Tuesday, January 24, 2012

வைதாரையும் வாழவைப்பவன் அப்பன் முருகன்

ன்றைக்கு நல்ல முகூர்த்தம். ரயில், பஸ் என வாகனங்களிலும் தெருக்களிலும் கூட்டம் அலைமோதியது. அன்றைக்கு ஐந்து கல்யாணங்களில் கலந்துகொள்ள வேண்டிய நிலை. மூன்று கல்யாணங் களிலேனும் பங்கேற்க முடிவு செய்து, நண்பர் பரமசாமியுடன் கிளம்பி, முண்டியடித்து பேருந்தில் ஏறி, இடம் பிடித்து நின்றிருந்தபோது, பயணிகள் இரண்டு பேருக்கிடையே கடும் சண்டை. பார்ப்பதற்குக் கண்ணியவான்கள் போல் இருந்த அந்த இரண்டு பேரும் ஒருவருக்கொரு வர் சகட்டுமேனிக்கு ஆங்கிலத்தில் திட்டித் தீர்க்க... அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, ஆட்டோவில் சென்றோம், நானும் பரமசாமியும்.

''இப்படி இங்கிலீஷ்ல திட்டிக்கிறாங்களே?'' என்றார் பரமசாமி. ''கொஞ்சம் தமிழ்லயும் திட்டியிருக்கலாமோ?'' என்றேன் நான். உடனே பரமசாமி, ''அட, இதென்னங்க..! திட்டுறதே தப்பு. இதுல தமிழ் என்ன, இங்கிலீஷ் என்ன?'' என்றார்.  

''அப்படியில்லீங்க. வையிறதா இருந்தாலும் தமிழ்ல வைதால், அதாவது திட்டினால், அந்த ஒரு காரணத்துக்காகவே முருகப்பெருமான் அவங்களையும் வாழவைப்பார். அருணகிரிநாதரே பாடியிருக்காரே!'' என்றேன். ''அது சரி... இப்படித் திட்டலாம்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம்?'' என்று கேட்டார் பரமசாமி.  

''ஒரு தடவை டெல்லி போயிருந்தோம். ராத்திரி 10 மணிக்கு ரயிலை விட்டு இறங்கினதும் 'என்ன... எல்லாம் சரியா இருக்கா?'னு கேட்டேன். கூட வந்தவங்க, 'எல்லாம் சரியா இருக்கு. ஆனா அட்ரஸைத்தான் காணோம்'னாங்க. அந்தக் குளிர்லேயும் வியர்த்து விறுவிறுத்துப் போச்சு எனக்கு! அப்போ செல்போனெல்லாம் இல்லை. போன் நம்பரும் முகவரி யோடு தொலைஞ்சுடுச்சு. தவிர, எங்க யாருக்குமே ஹிந்தி தெரியாது. சுத்துவட்டாரத்துல தமிழ் தெரிஞ்ச முகங்களையும் காணோம்'' என்று சொல்லி நிறுத்த... 'சொல்லுங்க... சொல்லுங்க... அப்புறம் என்ன ஆச்சு?' எனப் பரபரத்தார் பரமசாமி.

''அப்ப எங்களோட வந்த ஒருத்தர் பசியிலயும் கோபத்துலயும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா நடந்துக்கிட்டே இருந்தார். அப்ப எதிர்த்தாப்ல வந்தவர் மேல இவர் வேகமா மோத... 'எருமை மாடு மாதிரி முட்டுறியே... கண்ணு தெரியலையா உனக்கு?' என்று அந்த ஆசாமி கத்த... 'அடடே... நீங்க தமிழ் நாடா?' என்று நாங்க சந்தோஷப்பட... என்னைப் பார்த்ததும் 'ஐயா, நீங்களா?' என்று அவர் ஆச்சரியப்பட... எங்களின் சோகக் கதையைக் கேட்டு, அவர் காரி லேயே எங்களை அழைத்துச் சென்று, தங்க வைத்து, நள்ளிரவிலும் நல்ல உணவு கொடுத்து, மறுநாள் முகவரியைக் கண்டுபிடித்து, அங்கிருந்த மூன்று நாட்களும் எல்லா உதவிகளையும் செய் தார். இத்தனைக்கும் காரணம் என்ன தெரியுமா? அந்த 'எருமை மாடு'ங்கற தமிழ் வார்த்தைதானே!' என்றேன்.

''அன்னிக்கி மட்டும் அவர் எங்களை வேற மொழியில திட்டியிருந்தார்னா, இத்தனை அன்பு அவர்கிட்டேருந்து கிடைச்சிருக்குமா? இதைத்தான் அருணகிரிநாதர் தன் கந்தரலங்காரத்துல, 'மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதாரையும் இங்கு வாழவைப்பான் வெய்ய வாரணம் போல் கைதான் இருபதுடையான் தலைபத்தும் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இளஞ்சீயமே' என்று பாடியிருக்கிறார். ஆக, வைதாரையும் வாழவைப்பவன் அப்பன் முருகன்'' என்று சொல்ல, சரக்கென்று பிரேக் போட்டார் ஆட்டோ டிரைவர்.  

எதிரே வெறிக்க வெறிக்க எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது, ஆட்டோவுக்கு எதிரில் நின்ற எருமைமாடு!