Saturday, September 15, 2012

வேலைக்குச் சேர்ந்த புதிதில் எப்படி இருக்க வேண்டும்?

நிறுவனங்கள் வைக்கும் பல நேர்முகத் தேர்வுகளைத் தாண்டிதான் ஒருவருக்கு வேலை கிடைக்கிறது. கஷ்டப்பட்டுக் கிடைத்த அந்த வேலையை எத்தனை பேர் தக்கவைத்துக்கொள்கிறார்கள்? அல்லது அதை நன்றாகச் செய்து அடுத்த நிலைக்கு எத்தனை பேர் செல்கிறார்கள் என்று பார்த்தால் அவர்களின் எண்ணிக்கை குறைவே.

காரணம், வேலைக்குச் சேர்ந்த புதிதில் அலுவலகச் சூழலுக்கு ஏற்றவாறு, அவர்களின் வேலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக்கொள்ளத் தெரியாததே. இதனால், சில நாட்களிலேயே நிறுவனத்தை விட்டு வெளியேறிவிடுகிற கட்டாயம் சிலருக்கு ஏற்படுகிறது. அப்படி இல்லாமல் இருக்க, வேலைக்குச் சேர்ந்த புதுசில் எப்படி இருக்க வேண்டும்? நம்மை நாமே தயார் செய்துகொள்வது எப்படி? என்று சொல்கிறார் சென்னை காம்ஃபை சொல்யூஷன் மனிதவள ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே.சுகுமாரன். 

''இன்றைக்கு வேலைவாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. ஆனால், அந்த வேலைகளுக்குத் தகுதியான ஆட்கள் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. வேலை கிடைத்ததும் 'அப்பாடா எனக்கு வேலை கிடைத்துவிட்டது' என பெரிய சாதனையை செய்துவிட்டது போல பெரும்பாலானவர்கள் சந்தோஷம் கொள்கிறார்கள். வேலை கிடைப்பது பாதிக் கிணறைத் தாண்டியதற்கு மட்டுமே சமம். மீதிக் கிணறையும் தாண்ட வேண்டும் என்றால், அந்த வேலையைத் தக்க வைத்துக்கொள்ளும் திறமை வேலை பார்ப்பவர்களிடம் இருக்க வேண்டும். 

வேலைக்குச் சேர்ந்த புதிதில் அலுவலகம் கொடுக்கும் வேலைகள் மட்டுமல்லாமல், தங்கியிருக்கும் இடத்திலிருந்து பணியிடத்திற்கான தூரம், பயண உபாதைகள், உணவு சார்ந்த விஷயங்கள் அனைத்தும் சிரமமாகவே இருக்கும். நம் உடல் அந்த சிரமமான விஷயங்களை சகித்துக்கொள்ளாமலும் போகலாம். ஆனால், நாம்தான் அந்த சூழ்நிலைகளை நமக்கானதாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதை தவிர்க்க அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே தங்க இடம் பார்த்துக்கொள்வது நல்லது.


வேலைக்குச் சேர்ந்த புதிதில் அலுவலகச் சூழலுக்குத் தங்களை பழக்கப்படுத்திக்கொண்டு, வேலை சார்ந்த விஷயங்களை சீனியர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு, நாளுக்கு நாள் அந்த வேலைகளை ஈடுபாட்டுடன் செய்து, அது தொடர்பான அறிவையும் அனுபவத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.


புதிதாக வேலைக்குச் சேர்ந்த மாத்திரத்தில் மிக முக்கியமான போன்களை மட்டுமே அலுவலக நேரத்தில் பேசலாம். அடிக்கடி நீண்ட நேரம் போன் பேசினால், நம் உயரதிகாரிகள் நம்மை கட்டம் கட்டி கவனிக்க வாய்ப்புண்டு.


அலுவலகத்தில் தனக்கு எந்த மாதிரியான வேலைகளை நிறுவனம் தந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அந்த வேலைகளை மட்டும் உரிய நேரத்தில் கச்சிதமாகச் செய்து முடிப்பது நல்லது.


எந்தவொரு நிறுவனமும் ஆரம்பத்தில் ஒரு பணியாளருக்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பயிற்சிக் காலமாக வைத்திருக்கும். இந்த காலகட்டத்தை 'எவால்யுவேஷன் பிரீயட்' என்று சொல்வார்கள். இந்த காலகட்டத்தில் பணியாளர்களின் நடவடிக்கைகளை பார்வையிட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள். இந்த காலத்தில்தான் அவர்களுக்கு வேலை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதை எப்படி மேற்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நிரந்தர  பணியாளர் என்கிற தகுதிக்குத் தேர்வு செய்வார்கள்.


இந்த பயிற்சி காலங்களில் விடுப்பு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். காலதாமதமாக அலுவலகம் செல்லக் கூடாது. கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதோடு மட்டுமல்லாமல், அது சார்ந்த சந்தேகங்களை சீனியர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.


பயிற்சி காலங்களில் நிறுவனம் எதிர்பார்க்கும் அனைத்துத் திறமைகளும் உங்களிடம் இருக்கும்பட்சத்தில் நிறுவனம் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் தயக்கம் காட்டவே காட்டாது.


இன்றைய சூழலில் நிறுவனங்கள், தனது பணியாளர்களை எப்படியாவது வேலை செய்ய வைத்துவிட வேண்டும் என்கிற மனநிலையில்தான் இருக்கிறது. இதனால் அலுவலக நேரத்தைவிட, அதிகமாக நேரம் செலவிட்டு பணிகளை முடிக்க வேண்டியதிருக்கும். எனவே, வேலை முடிகிறதோ இல்லையோ, உரித்த நேரத்தில் அலுவலகம் விட்டு கிளம்பிவிட வேண்டும் என்கிற  மனநிலையில் இருந்து நம்மை நாமே மாற்றிக்கொள்ள வேண்டும்.


நமக்குத் தரப்பட்ட வேலை போக, நம்மை தனிமைப்படுத்திக் காட்ட ஏதேனும் வாய்ப்புகள் கிடைத்தால், அதை பயன்படுத்திக்கொள்ள தவறக் கூடாது. இதை 'நிக்ஷீணீsஜீவீஸீரீ மீஜ்tக்ஷீணீ னீவீறீமீ' என்று சொல்வார்கள். இதனால் நிறுவனத்திற்கு நம் மீதான நன்மதிப்பு கூடும். 



ஒவ்வொருவரின் கலாசாரமும், பழக்க வழக்கமும் வேறு மாதிரியாக இருக்கலாம். ஆனால், வேலை செய்யும் நிறுவனத்தின் கலாசார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பணியாளர்கள் தங்களை மாற்றிக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. பெரும்பாலான நிறுவனங்களில் சமூக வலைதளங்கள் 'லாக்' செய்யப்பட்டிருக்கும். சில நிறுவனங்களில் அவ்வப்போதைய தேவைகளுக்காக 'லாக்' செய்வார்கள். இந்த நிலையில் இணையதளத்தை தேவை இல்லாமல் நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக, ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்களை அலுவலகத்தில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.


குழுவாகச் செயல்படும் இடத்தில் தனக்கு மட்டும் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு நடந்துகொள்ளக் கூடாது. முக்கியமாக, அலுவலக அரசியலில் ஈடுபடாமல் இருப்பது பணியிடத்து வளர்ச்சிக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்''.


வேலைக்குச் சேர்ந்த புதிதில் அக்கறையோடு நடந்துகொண்டால், நிச்சயம் வளர்ச்சிதான்!

Source: Nanayam Vikatan