ஒரு நிமிட ராமாயணம், பாகவதம், மஹாபாரதம்!
நூறு ஆண்டுகளுக்கு முன் எல்லா இந்துக் குழந்தைகளுக்கும் வீட்டிலுள்ள பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் நிறைய நீதிக் கதைகள் சொல்லுவார்கள். இவ்வாறு ஒரு ஆர்வத்தை உண்டாக்கியவுடன் இரவு நேரம் ஆகிவிட்டால் குழந்தைகள் தாமாகவே அவர்களிடம் செல்லுவர். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பல நல்ல பாடல்களையும் ஸ்லோகங்களையும் சொல்லிக் கொடுப்பர். ஒரே ஸ்லோகத்தில் ராமாயணம், பாகவதம், மஹாபாரதம் முதலியவற்றையும் கற்றுத்தருவர்.
18 புராணங்கள், 12 ஜோதிர்லிங்கத் தலங்கள், தமிழில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நூல்கள் ஆகியவற்றுக்கான பாடல்களையும் மாணவர்கள் அறிவர். பாடல் வரிகள் என்பன பத்திரிகைகளில் உள்ள துணைத் தலைப்பு அல்லது பெரிய தலைப்புகள் போன்றன. சிறு வயதிலேயே இவைகளைப் பயிற்றுவித்தால் அதை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்.
இந்தவகையில் ஏக ஸ்லோக (ஒரே பாட்டில்) ராமாயணம், ஏக ஸ்லோக பாகவதம், ஏக ஸ்லோக மஹாபாரதம் என்பன முக்கியமானவை.
ஏக ஸ்லோக ராமாயணம்
ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,
வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,
வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்
பொருள்:
ஆதியில் ராமன் காடு செல்லல்
பொன் மானைக் கொல்லல்
சீதா தேவி கடத்தல்
ஜடாயு இறத்தல்
சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்
வாலீ அழிவு
கடல் தாண்டல்
இலங்கை எரிப்பு
பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்
இதுவே ராமாயணம்
ஏக ஸ்லோக பாகவதம்
ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,
மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,
கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்
சைதத் பாகவதம் புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்
பொருள்:
ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு
கோபியர் வீட்டில் வளர்ப்பு
மாயா உருவ பூதனையின் அழிவு
கோவர்த்தன மலையின் உயர்வு
கம்ச, கௌரவர்கள் அழிவு
குந்தீ மகன் காப்பு
இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்
ஏக ஸ்லோக மஹாபாரதம்
ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்
த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,
லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,
பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம், ஹ்யேதன் மஹா பாரதம்
பொருள்:
ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு
அரக்கு மாளிகை எரிப்பு
சூதாட்டத்தில் நாடு இழப்பு
காட்டில் சுற்றல்
மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு
ஆநிரை கவர்தல்
போரில் அழிவு
சமாதான உடன்படிக்கை மீறல்
பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்
இதுவே மஹா பாரதம்.
சபரி – ராமன் சந்திப்பு படத்தில்