Thursday, September 13, 2012

இவளோடு படும் பாடு பெரும்பாடு

"இவளோடு படும் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது.

 

"ஏதோ ஒன்று, `பின்னே போனால் உதைக்கிறது; முன்னே போனால் கடிக்கிறது' என்பார்கள்.

 

"இவளுக்கும் அதற்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் போயிற்று.

 

"என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறாள்; குற்றம் சொல்கிறாள்; முரண்டு பிடிக்கிறாள்; பிணங்கிக்கொள்கிறாள்.

 

"ஏதும் சொல்லாவிட்டாலும் ஏதும் செய்யாவிட்டாலும் வம்பாகிப் போகிறது.

 

"இவளைத் திருமணம் செய்துகொண்டேனே, என்னை எதனால் அடித்துக் கொள்வது?"

 

என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை; எப்படி அவளைச் சரி செய்வது, எப்படி அமைதிப்படுத்துவது என்று நெடுநேரம் சிந்தித்தான்; ஒரு வழி புலப்பட்டது.

 

மனைவியின் தோழியைத் தேடிப் போனான்; மனைவியின் சினத்தைச் சொன்னான்; தன் கவலையைச் சொன்னான்; தனக்கு உதவுமாறு வேண்டினான்.

அவனை ஏற இறங்கப் பார்த்தாள் தோழி.

 

"அனைத்தையும் மறந்துவிட்டீர்களா? ஏதும் அறியாதவர்போல் பேசுகிறீர்களே!" என்றாள்.

 

அவனுக்குக் குழப்பம்.

 

"எவற்றை மறந்தேன்? விளங்கவில்லையே!" என்றான்.

 

"திருமணம் ஆன புதிதில் இவள் பச்சை வேப்பங்காயைத் தந்தாலும் இனியதும் மென்மையானதும் ஆகிய கருப்பங்கட்டியைப்போல் இன்சுவை என்றீர்கள்.

வேப்பங்காய் கசப்பது இயல்பு; ஆனால் இவள் கைபட்ட காரணத்தால் அப்போது அது உங்களுக்கு இனியதாக இருந்தது.

 

"இப்போது பாரி மன்னனின் பறம்பு மலையில் தைத்திங்களில் குளிர்ந்திருக்கும் சுனையின் தெளிந்த நீரைத் தந்தாலும் வெப்பமாகவும் உப்பைப்போல் உவர்ப்பாகவும் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். சுனைநீர் குளிர்ச்சியாகவும் இனியதாவும் இருப்பது இயல்பு; ஆனால் இவள் கைபட்ட காரணத்தால் இப்போது அது உங்களுக்கு வெப்பமாகவும் உவர்ப்பாகவும் இருக்கிறது.

 

"அப்போது தந்தவளும் இவள்தான்; இப்போது தருபவளும் இவள்தான். ஆனால் உங்களுக்குச் சுவை வேறுபடுகிறது. இந்த வேறுபாட்டுக்கு உங்கள் அன்பு முன்புபோல் இல்லாமல் இப்போது மாறிவிட்டதுதான் காரணம் ஆகும்.

"உங்கள் இருவருக்கும் இடையே எழும் பிரச்சினைகளுக்கு இவளைக் குற்றம் சொல்லாதீர்கள்.  உங்கள் அன்பில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டை உணர்ந்து சரிசெய்துகொள்ளுங்கள்; எல்லாம் சரியாகிவிடும்."

 

தோழி பேச்சை நிறுத்தினாள்; அவன் வெளிறிப்போய் நின்றான்.

 

வேம்பின் பைங்காய் என்தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்; இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்;
ஐய, அற்றால் அன்பின் பாலே.

 

"ஐய, என் தோழியாகிய தலைவி வேம்பின் பசிய காயை முன்பு தந்தால் இனியதும் மென்மையானதுமான கருப்பங்கட்டி என்று கூறினீர்; இப்பொழுது பாரி மன்னனின் பறம்பு மலையிலுள்ள தை மாதத்தில் குளிர்ந்த சுனையிலுள்ள தெளிந்த நீரைத் தந்தாலும் வெப்பமாகவும் உவர்ப்புச்சுவை உடையதென்றும் கூறினீர்; உமது அன்பு அத்தகையது."

 

பைங்காய் - பசிய காய், பச்சைக் காய். தரினே - தந்தால். தேம்இனிய. பூமென்மை, பொலிவு. கட்டி - கருப்பங்கட்டி, வெல்லக்கட்டி. இனியே - இப்பொழுது. பனி - குளிர்ச்சி. தெண்ணீர் - தெளிந்த நீர். தண்ணியகுளிர்ந்த. வெய்யவெப்பமான. உவர்க்கும் - உப்புச்சுவை தரும். ஐயஐயா, தலைவன். அற்றால் - அத்தகையது. அன்பின்பால் - அன்பின் இயல்பு.

 

(ஊடியிருந்த தலைவியின் உடன்பாடு பெறுவதற்குத் துணைபுரியும்வண்ணம் தலைவன் தோழியை வேண்டியபொழுது தோழி கூறியது.)

 

பாடியவர்: மிளைக்கந்தனார்

நூல்: குறுந்தொகை; பாடல் எண்: 196