும். இதுபோல் 10 முறை செய்யவும். இப்படிச் செய்யும்போதே வாய்க்குள் குளிர்ச்சி ஏற்படுவதை உணர முடியும். இதனால் மூளை சுறுசுறுப்பாகும்.
வேலைக்கு நடுவில் அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடக்கவேண்டும். காபி, டீ உள்ளிட்ட கஃபைன் பானங்கலுக்கு பதிலாக, தண்ணீர், பழச்சாறு பருகலாம்.