Friday, January 6, 2012

அன்னதானம்: சில நேரடி அனுபவங்கள்

இந்த பதிவை எழுதுவதா வேண்டாமா என பெரிய தயக்கம் இருந்தது. ஹவுஸ் பாசுக்கு இதை வெளியில் சொல்ல கூடாது என்று எண்ணம். இருந்தும் இதை பகிர வேண்டும் என மனம் சொல்கிறது. ஹவுஸ் பாஸ் ஆர்டரை மீறும் மிக சில செயல்களில் இது ஒன்றாக இருக்கட்டும்.

2003 -ஆம் வருடம் என நினைக்கிறேன். என் பெண் சிறியவளாக இருந்த போது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டர்கள், லேப்கள் என அலைந்து அலைந்து மனம் நொந்து போயிருந்தோம். அப்போது வீட்டுக்கருகில் எங்களுக்கு நன்கு தெரிந்த பெண்மணி ஒருவர் எங்கள் ஜாதகம் பார்த்து விட்டு சில விஷயங்கள் சொன்னார். அப்போது தந்தையான நான் வார வாரம் அன்ன தானம் தந்து வந்தால், அவள் உடல் நிலை சரியாகும் என்றார். அப்படித்தான் அன்னதானம் செய்கிற பழக்கம் எனக்கு துவங்கியது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாரம் நான்கு பேருக்காவது அன்ன தானம் செய்து வருகிறேன். ஏழை சிறுவர்களுக்கு, அரசு பள்ளிகளுக்கு உதவுவது என சின்ன சின்ன நற் காரியங்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடு பட்டாலும் முழுக்க முழுக்க எங்கள் குடும்பம் மட்டும் செய்யும் நற் காரியம் என்கிற நிம்மதி இதில் உண்டு.

இந்த வித்தியாச அனுபவத்திலிருந்து சில துளிகள்:

அன்ன தானம் தர ஆரம்பத்தில் கையில் சாப்பாட்டு பையுடன் ஆட்களை தேடி அலைந்திருக்கிறேன். பின் ரயில்வே நிலையம் ஒட்டி நிறைய ஏழைகள் தங்கி இருப்பது தெரிந்து மவுன்ட் ஸ்டேஷன் அருகே சென்று வாரா வாரம் சாப்பாடு தர ஆரம்பித்தேன்.

முதலில் வெவ்வேறு வித உணவுகள் குடுத்து வந்தவன் இப்போது பெரும்பாலும் "நான்கு இட்லிகள் அடங்கிய உணவு பொட்டலமே " தருகிறேன். சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்பதால் நன்கு செரிக்க உதவும் என்பதால் !

ஆரம்பத்தில் இட்லி நான்கு பேருக்கு வாங்கி தந்த போது ஆளுக்கு பத்து ரூபாய் என நாற்பது ரூபாய் செலவாகும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் விலை ஏறி நான்கு இட்லி இருபது ருபாய் என வாரம் என்பது ரூபாய் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏறியதால் பெரிதாக தெரிய வில்லை.

வழக்கமாய் வாங்கும் கடையில் இன்று அன்ன தானம் செய்கிறேன் என்றால் 15 நிமிடம் முன்பே போன் செய்து பார்சல் கட்ட சொல்லிடுவேன். போகும் போது ரெடி ஆக வைத்திருப்பார்கள்.

ஹவுஸ் பாஸ் உடன் வேலை பார்ப்போரில் சிலர் தங்கள் திருமண நாள் அல்லது குழந்தைகள் பிறந்த நாள் போது மட்டும் " பத்து பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்" என எங்கள் மூலம் செய்ய சொல்வார்கள். இப்படி சற்று அதிகமான நபர்களுக்கு தர வேண்டுமெனில் ரயில்வே ஸ்டேஷன் அருகே தான் தந்தாக வேண்டும் ! அங்கு தான் ஒரே நேரத்தில் இத்தனை பேரை பார்க்க முடியும். அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். எல்லோரும் " எனக்கு சாப்பாடு; எனக்கு சாப்பாடு" என்று கேட்பார்கள். எல்லோருக்கும் தர முடிய வில்லையே என்று சற்று வருத்தமாக இருக்கும் !

சமீபமாக மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் வயதான பாட்டிகள் மற்றும் தாத்தாவிற்கு உணவு தந்து வருகிறேன். இதில் ஒரு பாட்டி பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இந்த பாட்டி எப்போதும் தனக்கு சாப்பாடு மற்றும் சாம்பார் தனியாக கவரில் போட்டு தான் தர வேண்டும் என்று சொல்லும் ! சில நேரம் கடையில் சாப்பாடு கட்டுபவர் அனைத்தையும் ஒரே கவரில் போடுவார். அப்போது எல்லோருக்கும் தனி தனியே எடுத்து தர வேண்டி இருக்கும். ஆனால் நம்ம பாட்டியோ கவர் இன்றி வாங்க மாட்டேன் என உறுதியாய் இருக்கும். இதனால் மற்றவர்களுக்கு கவர் இன்றி தந்து விட்டு, கடைசியாக கவர் உடன் இந்த பாட்டிக்கு தருவேன். அப்போதெல்லாம் " இந்த நிலையிலும் இந்த பாட்டி தான் நினைத்ததில் விடாபிடியாய் இருந்து சாதிக்கிறதே !" என்று மனதுக்குள் சிரித்து கொள்வேன் ! ஒன்றை பாருங்கள் ! உங்களுக்கு எது தேவை என்பதில் நீங்கள் தெளிவாக, உறுதியாக இருந்தால் அது உங்களுக்கு கிடைக்கிறது !

பொன்னியம்மன் கோயிலில் வாரா வாரம் கோயிலுக்கு உள்ளேயே செல்லாமல், வெளியில் நின்று உணவு மட்டும் தந்து விட்டு சென்று விடுவது எனக்கே சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஆனாலும் காலை நேரம், அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் உள்ளே செல்ல நேரம் இருக்காது.

வாரா வாரம் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் என வைத்து கொள்வதில்லை. அப்படி செய்தால் அவர்களுக்கும் ஒரு எதிர் பார்ப்பு வந்து விடும். சில காரணங்களால் நம்மால் அன்று தரா விடில் நமக்கும் மன கஷ்டம். அவர்களுக்கும் ஏமாற்றம். எப்படியும் வாரம் ஒரு முறை நான்கு பேருக்கு என்பது மட்டும் தான் ரூல். இதிலும் கூட சில வாரங்கள் தர விடுபட்டு விடும். அப்போது அடுத்த வாரம் நான்கு பேருக்கு பதில், எட்டு பேருக்கு தந்து கணக்கை சரி செய்வேன்.

பார்த்த சாரதி கோயில், வேளாங்கண்ணி என கோயில்கள் செல்லும் போதெல்லாம் வெளியில் வயதானவர்கள் அமர்ந்திருப்பது பார்த்தால், அந்த வார அன்னதானத்தை அங்கு முடித்து விடுவது வழக்கம்.

சில நேரம் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் வசிக்கும் ஏழைகள், அவர்கள் குழந்தைகளுக்கு தரும் போது, அந்த குழந்தைகள் பையை பெற்று கொண்டு மகிழ்ச்சியாக சிரிக்கும். அந்த நேரம் நமக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த அன்ன தானத்தால் எனக்கு ஏதும் நல்லது நடந்ததா?

முன்பே சொன்ன மாதிரி எங்கள் பெண் உடல் நலனுக்காக துவங்கியது இது. அதன் பின் அவள் பெரியவள் ஆக ஆக சின்ன வயதில் இருந்த உடல் தொந்தரவுகள் முழுதும் மறைந்து விட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம் என ஹவுஸ் பாஸ் உறுதியாக நம்புகிறார். ஏதாவது பிரச்சனை வந்தால், "இந்த வாரம் சாப்பாடு குடுத்தீங்களா? " என கேட்பார். நான் "குடுத்துட்டேன்" என்றால் ஓகே. இல்லா விடில் " இந்த வாரம் குடுக்காததால் தான் இப்படி" என்பார்.

எப்போதும் ஏதோ யோசனையுடனே வண்டி ஓட்டும் என் டூ வீலரை எத்தனையோ முறை லாரி அல்லது பஸ் முத்தமிடுவது போல் ஒட்டி சென்றுள்ளன. அப்படி தப்பும் போதெல்லாம். " தர்மம் தான் தலை காக்கிறது " என நினைத்து கொள்வேன்.

நிஜமான நன்மை என்றால் நம் மனதில் தோன்றும் திருப்தி. அது தான் இதை தொடர்ந்து செய்ய வைக்கிறது. நான் ஒன்றும் அநியாயத்துக்கு நல்லவன் கிடையாது. எல்லோரையும் போல கடவுள் பாதி மிருகம் பாதி தான் ! ஆனால் நம்மை நாமே மதிக்க, இது போன்ற செயல்கள் தான் உதவுகின்றன.

மேலும் நிஜமாக வேலை பார்க்க முடியாமல், பிள்ளைகளாலும் கை விடப்பட்ட இத்தகைய வயதானோருக்கு, பிற ஏழைகளுக்கு உதவுவது ஒரு சின்ன சமூக கடமை என்று தான் நினைக்கிறேன். சில பேராவது இப்படி ஈடு பட்டால், பட்டினியை ஓரளவு ஒழிக்கலாம் !

இதை வாசிக்கும் யாரோ ஒருவர் அடுத்த முறை கோயிலுக்கு போகும் போது வெளியில் இருக்கும் இருக்கும் வயதானவருக்கு சாப்பாடு வாங்கி தந்தால், நான் இந்த பதிவு எழுதியதற்கான ஒரு அர்த்தம் கிடைக்கும் !! குழந்தைகள் பிறந்த நாள் போன்ற நேரத்திலாவது செய்து பாருங்கள் ! உங்களை நீங்களே இன்னும் அதிகமாக மதிக்க துவங்குவீர்கள் !

(இது என்னுடைய அனுபவம் அல்ல, இணையத்தில் உலா வரும்போது படித்ததில் பிடித்தது, பகிர்ந்துகொள்ளத் தோன்றியது - சிவானந்தம்)