Tuesday, September 18, 2012

ஸ்ரீ தேசிகப் பிரபந்தம் - ஆகார நியமம்

மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார் அவர். இதற்கு மேல் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது என்கிற நிலை. அதனால் கண்ணில் பட்ட ஒரு வீட்டுத் திண்ணையில் ஏறிப் படுத்துக்கொண்டார். இங்கும் அங்குமாக உருண்டார். சரிப்பட்டு வரவில்லை. தஸ்ஸு புஸ்ஸென்று பெருமூச்சு விட்டார்.

சத்தம் கேட்டு, அந்த வீட்டுக்காரர் வெளியில் வந்து பார்த்தார். மிதமிஞ்சி உண்டுவிட்டுத் திண்ணையில் உருண்டுகொண்டிருந்தவரின் பரிதாப நிலையைப் புரிந்துகொண்டார். அவர் மீது இரக்கப்பட்டு, ''கொஞ்சம் கூடுதலா சாப்பிட்டுட்டீங்க போல! கவலைப்படாதீங்க, என்கிட்டே ஒரு பவர்ஃபுல் ஜீரண மாத்திரை இருக்கு; தரேன். போட்டுக்குங்க! நொடியில எல்லாம் ஜீரணமாயிடும்!'' என்றார்.

அதைக் கேட்டதும் சாப்பாட்டுக்காரர் அவரைப் பக்கத்தில் வரும்படி சமிக்ஞை செய்தார். வீட்டுக்காரர் அருகில் வந்ததும், 'பொளேர்' என்று அவரது கன்னத்தில் அறைந்தார்.

அடி தாங்காமல் வீட்டுக்காரர் அலறினார். ''உங்களுக்கு நல்லதுதானே சொன்னேன்! அதுக்கு ஏன் அடிக்கறீங்க?'' எனக் கேட்டார்.

அதற்குச் சாப்பாட்டுக்காரர் சொன்னார்... ''யோவ்! ஜீரண மாத்திரை கொள்ற அளவுக்கு வயித்துல இடம் இருந்தா, இன்னும் ஒரு விள்ளல் வடையை உள்ளே தள்ளியிருக்க மாட்டேனா?''

இது காமெடி கதை இல்லை; நாம் எல்லோருமே வகையாகச் சிக்கிக்கொள்ளும் ஒரு டிராஜிடி கதை!

கீதை சொன்ன கண்ணன் முதல் சமகால வாரியார் சுவாமிகள் வரை, 'உணவு உணர்வைக் கெடுக்கும்' என்று வகை வகையாகச் சொல்லி இருந்தும், உணவு விஷயத்தில் நமக்குப் போதுமான தெளிவு இல்லை. அந்தத் தெளிவை ஊட்டுகிறது ஓர் அற்புதமான நூல். அளவில் சிறியதுதான்; ஆனால், அதில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

சோற்றில் தொடங்கி காய்கறி, பால், தண்ணீர் எனத் தொடர்ந்து, வெற்றிலைப் பாக்கு வரை, அபூர்வமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நாம் அதிலிருந்து சுருக்கமாகப் பார்க்கலாம்.

கொடியவர்கள் கண் பட்ட சோறு,

தீய்ந்துபோன சோறு, ஆடை,

எச்சில், தும்மல் ஆகியவை பட்ட சோறு,

நாய் போன்ற விலங்கினங்கள் வாய் வைத்த சோறு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

மனிதர்கள், பசுக்கள் முகர்ந்த உணவு,

ரோகிகள் தொட்டது,

ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை இருந்த உணவு,

அன்போடு பரிமாறப்படாத சோறு,

சந்நியாஸியிடம் பெற்றது,

சந்நியாஸி பாத்திரத்தில் பட்டது,

மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவற்றின் வாய் பட்டது... இப்படிப்பட்ட உணவுகளையும் உண்ணக்கூடாது.

அடுத்தவர்களின் தோட்டத்தில் இருந்து உரியவரின் அனுமதியில்லாமல் பறித்தவற்றை உண்ணக்கூடாது.

கடையில் இருந்து வாங்கிவந்து கழுவாமல் சமைத்த காய்கறி போன்றவற்றை உண்ணக்கூடாது.

முறைகேடாகவோ, தீய வழியிலோ சம்பாதித்த மற்றும் சம்பாதித்தநபர் கொடுக்கும்உணவு,

நாவுக்குப் பொறுக்க முடியாத சூடு- காரம் உள்ளவை,

அழுக்கான உப்பு சேர்த்த பண்டம் ஆகியவற்றை உண்ணக்கூடாது.

எள் கலந்த பண்டங்களையும், நல்லெண்ணெயும் தயிரும் கலந்த உணவையும் இரவில் உண்ணக்கூடாது.

அந்தி சாயும் நேரத்திலும் நள்ளிரவிலும் உண்ணக்கூடாது.

இடது கையால் உண்ணக்கூடாது.

உண்ணத் தொடங்கியபின் எச்சில் இலையில் பரிமாறிய நெய்யையும்,

இரண்டு முறை பக்குவம் செய்த உணவையும் உண்ணக்கூடாது. (ரெப்ரிஜரேட்டர் வைத்திருப்பவர்கள் பழைய உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது இதில் அடங்கும்)

பக்குவம் செய்யாத பச்சையான உணவு (பழம் முதலானவை) வகைகளை மட்டுமே கையால் இடவேண்டும்.

விருந்தினர்களுக்கு வேறு, தனக்கு வேறு என்று பிரித்துப் பாகம் செய்த உணவை உண்ணக்கூடாது.

இப்படிப் பட்டியல் போடும் அந்த நூல், நாம் குடிக்கக்கூடாத பாலின் வகைகளையும் பட்டியல் போடுகிறது.

குதிரை, கழுதை ஆகியவற்றின் பாலை அருந்தக்கூடாது.

இரட்டைக் கன்றுள்ள பசுவின் பால்,

ஒட்டகத்தின் பால்,

உப்பு கலந்த பால்,

மோர் கலந்த பால்,

கருவுற்ற பசுவின் பால்,

கன்றை இழந்த பசுவின் பால்,

வேறொரு பசுவின் கன்றால் கறந்த பால்,

திரிந்துபோன பால்,

செப்புப் பாத்திரத்தில் வைத்த பால்,

காய்ச்சும்போது திரிந்துபோன பால் ஆகியவற்றைக் குடிக்கக்கூடாது.

அடுத்து, குடிநீரைப் பற்றிச் சொல்கிறது அந்த நூல்.

கங்கை நீரைத் தவிர முதல் நாள் பிடித்து வைத்த நீர் எதையும் குடிக்கக் கூடாது.

கால் கழுவிய பின் மீதி உள்ள நீர்,

கலங்கிய நீர்,

தீயில் காய்ச்சிய இளநீர்,

சிறு குழியில் தேங்கிய நீர் ஆகியவற்றைக் குடிக்கக்கூடாது.

அடுத்தது வெற்றிலைப் பாக்கு போடுவதைப் பற்றி விவரிக்கிறது அந்த நூல்.

முதலில் வெற்றிலையைப் போட்டு சிறிது மெல்ல வேண்டும்; அதன் பிறகே பாக்கைப் போட்டுக்கொள்ள வேண்டும். வெற்றிலையைத் தின்னாமல், முதலிலேயே பாக்கைத் தின்னக்கூடாது. வெற்றிலை, பாக்கு இரண்டையும் ஒன்றாகப் போட்டும் மெல்லக் கூடாது. வெற்றிலையின் அடி, நுனி, நரம்பு ஆகியவற்றைத் தின்னக் கூடாது. சுண்ணாம்பு வைத்த வெற்றிலையை உபயோகிக்கக் கூடாது. வெற்றிலை போட்டுக்கொள்ளும்போது, தண்ணீர் குடிக்கக்கூடாது (நாம் பார்த்தது சுருக்கமே).

'இதையெல்லாம் படித்து உணர்ந்தும் சந்தேகம் வருகிறதா? சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த பெரியோர்களிடம் கேட்டு சந்தேகங்களை ஒழித்துக் கொள்!' என்று சாஸ்திரத் தகவல்களோடு நிறைவு செய்கிறது நூல்.

இவ்வளவு தூரம் நீள நெடுகச் சொல்லிக்கொண்டு வந்த இந்த நூலாசிரியர், ''அறியாமை என்னும் இருள் மிகுந்தது இந்த உலகம். அந்த இருளை நீக்குவதற்காக, கை விளக்கைப் போல சாஸ்திரங்களைக் காட்டியருளினார் பகவான் கண்ணன். அந்த சாஸ்திரங்களின் அர்த்தங்களை ஆசார்ய புருஷர்களிடம் கேட்டறிந்து சொன்னோம். நிலையில்லாத உடலையும், காசு- பணத்தையும் நிலையாக எண்ணித் தீயதையே செய்யும் தீயவர்களின் வலையில் அகப்படாதீர்கள். மனம் போன போக்கில், கண்டதை உண்டு கெட்டுப் போகாதீர்கள். பேரருளானன் திருவடிகளில் பக்தியை வளர்க்கக்கூடிய, சாத்விகமான உணவையே உண்ணுங்கள்!'' என்று கூறி நூலை நிறைவு செய்கிறார்.

குழந்தைக்குச் சொல்வதைப் போல, கனிவோடும் அக்கறையோடும் சொல்லி அறிவுறுத்தியிருக்கும் இந்த நூலாசிரியர் அடக்கம், அமைதி, பண்பாடு, ஒழுக்கம் என அனைத்திலும் சிறந்தவராக இருந்தவர்.

அனைத்தும் அறிந்தவர். தெய்வத்தையே நேருக்கு நேராகக் காணும் ஆற்றல் படைத்தவர். அவரின் திருநாமம், ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன். அவரைப் பற்றி ஒரு சில குறிப்புகளில் சொல்லி அடக்கிவிட முடியாது. தன் காலத்திலேயே ஈடு இணை இல்லாத புகழும் பெருமையும் பெற்ற மகான்.

ஸ்ரீதேசிகரின் காலம், 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, 14-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதி வரை. இவர் ஏராளமான நூல்களை உருவாக்கி இருக்கிறார். ஒவ்வொன்றுமே மனித குலத்திற்கு நல்வழிகாட்டக் கூடியது.

நாம் பார்த்த தகவல்கள் அடங்கிய நூலின் பெயர், 'ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்'. 'ஆகார நியமம்' என்ற பகுதியில், இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து ஒரு பாடல்...

ஒரு குளம்பி இருகன்றி ஒட்டகப் பால்
உப்புடன் பால் மோருடன் பால் மாதர் தம் பால்
கருவுடையவற்றின் பால் கன்றிலாப் பால்
மறு கன்றால் கறந்திடும் பால் திரிந்திடும் பால்
திருமகளார் கணவனலாத் தெய்வத்தின் பேர்
சின்னமுடைய வற்றின்பால் செம்மறிப்பால்
பரிவதிலந்தணர் விலைப்பால் செம்பினிற் பால்
தீதாம்பால் இவையனைத்தும் பருகாப்பாலே!


(Courtesy: Sakthi Vikatan)