Wednesday, March 19, 2014

உணவு ஆசியைச் சுமந்து வருபவை - அவற்றை வீண்செய்யலாகாது

நம் புராணங்களில் பெரியோர்களின் ஆசிர்வாதங்களைத் தாங்கி, அவற்றைத் தேவையானவர்களுக்கு அருளும் சாதனமாகவும் உணவுப் பொருள்கள் பயன்பட்டிருக்கின்றன. இப்போதும் பெரியவர்கள் உணவுப் பொருளான அரிசியைத்தான் அட்சதையாகத் தூவி ஆசிர்வதிக்கிறார்கள்.

தசரதனுக்குப் பிள்ளை வரம் என்ற ஆசிர்வாதம் கிட்டியது, நெருப்பிலிருந்து வந்த தேவன் அளித்த பாயசம் என்ற உணவுப் பொருளால்தான். இறைவனின் ஆசிர்வாதம் பாயசத்தில் அடங்கியிருந்தது.

பொதுவாகவே, உணவுப் பொருள்கள் மேலோரின் ஆசியைச் சுமந்து வருபவை. அவற்றை வீண்செய்யலாகாது. உணவாகும் அனைத்துப் படைப்புகளின் மீதும் இறைவனின் விசேஷ கருணை படிந்துள்ளது. இல்லாவிட்டால் மாதுளை, பலா போன்ற பழங்கள் அத்தனை அழகிய பாத்திரங்களில் (கன்டெய்னர்களில்) வைத்துப் பாதுகாப்பாகப் படைக்கப்பட்டிருக்குமா என்ன? மாதுளம்பழத்தை உடைத்துப் பார்க்கும் யாரும் தனித்தனிப் பகுதிகளில் அதனுள்ளே மாதுளை முத்துகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகை ஒரு கணமேனும் வியக்காமல் இருக்க இயலுமா? அழகிய பழங்களைச் சாப்பிடாமல், அழுக வைத்துத் தூக்கி எறிவது இறைவனின் அழகு உணர்ச்சியை அவமதிப்பது ஆகாதா?

முனிவர்கள் பலர், தங்கள் ஆசிகளை மாம்பழம் மூலமாக வழங்கினார்கள். அவர்கள் அருளாசியோடு தந்த அந்தப் பழத்தை உண்ட பெண்கள் மகப்பேறு அடைந்ததாகப் பல நிகழ்வுகள் புராணங்களில் உண்டு.

காரைக்காலில் வாழ்ந்த புனிதவதியின் கதையை நாம் அறிவோம். கணவன் பரமதத்தன் கொடுத்த இரண்டு மாங்கனிகளில், பசித்து வந்த சிவனடியார்க்கு ஒன்றைக் கொடுத்தாள். பின்னர், கணவன் வேண்டியதால், சிவனருளால் புதியதொரு மாங்கனி வரவழைத்தாள். அந்தச் செயலால் காரைக்கால் அம்மையாராக உயர்ந்த புனிதவதியின் பக்திச் சிறப்பை நினைவுகூர்ந்து இப்போதும் குறிப்பிட்ட நாளில் காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருவரும் தன் வருவாயை ஐந்து சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை விருந்தினருக்காகச் செலவிட வேண்டும் எனக் கட்டளையிடுகிறார் திருவள்ளுவர். 'தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை!' என்பது அவர் தரும் வீட்டுக்கான பட்ஜெட் கணக்கு.

ஆக, விருந்தினரை உபசரிப்பது நம் இந்திய மரபு என்பது தெளிவாகிறது. ஆனால், எப்படி உபசரிக்க வேண்டும் என்பதில்தான் தெளிவின்மை நிலவுகிறது.

விருந்தினருக்கு எது தேவையோ, எது பிடிக்குமோ, அதைக் கொடுத்து அவர்களை உபசரிப்பதுதான் முறை. அல்லாமல், அவர் வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு ஒரு பொருளை அவர்கள் இலையில் கவிழ்த்து, உண்ணுமாறு வற்புறுத்துவது உபசரிப்பு அல்ல; சித்ரவதை!

கல்யாண விருந்துகளில் சாப்பாட்டு அரங்கின் கதவைச் சாத்திவிட்டு, ஏராளமான இலைகளில் எண்ணற்ற காய்கறிகளைப் பரிமாறி, அதன் பின்னர் கதவைத் திறந்துவிடுகிறார்கள். போய் அமர்பவர்கள் ஏற்கெனவே பரிமாறப்பட்ட இலைகளின் முன்தான் அமர வேண்டியிருக்கிறது. இதனால் எத்தனை உணவுப் பொருள்கள் அர்த்தமில்லாமல் வீணாகின்றன! அந்தக் கறிகாயைப் பயிரிட்டவர்கள், அது வளர உரமிட்டவர்கள், அந்தச் செடிக்கு நீர் பாய்ச்சியவர்கள், கறிகாயை நறுக்கிய சமையல் கலைஞர்கள், உப்பும் மிளகாயும் இட்டுப் பக்குவம் செய்தவர்கள் என எத்தனை பேரின் உழைப்பை நாம் அலட்சியம் செய்கிறோம்!

இலைகளின் முன் விருந்தாளிகள் அமர்ந்தபின், அவர்களின் விருப்பத்தைக் கேட்டு அளவோடு பரிமாறினால், எத்தனை உணவுப் பொருளைச் சேமிக்கலாம்! அப்படி மிச்சம் பிடிக்கும் உணவுப் பொருளைக் கொண்டு இன்னொரு கல்யாணத்தையே நடத்திவிடலாமே!

சிலரிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. என்ன உபசரித்தாலும், தங்களது தேவைக்கு மேல் இலையில் பரிமாற அவர்கள் அனுமதிப்பது இல்லை. அவர்கள் சாப்பிட்டு எழுந்து செல்லும்போது, இலை சுத்தமாகத் துடைத்து வைத்தாற்போல் இருக்கும்.

எழுத்தாளர் அமரர் தீபம் நா.பார்த்தசாரதி அப்படிச் சாப்பிடும் பழக்கம் உடையவர். அவர் எந்த விருந்தில் கலந்துகொண்டாலும், தன் தேவைக்குமேல் இலையில் எதையும் பரிமாற அனுமதிக்க மாட்டார். கறிவேப்பிலை உள்பட இலையில் உள்ள அனைத்தையும் மீதம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார். பல இடங்களில், அவர் சாப்பிட்டு முடித்ததும் வியப்போடு அவரையும் அவர் சாப்பிட்ட இலையையும் சேர்த்துப் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். புகைப்படப் பிரதியைப் பார்த்தால், பரிமாறப்படாத இலை முன் அவர் அப்போதுதான் சாப்பிட அமர்ந்த மாதிரி தோன்றும். இன்று அத்தகைய உயர்ந்த கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர்?

இப்போது பல திருமணங்களில், தானே எடுத்துப் பரிமாறிக்கொண்டு சாப்பிடும் 'பஃபே' முறை வந்துள்ளது. உணவை வீணாக்காமல், தேவைக்கேற்ப எடுத்து ருசிக்க வேண்டும் என்கிற நோக்கில் பின்பற்றப்படும் பாராட்டுக்குரிய முறைதான் இது. இதிலும் ஒரு சிலர் உணவை வீண்செய்வது என்பது கொடுமை!

விருந்தினருக்கு எது பிடிக்குமோ அதை, அவர்கள் எந்த அளவு சாப்பிடுவார்களோ அந்த அளவு கொடுத்து உபசரிப்பதே சரியான விருந்து உபசாரம். மாறாக நிகழ்த்தப்படும் விருந்துபசாரங்கள் யாவும் ஒருவகை வன்முறைதான். அளவற்ற அன்பே ஆனாலும், மற்றவருக்கு தர்மசங்கடத்தையும் மனக்கஷ்டத்தையும் ஏற்படுத்தினால், அது வன்முறை அல்லாமல் வேறென்ன?