Sunday, June 29, 2014

ஏமாற்றி விற்கப்படும் பாலிசிகள்!

இன்றைக்கு இன்ஷூரன்ஸ் துறையில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக மாறி இருக்கிறது 'மிஸ்செல்லிங்'.  இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி தவறான தகவல்களையும், வாக்குறுதிகளையும் தந்து விற்கப்படுவதுதான் 'மிஸ்செல்லிங்'. கடந்த எட்டு ஆண்டுகளில் தவறான தகவலையும் வாக்குறுதியையும் தந்து, ஏமாற்றி விற்கப்பட்ட பாலிசிகள் ஒன்று, இரண்டு அல்ல. சில உதாரணங்களை மட்டும் பார்ப்போம்.

மனோகரனின் கதை!

திருவள்ளூரைச் சேர்ந்தவர் மனோகரன் (பெயர் மாற்றப்பட் டுள்ளது). அவரது பக்கத்து வீட்டில் பகுதி நேர இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஒருவர் இருந்தார். 'எஃப்டி-யைவிட அதிக வருமானம் தரும் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. வருடம்  ரூ.10 ஆயிரம் என அடுத்த மூன்றாண்டு களுக்கு முதலீடு செய்தால், உங்களுக்கு ரூ.75 ஆயிரம் கிடைக்கும்' என்று சொல்லி, ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தந்தார்.  

மனோகரனுக்கு எழுத, படிக்கத் தெரியாது. மேலும், ஏஜென்டை சிறுவயதிலிருந்தே தெரியும் என்பதால் அவர் சொன்னதை அப்படியே நம்பினார். சரியான நேரத்தில் பிரீமியத் தொகையை வசூலித்த ஏஜென்ட், அதன்பிறகு மனோகரனின் கண்ணில் தென்படவே இல்லை.

இதனிடையே, தனது மகளின் திருமணச் செலவுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்த பணத்தை எடுக்க விரும்பினார் மனோகரன். ஒருவழியாக ஏஜென்ட்டைத் தேடிப்பிடித்து விஷயத்தைச் சொல்ல,   'நீங்களே சென்று வாங்கிக்கொள்ளுங்கள்' என்றார்.  ஆனால், பணத்தை எடுக்கப்போன மனோகரனுக்குத்தான்  அதிர்ச்சி. அவர் செலுத்திய தொகையைவிடக் குறைவான தொகைதான் அவருக்குக் கிடைத்தது. ரூ.75 ஆயிரம் கிடைக்கும் என்று போனவருக்கு, வெறும் ரூ.25 ஆயிரம்தான் கிடைத்தது. தன் தலையில் கட்டப்பட்ட பாலிசி யூலிப் வகையைச் சேர்ந்தது. இதில் போட்ட பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்பவே இந்த பாலிசியிலிருந்து வருமானம் கிடைக்கும் என்கிற தகவல்கள் மனோகரனுக்கு சொல்லப்படவே இல்லை. ஆனால், தவறான வாக்குறுதிகளை மட்டும் அள்ளிவிட்டிருக்கிறார் அந்த பலே ஏஜென்ட்.

விஞ்ஞானியும் ஏமாந்தார்!

மனோகரன் படிக்காதவர்.  அவர் எளிதில் ஏமாந்துபோனார் எனில், படித்தவர்கள்கூட நிறையவே ஏமாந்திருக்கிறார்கள்.  லக்னோவைச் சேர்ந்தவர் வீரேந்திர பால் கபூர். விஞ்ஞானியான இவருக்கு விற்கப்பட்ட யூலிப் பாலிசிக்காக ஐந்து ஆண்டுக்குமுன் ரூ.50,000 பிரீமியம் கட்டினார். அது இப்போது வெறும் ரூ.248-ஆகக் குறைந்திருக்கிறது.

ஐஆர்டிஏ-வின் அதிரடி!

இப்படி ஒவ்வொரு ஊரிலும் பல ஆயிரம் மனோகரன்களும் வீரேந்திர பால் கபூர்களும் இருக்கவே செய்கிறார் கள். கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் இவர்கள் கண்ட மிகப் பெரிய நஷ்டம், இன்று இன்ஷூரன்ஸ் துறையையே முன்நோக்கி செல்லவிடாதபடிக்கு ஒரு காரணமாக மாறியிருக்கிறது. அதனால், இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஏமாற்றி விற்கப்படுவதைத் தடுக்க (மிஸ்செல்லிங்) இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியமான ஐஆர்டிஏ இப்போது பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் ஐஆர்டிஏ ஓர் அறிக்கையை அனுப்பி உள்ளது. வருகிற ஜூலை 20-ம் தேதிக்குள், 'மிஸ்செல்லிங்' செய்வதைத் தடுக்க இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்' என அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏன் 'மிஸ்செல்லிங்'?

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் பாலிசிகளை விற்கும்போது ஏன் 'மிஸ்செல்லிங்' செய்கிறார்கள் என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த இன்ஷூரன்ஸ் ஆலோசகர் பலராமனிடம் கேட்டோம்.

''பாலிசி எடுத்து 5, 6 வருடம் பிரீமியம் செலுத்தியபிறகு, அந்த பாலிசி சரியாகச் செயல்படவில்லை, இப்போது இதைவிட நல்ல பாலிசி வந்துள்ளது, இதை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக ரிட்டர்ன் கிடைக்கும் என பாலிசிதாரரிடம் சொல்லி, புது பாலிசியை எடுக்க வைக்கிறார்கள் சில ஏஜென்ட்டுகள். யூலிப் பாலிசிகளில்தான் இது அதிகம் நடக்கிறது. இதற்கு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் உடந்தையாக இருக்கின்றன. இதற்கு காரணம், ஏற்கெனவே விற்பனை செய்த பாலிசிக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் ஏஜென்ட்டுகளுக்குக் கிடைத்திருக்கும். இப்போது புதிதாக விற்கும் பாலிசிக்குத் மறுபடியும் ஆரம்பகாலத்தில் அதிக  கமிஷன் கிடைக்கும் என்கிற ஆசையில் சில ஏஜென்ட்டுகள் இப்படி 'மிஸ்செல்லிங்' செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.  

எப்படி குறைக்கலாம்?

இந்த 'மிஸ்செல்லிங்'கை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நினைத் தால் குறைக்கலாம். இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், பாலிசி எடுத்தவரை நேரில் அழைத்தோ அல்லது போன் மூலமாக தொடர்பு கொண்டோ அந்த பாலிசி பற்றிய விவரங்கள் அவருக்கு சரியாக எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறதா என்பதைச் சோதிக்க வேண்டும். ஆனால், எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனமும் இதைச் செய்வதில்லை.

அடுத்த முக்கியமான பிரச்னை, இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மக்களிடம் விநியோகம் செய்வதற்கு  சரியான நபர்கள் கிடைப்பதில்லை. இதனால் அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை ஏஜென்ட் வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். 'இந்த வேலையை முழுநேரமாகச் செய்ய வேண்டாம். பகுதி நேரமாகச் செய்தாலே மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம். ஒரு சின்ன பரீட்சை எழுதினால் போதும்' என்று சொல்லித்தான் ஏஜென்ட் வேலைக்கு ஆட்களைச் சேர்க்கிறார்கள்.

இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் ஆவதற்கு ஐஆர்டிஏ நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கான பயிற்சியை அந்தந்த நிறுவனங்களே நடத்துகின்றன. இந்தத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. ஆனால், இதில் 17 மதிப்பெண் எடுத்தாலே ஒருவர் பாஸாகி, ஏஜென்ட் ஆகிவிடலாம். சில ஆண்டுகளுக்குமுன் இது 25 மதிப்பெண்ணாக இருந்தது.  ஏஜென்ட்டுகளின் அறிவுத்திறனை உயர்த்த 25 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி என்கிற மாற்றத்தை ஐஆர்டிஏ கொண்டுவர வேண்டும்.

சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே விநியோகம் செய்த பாலிசியைப் புதுப்பிக்கும் சதவிகிதத்தை யும் கவனிக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு விற்பனை செய்த பாலிசியில் 80 சதவிகிதத்துக்குக் கீழ் புதுப்பித்தல் இருந்தால் அந்த ஏஜென்ட்டுகளின் ஊக்கத் தொகையைக் குறைக்கிறது'' என்றார்.

அதிக கமிஷனுக்கு ஆசை!

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் 'மிஸ்செல்லிங்' செய்யப்படுவதற்கான காரணங்களைச் சொன்னார்  இந்தியா நிவேஷ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் வி.கிருஷ்ணதாசன்.

''இன்ஷூரன்ஸ் துறையில் 'மிஸ்செல்லிங்'கானது திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. இன்ஷூரன்ஸ் விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் டார்கெட் உள்ளது. இந்த டார்கெட்டை முடித்தால் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லலாம்; பரிசு தொகை உண்டு என பல பரிசு திட்டங்களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கிறது. இதற்கு ஆசைப்பட்டு ஏஜென்ட்டுகளும் வேக வேகமாக பாலிசிகளை விற்பனை செய்கிறார்கள்.

ஒவ்வொரு பாலிசிக்கும் ஒவ்வொரு விதமாக கமிஷன் கிடைக்கிறது. குறைவாக கமிஷன் கிடைக்கும் பாலிசிகளை எந்த இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டும் விற்க விரும்புவதில்லை. அதிக கமிஷன் கிடைக்கும் பாலிசிகளை  விற்பனை செய்வதில் மட்டும்தான் ஏஜென்ட்டுகள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பாலிசிதாரரின் தேவை என்ன என்று பார்ப்பதைவிட, தனக்கு எதில் அதிக கமிஷன் கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஏஜென்ட்டுகள் உள்ளாகிவிடுகிறார்கள்.

மூத்த குடிமக்களுக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது தேவையே இல்லை. லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் ஈட்டக்கூடியவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவரது குடும்பத்தைப் பொருளாதார ரீதியாகக் காப்பாற்றுவதற்காகத்தான். ஆனால், சில ஏஜென்ட்டுகள் மூத்த குடிமக்களுக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை விற்பனை செய்கிறார்கள். இதையெல்லாம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் கண்டுகொள்வதே இல்லை.

10, 20 வருடத்துக்கு பிரீமியம் செலுத்த வேண்டிய பாலிசிகளை சிங்கிள் பிரீமியம் பாலிசி எனச் சொல்லி விற்பனை செய்வதும் நடக்கிறது. இதுபோலவே, பாலிசியின் கால அளவை குறைத்தும் பாலிசியை விற்பனை செய்கிறார்கள். அதாவது, 10 வருட பாலிசியை 5 வருட பாலிசி என்று சொல்லி விற்கிறார்கள். பாலிசி எடுப்பவர் பாலிசி காலம் முடிந்துவிட்டது. முதிர்வு தொகையை வாங்கிக்கொள்ளலாம் என நினைத்து இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்கு செல்லும்போதுதான் இந்த உண்மையே பலருக்கும் தெரிய வருகிறது'' என்றார்.

பாலிசிதாரர்களும் பொறுப்பு!

மும்பையைச் சேர்ந்த கவர்ஃபாக்ஸ் இன்ஷூரன்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் இயக்குநர் சீனிவாசனிடம் 'மிஸ்செல்லிங்' பற்றி கேட்டோம்.

''ஏஜென்ட்டுகளின் நடவடிக்கை களை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றன. மூன்று அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஏஜென்ட்டு களிடம் அவர்கள் விற்பனை செய்யும் பாலிசிகளின் தன்மை, அதன் பயன்கள் குறித்து கேள்விகள் கேட்கப் படுகின்றன. இதில் சரியாகப் பதில் அளிக்காதவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் தரப்படுகிறது. ஆனால், ஏஜென்ட்டுகள் இந்த வகுப்புகளுக்குச் சரியாகப் போவதே இல்லை. காலையில் வகுப்புக்கு சென்று கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள். இந்த விஷயம் நிறுவனத்துக்குத் தெரிய வரும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனம், ஏஜென்ட்டை பணிநீக்கமும் செய்கிறது''  என்றவர், 'மிஸ்செல்லிங்'கைத் தடுக்கும் வழிகளையும் சொன்னார்.  

''இந்த விஷயத்தில் நாம் ஏஜென்ட்டுகளை மட்டுமே குறை சொல்லிப்  புண்ணியமில்லை. பாலிசி எடுப்பவர்கள் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு செல்போன் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு பலரிடம் விசாரிக்கிறோம். அந்தப் பொருளின் செயல்பாடு, விலை பற்றி  தேடித்தேடி தெரிந்துகொள்கிறோம். அதன்பிறகே வாங்குகிறோம். ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது மட்டும் இதை செய்வதில்லை. இப்போது எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் கஸ்டமர்கேர் எண் வைத்துள்ளது. இதில் தொடர்புகொண்டால் உங்களுக்குத் தெரிந்த மொழியில் உங்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பார்கள். ஆனால், இதை யாருமே செய்வதில்லை. படிக்காதவர் மட்டுமில்லை, படித்தவர்களும் இன்ஷூரன்ஸ் விஷயத்தில் இப்படிதான் செயல்படுகிறார்கள். இதை இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இனியாவது, பாலிசி எடுக்கும்முன் அது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை எந்த விசாரணையும் செய்யாமல் எடுத்திருந்தால், பாலிசிப் பத்திரம் கையில் கிடைத்த 15 நாட்களுக்குள் அதுபற்றி முழுமையாக விசாரித்து, அந்த பாலிசி தனக்கு ஏற்றதல்ல என்பது தெரிந்தால், உடனே அதை ரத்து செய்துவிடலாம்'' என்றார் அவர்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பெஸ்ட்!

ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது குடும்பத்தின் பாதுகாப்புக்குதான். இதை முதலீட்டுத் திட்டமாகக் கருதுவது தவறு. எனவே, அதிக கவரேஜ் அளிக்கும் குறைவான பிரீமியம் கொண்ட டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை வேறு நல்ல திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. இப்படி செய்யும்போது 'மிஸ்செல்லிங்' பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இல்லை. இனியாவது, இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் என்னை ஏமாற்றிவிட்டார் என்று புலம்புவதற்கு பதில், நாம் எடுக்கும் பாலிசிகளைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு எடுப்போமாக!