Monday, June 9, 2014

JOB INTERVIEW - நேர்காணல் தரும் பதற்றத்தை எப்படிக் குறைப்பது?



நர்மதா நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் உட்கார்ந்து கொள்ளுமாறு சைகை காட்டப்பட, உட்கார்கிறாள்.


தேர்வாளர் 1 :
பெர்ஃப்யூம் பிரமாதமா இருக்கு. பாரிஸ்லே வாங்கியதா?

நர்மதா :
(சங்கடத்தை மறைத்தபடி வருவிக்கப்பட்ட புன்னகையுடன்) உருப்படியான கேள்விகளுக்குப் போகலாமா சார்?

தேர்வாளர் 2 :
எங்கள் கேள்வி பற்றிய உங்கள் தீர்ப்பு தேவையி ல்லைன்னு நினைக்கிறோம்.

நர்மதா : சாரி சார்.

தேர்வாளர் 2 : உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க

நர்மதா : உங்க கையிலே இருக்கிற என்னுடைய சி.வி.யிலேயே என்னைப் பற்றிய எல்லா விவரங்களும் இருக்கு சார்.

தேர்வாளர் 1 : உங்க சி.வியிலே அவ்வளவு சிறப்பாக எதுவும் இல்லையே!
நர்மதாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

நர்மதா : என் ப்ராஜக்டை எங்க கல் லூரி முதல்வர் பாராட்டித் தன் கைப்பட சான்றிதழ் அளித்திருக்கிறார் சார்.

தேர்வாளர் 2 : அது ஒரு பெரிய விஷயமாக எங்களுக்குப் படவில்லை.

நர்மதா : பாட்மிண் டன் விளையாட்டில் நான் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறேன்.

தேர்வாளர் 1 : மாநில அளவில் சாதித்தவர்கள்கூட இந்த நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறார்கள்.

நர்மதா தடுமாறுகிறாள். என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை

தேர்வாளர் 2 : (நர்மதாவின் சி.வி.யைப் பார்த்தபடி) உங்க ஃபீச்சர்ஸ் நல்லா இருக்கு.

நர்மதா: (அதிர்ச்சியுடன்) சார், இதுதான் லிமிட். (வேகமாக வெளியேறுகிறாள்)

நேர்முகத் தேர்வில் நர்மதா நடந்து கொண்ட விதம் பற்றிய ஒரு சிறு அலசல் இதோ. இது நர்மதாவுக்கு மட்டுமல்ல, நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் அனைவருக்குமே - முக்கியமாகப் பெண்களுக்கு - உதவிகரமாக இருக்கும்.
பெர்ஃப்யூம் வாசனை குறித்து ஒரு தேர்வாளர் தன் கருத்தைச் சொன்னதில் தவறு எதுவுமில்லை. ஆமாம் அல்லது இல்லை என்று இந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லியிருக்கலாம். அல்லது நகைச்சு வையாக "என் ஃப்ரண்டுதான் ஜோசியம் சொன்னா சார். இந்த பெர்ஃப்யூம் போட்டுட்டுப் போனா இன்டர்வியூவிலே நிச்சயமா செலக்ட் ஆயிடுவேன்னு" என்று கூறியிருக்கலாம்.

பெர்ஃப்யூம், பாரிஸ் என்று தேர்வாளர் கேள்வியை முதன்முதலாகக் கேட்டதில் 'நீங்கள் வெளிநாடு போயிருக்கிறீர்களா?' என்று பேச்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கம் இருக்கலாம். அல்லது நர்மதாவின் டென்‌ஷனைக் குறைப்பதற்காகப் பொதுவான ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவோமே என்ற நல்ல நோக்கம்கூட காரணமாக இருக்கலாம். எனவே 'தேர்வாளர் கேட்டது அவசியமற்ற - அதாவது இர்ரெலவன்ட் கேள்வி' என்று நர்மதா தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கக் கூடாது.

ஒருவேளை தேர்வாளரின் உடல் மொழி நர்மதாவுக்குப் பிடிக்காமல் போய், கேள்வி கேட்கும் சாக்கில் தன் சபல புத்தியை அவர் வெளிப்படுத்துகிறார் என்று நர்மதா கருதினால்கூட, சாமர்த்தியமாகத்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டும். அதாவது தேர்வாளர்கள் கூறுவதை நல்லவிதமாகவும் எடுத்துக் கொள்ளலாம், மறைமுக அர்த்தமும் உண்டு என்றும் நினைக்கலாம் எனத் தோன்றினால் சந்தேகத்தின் பலனைத் தேர்வாளருக்குக் கொடுத்துவிடுவது நல்லது.

இந்த நேர்முகத் தேர்வில், குறைந்தது முதல் பாதியில் தேர்வாளர்கள் வழி தவறியதாகத் தெரியவில்லை. "உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க" என்ற கேள்வி அரதப் பழசானதுதான். ஆனால் இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலில் உங்களைப் பற்றிய சிறப்பான இமேஜை உண்டாக்க முடியும். சுமார் இரு பக்கங்களில் அடங்கிவிடக்கூடய சி.வி.யில் உங்களுடைய எல்லா ப்ளஸ்களையும் எழுதிவிட முடியாது. தவிர, தாளில் காணப்படுபவை வெறும் வார்த்தைகள். அதை யே நீங்கள் சொல்லும்போது உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலம் உயிருட்டலாம். எனவே 'என்னைப் பற்றிய விவரங்கள்தான் சி.வியில் இருக்கிறதே' என்பதுபோல் நர்மதா அளித்த பதில் முட்டாள்தனமானது. ஒரு நல்ல வாய்ப்பை அவள் இழந்துவிட்டாள். அதுமட்டுமல்ல தேர்வாளர்களை ஏதோ முட்டாள்கள்போல ('கையில் விவரங்கள் இருக்கும்போது எதற்காக அவற்றைக் கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?') சித்திரித்து அவர்களின் கோபத்தையும் சம்பாதித்துவிட்டாள்.

இதன் விளைவாகத்தான் தேர்வாளர்கள் நர்மதா அடுக்கும் சாதனைகளைக்கூடக் கொஞ்சம் அலட்சியமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டத்தில்கூட நர்மதா சுதாரித்துக் கொண்டிருக்கலாம். அவள் மாவட்ட அளவில் சிறப்பு பெற்ற விளையாட்டில் வேறு சிலர் மாநில அளவில் சிறப்புப் பெற்றிருந்தால்தான் என்ன? "இருக்கட்டும் சார். அவங்களுக்கும், எனக்கும் சேர்த்து வேலைவாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு உங்க நிறுவனம் பெரியதுதான்" என்று புன்னகையோடு கூறலாம்.

"பீச்சர்ஸ் என்று தேர்வாளர் கூறுவது சி.வி.யில் காணப்படும் நர்மதாவின் சில தன்மைகள் அல்லது சாதனைகளாகக்கூட இருக்கலாம். எனவே நர்மதா கொஞ்சம் பொறுமை காட்டியிருக்கலாம்.

ஓர் இளம் பெண்ணிடம் தேர்வாளர் ஒருவர் இப்படியொரு கேள்வியைக் கேட்டாராம். "தூங்கி முழித்த உடனே பார்த்தால், நீங்க கர்ப்பமாகி இருக்கீங்க. என்ன செய்வீங்க?''. இந்தக் கேள்விக்கு அந்த இளம் பெண் முகம் சிவந்து அழவில்லை. எரிச்சலில் வார்த்தைகளைக் கொட்டவில்லை. ஈவ் டீசிங் என்று புகார் கொடுக்கலாமா என்று யோசிக்கவில்லை. புன்னகையுடன் இப்படிப் பதிலளித்தாளாம். "உடனடியாக அந்த நல்ல விஷயத்தை என் கணவரிடம் பகிர்ந்து கொள்வேன்".

இந்த சமயோசிதமான (அதாவது Application of mind எனப்படும்) குணநலன் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும். இந்தக் குணம் உங்களுக்கு எந்த அளவு இருக்கிறது என்பதைச் சோதிப்பதற்காகக்கூடச்  சில எதிர்பாராத கேள்விகள் கேட்கப்படலாம்.
பயங்களிலேயே மிகப் பெரியது எதுவென உளவியல் ஆராய்ச்சி செய்தார்கள். அதாவது அநேகருக்கு எது மிகப் பெரிய பயம் என்று. மரணம் தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. மரண பயத்திற்கு இரண்டாம் இடம்தான். முதலிடம் பிடித்து அனைவரையும் பயமுறுத்தும் விஷயம் எது தெரியுமா?
ஒரு கூட்டத்தைப் பார்த்துப் பேசுவதுதான்! கூட்டத்தில் உரையாற்றத் தேவை இல்லாதவருக்கு வேலைக்கான நேர்காணல் அனுபவம் தான் மிகப் பெரிய பயம் எனத் தாராளமாகச் சொல்லலாம். இதைப் பயம் என்பதைவிடப் பதற்றம் என்பதுதான் சரி. தன்னை யாரோ சோதிக்கிறார்கள் என்பதே ஒருவிதப் பதற்றத்தை உருவாக்குகிறது. இது எல்லா வயதினருக்கும் எல்லாத் தரப்பினருக்கும் பொருந்தும்.

ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு பயம் இல்லையா என்ன? தங்கள் மேற்படிப்புக்கான தேர்வு எழுதும்போது மாணவர்களைப் போலவே ஆசிரியர்களையும் கடைசி நிமிடப் படிப்பு, தேர்வு பயம் எல்லாம் தொற்றிக்கொள்கிறது. அதே போல் பெரும் பதவிகளில் இருப்பவர்களும் நேர்காணல்களில் பதற்றப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.

புதிய ஆட்களைச் சந்திக்கும் பயத்திலேயே புது வேலை தேடாத ஆட்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். நேர்காணலில் சிலருக்குப் பிரத்யேகப் பயங்கள் உண்டு. மேலதிகாரிகள் அல்லது பெரும் புள்ளிகளைச் சந்திப்பதில் சிலருக்குப் பயம். ஆங்கிலம் பேசுபவர்களைக் கண்டால் பயம் சிலருக்கு. பெண்கள் நேர்காணலில் கேள்வி கேட்டால் பதற்றத்தில் ஆண்களையே பார்த்துப் பேசும் ஆண்களும் இருக்கிறார்கள். (கல்யாணமானவர்கள் பெண்கள் கேள்விகளுக்குப் பெரிதும் பழகியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்!)

பயத்தை மறைக்கச் செய்யும் அனைத்தும் பயத்தைத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கும் என்பதுதான் விந்தை. என் பால்ய கால நண்பன் ஒருவன் எந்த பிரசண்டேஷன், இண்டர்வியூ என்றாலும் ஒரு அரைக்கால் (க்வாட்டரில் பாதி...ஹி ஹி!) போட்டுக்கொண்டு அதை மறக்க பீடா, பழம், சூட மிட்டாய் என சுகந்தமாய் வருவான். அவன் கேனச் சிரிப்பே காட்டிக் கொடுத்துவிடும். தைரியம் வருவதற்காக உட்கொண்ட வஸ்து தெரிந்த விஷயத்தையும் மறக்கடித்துவிடும். பின்னர் சொதப்பல்தான்.

பதற்றம் சிலரைப் பேச விடாது. சிலரை அதிகம் பேசவைக்கும். சிலரை விநோதமாக நடந்துகொள்ள வைக்கும். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். பசிக்காது. சிறு நீர் வருவது போலத் தோன்றும். வராது. எதற்கு என்று தெரியாமல் மனம் கலவரமாய் இருக்கும். மொத்தத்தில் நம் இயல்பை மாற்றிக் காண்பிக்கும்.

சில இண்டர்வியூக்கள் 'ஸ்ட்ரெஸ் இண்டெர்வ்யூ' வகையைச் சேர்ந்தவை. அதாவது நீங்கள் பதற்றம் அடைகிறீர்களா? அல்லது எந்த அளவு பதற்றம் தாங்குவீர்கள் எனப் பார்ப்பதற்கே கேள்விகள் கேட்பார்கள். உங்களைக் கோபப்படுத்தும் கேள்விகளைக் கூடக் கேட்பார்கள். இது மன வலிமையைச் சோதிக்கும் முயற்சி. சில நிர்வாகப் பள்ளிகளிலும் ராணுவத் தேர்விலும் இதை வாடிக்கையாகச் செய்வார்கள்.

சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒரு கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்: நல்லா தயார் செய்தா இந்தப் பயமெல்லாம் வராது. தெரியலைன்னாதான் பயம் வரும்.

இது முற்றிலும் தவறு. பயத்திற்கும் பாடம் அறிவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நன்கு படித்துப் பதில் தெரிந்த பலர் பதற்றத்தில் தவறாக விடை சொல்வார்கள். அவர்களுக்கு மறந்துபோவதும் இயற்கை. இது மன இயல்பு சார்ந்த விஷயம்.

ஒரு நேர்காணல் முழுவதும் ஒரு கேள்விக்குக்கூடப் பதில் சொல்லாதவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணுவது பேதமை. அவர்களிடமிருந்து பதில் வரவழைக்கச் செய்வது ஒரு சவால். ஒரு நேர்காணல் கலை. அவ்வளவு தான்.

சரி, நேர்காணலில் பதற்றம் வந்தால் என்ன செய்யலாம்? 'மனதை நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட மூச்சு விடுங்கள். புன்னகை செய்யுங்கள். தெரிந்ததைப் பேசுங்கள்' போன்ற புராதன அறிவுரைகள் வேலை செய்யாது.
அந்த நிகழ்ச்சிக்குச் செல்லும்போது செய்துகொள்ள இது முக அலங்காரம் அல்ல. இது அக அலங்காரம். அதனால் நிறைய காலம் பிடிக்கும்.
பதற்றம், பயம், துக்கம், கோபம் போன்ற எதுவும் உங்கள் தினசரி வாழ்க்கையைப் பாதித்தால் உளவியல் உதவி அவசியம். நேர்காணலில் மட்டும் பதற்றப்படும் ஆளா அல்லது பொதுவாகப் பதற்றமான ஆளுமை கொண்டவரா என்பதை முதலில் அலச வேண்டும். State Anxiety சூழ்நிலை சார்ந்தது. Trait Anxiety ஆளுமை சார்ந்தது. இதற்கேற்பத்தான் இதைக் கையாள வேண்டும்.

இன்று பலர் பதற்றத்திற்கு உளவியல் சோதனை, சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். யோகா தொடர்ந்து செய்தால் ஒட்டுமொத்த பதற்றம் குறையும். ஆனால் ஸ்டேட் ஆங்க்சைடிக்கு உளவியல் உதவி நல்லது. நம் வேலையை, வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு ஆலோசனை எடுத்துக் கொள்வது தவறு இல்லையே? இது மேற்கத்தைய நாடுகளில் கல்விக் கூடங்களிலேயே நடக்கிறது!

தன் இருப்பு பற்றிய கவலை வருகையில் பயமும் பதற்றமும் வருகின்றன. தன்னை ஒருவர் கூர்ந்து நோக்குவதே ஓர் அசௌகரிய உணர்வுதான். பிறர் உற்று நோக்கினால் செய்யும் வேலையைக்கூடச் சரியாகச் செய்ய முடியாது.
சரி, எப்போதும் நேர்காணல் தரும் பதற்றத்தை எப்படிக் குறைப்பது? நிறைய நேர்காணல்கள் எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழி. பதற்றத்தைத் தவிர்க்கும்போது ஏற்படும் நிவாரணம் அடுத்த முறை பதற்றத்தின் வீரியத்தை அதிகரிக்கும். பதற்றத்தைத் தொடர்ந்து எதிர்கொள்ளும்போது அது பலம் இழக்கும்.

எந்த வயதானால் என்ன? உங்களுக்குத் தகுந்த வேலைகளுக்கு விண்ணப்பியுங்கள். சில இண்டெர்வியூக்களுக்குச் செல்லுங்கள். பதற்றமும் குறையும். சந்தை நிலவரமும் தெரியும். வேலைச் சந்தையில் உங்கள் மதிப்பும் தெரியும்!