Sunday, November 27, 2016

குழந்தைகளை இப்படியும் நடத்தலாமே பெற்றோர்களே!


சிறப்பான குழந்தை வளர்ப்பு என்பதை பிள்ளைகளின் நடவடிக்கைகளில் தேடுவதைவிட, பெற்றோர்களின் நடவடிக்கைகளில் தேடுவது முக்கியம். குழந்தைகளிடம் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற முத்தான 10 அறிவுறுத்தல்கள் இங்கே..!

  

1. கணிதம் போன்ற பாடங்களில் குழந்தைகளுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்பதை, பெற்றோர்கள் அறியவேண்டியது முக்கியம். சிறியதொரு கணக்கின் கேள்வியை எந்த அளவுக்கு அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், எந்த இடத்தில் அவர்கள் மூளை சோம்பலடைகிறது, எந்த இடத்தில் சலிப்படைகிறது என்பது பற்றிய தெளிவு பெற்றோர்களுக்கு வேண்டும். அதற்கு, ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்புவரையாவது குழந்தைகளுக்கு தனிவகுப்பு (ட்யூஷன்) வைக்காமல் பெற்றோர்களே சொல்லித்தரலாம். மேலும் குறிப்பிட்ட சப்ஜெக்டை ஒரு குழந்தை ஏன் படிக்கத் தயங்குகிறது, சில சப்ஜெக்டை படிக்க ஏன் ஆர்வம் காட்டுகிறது என்று கண்டுபிடிக்கவும் இது உதவும். மொத்தத்தில் குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்ள, எட்டு வயதுவரையாவது பெற்றோர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பது அவசியமாகும்.

2. விலை அதிகமான கலர் பென்சில் பாக்ஸ் வாங்கிக் கொடுத்திருப்போம். அதை குழந்தைகள் தொலைத்துவிட்டு வந்துவிடுவார்கள். எங்கள் வீட்டில் அப்படி தொலைத்து வந்தபோது, 'அதைத் தொலைத்தது பற்றி நீ அதிகம் கவலைப்படாதே' என்று முதலில் ஆறுதல்படுத்தலாம். அதன்பிறகு, 'நீ எப்படி தொலைத்தாய், எங்கே தொலைத்தாய் என்று கொஞ்சம் யோசித்துப் பார். உன் நண்பர்கள் பையில் தெரியாமல் விழுந்திருக்கலாம். இன்னொரு பொருளை இப்படி தொலைக்காமல் இருக்கப்பார்' என்று மென்மையாக அறிவுறுத்தலாம். இப்படியான சூழலில், ஒரேடியாக திட்டவோ, அடிக்கவோ கூடாது, ஒரேடியாக விட்டுவிடவும் கூடாது. முடிந்தவரை பதட்டமில்லாமல் அல்லது பதட்டத்தை அடக்கி பெற்றோர்கள் இதைச் செய்யலாம்.

3. குறிப்பிட்ட வயதுவரை குழந்தைகள் தனியே ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு கார்ட்டூன் கேரக்டராகவோ அல்லது டீச்சராகவோ தங்களை நினைத்துக்கொண்டு, ரோல் பிளே செய்து கொண்டிருப்பார்கள். அதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட வேண்டும். அது அவர்கள் கற்பனையை வளர்க்கும் ஒரு முறை. அந்த இடத்தில் குறுகுறுவென்று பார்த்து அவர்களை வெட்கப்பட வைத்து அந்த வெளியை அபகரிக்கக் கூடாது. அதை தப்பி தவறிக்கூட கிண்டல் செய்துவிடக் கூடாது.

4. நம்முடைய தன்னம்பிக்கையின்மையை குழந்தைகள் மேல் ஏற்றிப் பார்க்கக் கூடாது. ஒரு அப்பாவோ அம்மாவோ, 'எனக்கு எப்பவும் எதுவுமே செட் ஆகாது. ஏதாச்சும் தடங்கல் வந்துட்டே இருக்கும். என்னைக்காவது கொஞ்சம் சிரிச்சிட்டா அன்னைக்கே கடவுள் எனக்கொரு பிரச்னை வெச்சிருப்பார்' என்கிறமாதிரி எல்லாம் அடிக்கடி குழந்தைகள் முன் சலித்துக்கொள்ளக் கூடாது. அது ஒருவிதமான பாதுகாப்பில்லாத மனநிலையை குழந்தைகளுக்குத் தரும்.

5. பேய்கள் பற்றிய பயத்தை குழந்தைகளிடம் வளர்க்கவே கூடாது. அதன் அர்த்தம், அவர்களை பேய் படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது, அதுபற்றிப் பேசக் கூடாது என்று தடுப்பதல்ல. பேய் படம் பார்த்து த்ரில்லாவது ஓர் உணர்வு என்பதை திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். ஆனால், விஞ்ஞான உலகில் பேய் என்று ஒன்றிருக்க சாத்தியமில்லை என்பதை அடிக்கடி அறிவுறுத்தி, 'இருந்தாலும் செல்லம்... ஒரு இன்ட்ரஸ்டுக்காக சினிமாவுல அப்படி வெச்சிருக்காங்க' என்று சொல்லலாம். மேலும் பயம் என்பது அனைவருக்குமான பொது உணர்வு. அதில் வெட்கப்பட எதுவுமில்லை என்பதையும் புரிய வைக்கலாம்.

6. குழந்தைகளுக்கு கலையை ஒரளவுக்கு கற்றுத் தந்துவிட்டு ஒதுங்கிவிட வேண்டும். அதிகம் திணிக்கக் கூடாது. உதாரணமாக வாட்டர் கலர் உபயோகிக்க சொல்லித் தந்துவிட்டு நாசூக்காக ஒதுங்கிவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் சொந்தமாக சிந்தித்து, கற்பனை செய்து ஒவியம் வரைவார்கள். சின்னச் சின்ன திருப்புமுனைகளை கற்றுக்கொடுக்கலாம். மற்றபடி அவர்கள் சொந்தக் கற்பனையில் திரிந்து கலையை படைக்க விட வேண்டும்.

7. போட்டி மனப்பான்மையை வளர்க்கக் கூடாது. இந்த போட்டி உலகத்தில் குழந்தைகள் எப்படி சமாளிக்கும் என்று கவலைப்பட வேண்டாம். போட்டி மனப்பான்மை யாரும் சொல்லாமலே உருவாகும் என்பதுதான் உண்மை. அதைக் குறைப்பதுதான் பெற்றோர்கள் கடமை. ஒரு விஷயத்தை அனுபவித்துப் படித்து அதை அனுபவித்து எழுதத்தான் தேர்வுக்கு செல்கிறாய் என்று சொல்லுங்கள். கொஞ்சம் வித்தியாசமாய்தான் இருக்கும், ஆனாலும் குழந்தைக்களுக்கு நன்மை கொடுக்கும் யோசனை இது. போட்டி மனப்பான்மை ஒரு பாரமாகத்தான் குழந்தைகள் மனதை துன்புறுத்தும். இதன் அர்த்தம், தேர்வுக்கு படிக்கக்கூடாது என்பதில்லை என்பதையும் புரிய வைத்துவிடுங்கள்.

8. உறவினர் உடன் இருக்கும்போது குழந்தைகளிடம் ஒரு விநோத தன்னம்பிக்கை இருக்கும். அம்மாவையோ அப்பாவையோ கண்டுகொள்ள மாட்டார்கள். சில சமயம் கொஞ்சம் நக்கலாக, திமிராகக்கூட பேசுவார்கள். இதன் அர்த்தம் 'உங்கள் மீது எனக்கு உரிமை இருக்கிறது. அதை சொந்த பந்தங்களுக்குக் காட்டுகிறேன்' என்ற பெருமைதானே தவிர, மனதார அலட்சியப் படுத்துவதல்ல. பொதுவாக அம்மாக்கள் இந்தச் சூழல்களில் கோபப்படுவார்கள். அது தேவையில்லை. குழந்தைகளின் அலட்சியத்தைக் கண்டுகொள்ளவே கூடாது.

9. பேப்பரில் படிக்கும் விபத்து, திருட்டு, கடத்தல் போன்ற செய்திகளை குழந்தைகளிடம் மறைக்கக் கூடாது. இரண்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் குழந்தைகளிடம் அதுபற்றிப் பேச வேண்டும். எதனால் அது நடந்திருக்கும், ஏன் நடக்கிறது, எப்படி பாதுகாப்பாக இருக்கலாம் என்பதுபற்றி தொடர்ச்சியாக பேசி விவாதிக்கலாம். நிச்சயம் இது அவர்களுக்குத் தேவையான விவாத தலைப்புகள்தான்.

10. அதிகப்படியான அருவருப்பு உணர்ச்சியை குழந்தைகளிடத்தில் வளர்க்கக் கூடாது. உடல்நலம் பேண எவ்வளவு அருவருப்பு உணர்ச்சி தேவையோ அவ்வளவு சொல்லிக் கொடுத்தால் போதும். அவர்கள் நண்பர்களோடு ஒரு மிட்டாயோ, வடையோ, ஒரு ஜூஸோ குடிப்பது பற்றி அளவுக்கதிகமான குற்ற உணர்ச்சி அடைய வைக்கத் தேவையில்லை.