Tuesday, January 3, 2017

இந்த 5 பிரச்னைகள் இருந்தால் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை டி-ஆக்டிவேட் செய்யுங்கள்!

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்ல இருக்கறது நல்லதா? கெட்டதானு கேட்டா நாயகன் பட மியூஸிக் தான் மிஞ்சும். ஆனா ஃபேஸ்புக்ல இருக்கவே கூடாதுனும் சொல்லல. வாழ்க்கைல சில விஷயங்கள்ல ஒருத்தரால கவனம் செலுத்த முடியல. குறிப்பா இந்த 5 காரணங்கள் ஒருத்தர் சாதிக்க ஃபேஸ்புக் பிரச்னையா இருக்குனு ஃபீல் பண்ணா அவர் உடனே அவரோட ஃபேஸ்புக் கணக்க டி-ஆக்டிவேட் செய்யலாம். 

வேலை தேடுகிறீர்களா?

படித்து முடித்து விட்டோ அல்லது வேலையில் இருக்கும்போதே வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடுகிறீர்களா? உங்களது ஃபேஸ்புக் கணக்கை குறைந்தபட்சம் வேலை கிடைக்கும் வரை டி-ஆக்டிவேட் செய்யுங்கள். இதில் இரண்டு நல்ல விஷயங்கள் உள்ளது. ஒன்று வேலை தேடுவதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்த முடியும். மற்றோன்று உங்கள் பர்சனல் விஷயங்களை மனதில் வைத்து அது உங்கள் வேலைக்கு பாதிப்பாகவும் வாய்ப்புள்ளது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் உங்கள் சமூக வலைதள பக்கங்களை இன்டெர்வியூவின் ஒரு அங்கமாக பார்ப்பது வழக்கம். இப்படிப்பட்ட நேரத்தில் வேலை தேடும்போது கொஞ்ச நாளைக்கு ஃபேஸ்புக்கிற்கு குட் பை சொல்லுவதில் தவறில்லை.

இம்பல்ஸிவ் நெட்டிசன்!

எதைப்பார்த்தாலும் லைக் செய்ய வேண்டும், ஷேர் செய்ய வேண்டும், ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி விமர்சித்தே ஆகவேண்டும் என்ற மனநிலை உங்களுக்கு இருந்தால் உடனடியாக உங்கள் கணக்கை டி-ஆக்டிவேட் செய்யுங்கள். இது பிரச்னை இல்லை என்றாலும் இது ஒருவிதமான அடிக் ஷன். சிலர் கிட்டத்தட்ட சம்பளம் வாங்காத ஃபேஸ்புக் ஊழியராகவே மாறுவிடுவார்கள். இதற்கு உங்களை பழக்கப்படுத்திக் கொள்வது உங்கள் செயல்திறனைக் குறைக்கும்.  அவசியமான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வேன் என்ற மனநிலைக்கு வரும் வரை உங்கள் கணக்கை டி-ஆக்டிவேட் செய்வது நல்லது. உங்களுக்கு சுயக் கட்டுப்பாடு இருந்தால் படிப்படியாக குறைப்பதும் சிறந்த முறையாக இருக்கும்.

காதல் தோல்வி!

மிக முக்கியமான உளவியல் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. ஒருவேளை நீங்கள் காதலில் தோல்வியடைந்து இருந்தால் உடனடியாக உங்கள் காதலன்/காதலியை ப்ளாக் செய்யப்போகிறேன் என்று முடிவெடுப்பதோ அல்லது அவர்கள் பதிவுகள் எனக்கு தெரியாதவாறு ஹைட் செய்கிறேன் என்பதோ சரியான முடிவாக இருக்காது. ஏனெனில் ஃபேஸ்புக்கில் உங்களுக்கு இருக்கும் பொதுவான நண்பர்களுடன் அவர்கள் பகிரும் புகைப்படங்கள் போன்றவற்றில் நீங்கள் அவர்களை பார்க்க நேரிடும். இல்லை ஏதோ ஒரு தருணத்தில் நீங்கள் அவர்களுடன் ஃபேஸ்புக் உரையாடல்களை தொடரலாம். காதல் தோல்விக்கு பின் நடக்கும் உரையாடல்கள் தான் ஒருவருக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் நீங்கள் புதிதாக ஒரு ரிலேஷன்ஷிப்பை துவங்கும் வரையிலோ அல்லது இந்த தோல்வியிலிருந்து முழுமையாக மீளும் வரை ஃபேஸ்புக் பக்கம் நோ சொல்வது உங்களை வலிமையாக்கும்.

* இதுவரைக்கும் சொன்ன மூன்று காரணங்கள் கூட ஓரளவுக்கு சமாளிக்கக்கூடிய காரணங்கள் பட்டியலில் தான் இருக்கும் அடுத்த இரண்டு காரணங்கள் உங்களுக்கு பிரச்னை என்றால் உடனடியாக உங்கள் ஃபேஸ்புக் கணக்கை டி-ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம்.

 சுய மதிப்பிழத்தல்!

என்னோடு யாருமே பேச மாட்டேன் என்கிறார்கள்? எனக்கு யாருமே மரியாதை தரவில்லை. என் ஸ்டேட்டஸுக்கு மட்டும் குறைவான லைக்குகள் வருகிறது என்று ஒருவர் அவரையே குறைத்து மதிப்பிடும் மனநிலையில் இருந்தால் உங்களை ஃபேஸ்புக் மிகவும் பாதிக்கும். உங்கள் ஃபேஸ்புக்கை டி-ஆக்டிவேட் செய்யுங்கள். அதே சமயம் உங்களை மோட்டிவேட் செய்யும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களை ஒரு தலைவனாக கருத நினைக்கும் விஷயங்களை அணுகுங்கள். பிறகு கெத்தாக ரீ-என்ட்ரி கொடுங்கள். 

அதிகமான மன அழுத்தம்!

ஒருவருக்கு அதிக மன அழுத்தம் இருந்தால் அவரால் சாதாரண நபரைப்போல ஃபேஸ்புக்கில் இயங்க முடியாது. பிடிக்காதவர்களை வசை பாடுவது. தனக்கு பிடிக்காத சமூக விஷயங்களை வேண்டுமென்றே விமர்சிப்பது என சில நேரங்களில் பிரச்னைகளில் சிக்க வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட மனநிலையில் நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ இருந்தால் ஃபேஸ்புக்கை டி-ஆக்டிவேட் செய்வது அவசியம். சிறிய கவுன்ஸ்லிங், மன அழுத்தமற்ற தெளிவான மனநிலைக்கு வந்த பின்பு ''திரும்ப வந்துட்டேன்னு சொல்லுனு என்ட்ரி கொடுங்கள்''

ஃபேஸ்புக் ஒருவருக்கு முன்னேற்றத்துக்கான விஷயமாகவும்  இருக்கிறது. அதேசமயம் தனிமனித சறுக்கல்களுக்கும் காரணமாகிறது. டி-ஆக்டிவேட் செய்வதால் மொத்தமாக நண்பர்களை இழந்துவிடுகிறீர்கள் என்று அர்த்தமில்லை. ஃபேஸ்புக்கின் அனைத்து டி-ஆக்டிவேஷன்களும் தற்காலிகமானதே. மீண்டும் லாக் - இன் செய்தால் போதும் உங்கள் கணக்கு உங்களுக்கு கிடைத்துவிடும்.