Sunday, May 29, 2011

முதலீட்டுத் திட்டங்கள் தயார்..! - வரி சேமிக்க ரெடியா?


உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்பார்கள் அனுபவசாலிகள். மாதச் சம்பளக்காரர்களின் முதல் செலவு, வரி சேமிப்புக்கான முதலீடாக இருக்கட்டும் என்பார்கள் நிதி ஆலோசகர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வரியை சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மவர்களுக்கு வருவது ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான். வாங்குகிற சம்பளத்தில் பாதியை வரி சேமிக்கக் கொடுத்துவிட்டு, சண்டை சச்சரவுகளுடன் நாளைக் கடத்துவதைவிட இன்றே, இப்போதே திட்டமிட்டால் கடைசிநேர டென்ஷனும் இருக்காது. நல்ல லாபம் தரும் திட்டத்திலும் முதலீடு செய்து அதிக லாபத்தையும் சம்பாதிக்க முடியும்.

வரி சேமிப்புக்கான முதலீடு செய்வதற்குமுன் முக்கியமாக இரண்டு விஷயங்களை ஒருவர் செய்தாக வேண்டும். அதில், முதலில் வருவது ஆயுள் காப்பீடு பாலிசி. இதுநாள் வரை நீங்கள் ஆயுள் காப்பீடு பாலிசியை எடுத்த தில்லையா? முதல் காரியமாக அதை எடுங்கள். அதன் கவரேஜ் உங்கள் ஆண்டு சம்பளத்தைப்போல் பத்து மடங்குக்கு மேல் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்கள் முடியும் பட்சத்தில் கூடுதல் பிரீமியம் கட்டி கவரேஜை அதிகரித்துக் கொள்ளுங்கள். அல்லது புது பாலிசியை எடுங்கள். குறைந்த செலவில் அதிக கவரேஜ் என்கிறபோது டேர்ம் பிளான் சரியானதாக இருக்கும்.

இரண்டாவது, மருத்துவச் செலவு என்பது ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கும் நிலையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது அவசியத்திலும் அவசியம். இந்த இரண்டு விஷயங் களையும் நீங்கள் ஏற்கெனவே செய்து முடித்தாகி விட்டது எனில், இனி அடுத்த விஷயங்களுக்குப் போகலாம்.

நடப்பு 2011-12 ஆண்டில் வரியை மிச்சப்படுத்த எந்தெந்த வழிகள் இருக்கின்றன என்ற விவரம் இதோ..!

பணியாளர் பிராவிடென்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்)

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% சம்பளத்தில் பிடிக்கப்படும். இந்த முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. இதில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு இப்போது 9.5% வட்டி கொடுக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இந்த வட்டி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் விருப்பத்தின் அடிப்படையில் கூடுதலாக கொஞ்சம் பணத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்வது லாபமாக இருக்கும். முற்றிலும் பாதுகாப்பான முதலீடு இது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஏற்றது.

பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்)

அமைப்பு சாராத தொழிலா ளர்களுக்காக கொண்டு வரப்பட்டி ருக்கும் இந்த திட்டத்தில் யார் முதலீடு செய்தாலும் வரிச்சலுகை கிடைக்கும். நிதி ஆண்டில் அதிகபட்சம் 70,000 ரூபாய் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு மட்டும்தான் வரிச்சலுகை பெற முடியும். இதுவும் முற்றிலும் பாது காப்பான முதலீடு. 15 ஆண்டுகாலத் திட்டமான இதில், வட்டி 8%தான் என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம். வருமானத்துக்கு வரி இல்லை.  


ஃபிக்ஸட் டெபாசிட்

ஐந்தாண்டு காலம், லாக் இன் பீரியட் கொண்ட வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்து வரிச்சலுகை பெறலாம். வட்டி 8.5-9%. மூத்த குடிமக்களுக்கு 0.25-0.5% கூடுதல் வட்டி. பி.பி.எஃப்.வுடன் ஒப்பிடும்போது, குறைந்த லாக் இன் பீரியட். ஆனால், வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்.எஸ்.சி)

தபால் அலுவலக சேமிப்பு பத்திரத்தில் செய்யப்படும் இந்த முதலீட்டுக்கு வரிச்சலுகை கிடைக்கும். ஆறு ஆண்டுகாலத் திட்டமான இதில் வட்டி 8% கிடைக்கும். பாதுகாப்பான முதலீடுதான். ஆனால், வட்டிக்கு வரி கட்ட வேண்டி வரும்.  

பென்ஷன் பிளான்

இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களின் பென்ஷன் திட்ட முதலீட் டுக்கு வரிச்சலுகைக் கிடைக்கும். புதிய பென்ஷன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கும் வரிச்சலுகை உண்டு. பென்ஷன் தொகைக்கு வரி உண்டு. பி.எஃப். திட்டத்தில் சேர முடியாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள் இவற்றில் முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

ஐந்தாண்டுகள் 'லாக் இன் பீரியட்' கொண்ட மூத்த குடி மக்கள் சேமிப்புத் திட்டம் தபால் அலுவலங்களில் இருக்கிறது. இதில் 9% வட்டி கிடைக்கும். வருமானத் துக்கு வரி உண்டு.  

வரி சேமிப்பு ஃபண்ட்

அதிக வருமானம் வேண்டும், வருமானத்துக்கு வரி இருக்கக் கூடாது. ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை என்கிறவர்களுக்கு ஏற்ற வரிச் சேமிப்பு முதலீடாக 'பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்' (இ.எல்.எஸ்.எஸ்) திட்டம் இருக்கிறது. ஒரு நேரத்தில் குறைந்தது 500 ரூபாய்கூட இதில் முதலீடு செய்யலாம் மூன்றாண்டு கால 'லாக் இன் பீரியட்', டிவிடெண்ட் மற்றும் வருமானத் துக்கு வரி இல்லை. ஆனால், பங்குச் சந்தை சரியும் பட்சத்தில் நம் முதலீடு கொஞ்சம் குறையவும் வாய்ப்புண்டு என்பதை மறந்து விடக் கூடாது.

ஆயுள் காப்பீடு பாலிசிகள்

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு கட்டும் பிரீமியத்துக்கு வரிச்சலுகை இருக்கிறது. டேர்ம் பிளான், எண்டோவ்மென்ட், யூலிப் பாலிசிகளுக்கு கட்டப்படும் பிரீமியம் மற்றும் ஆதாயத்துக்கு வரி இல்லை.

வீட்டுக் கடன் அசல்

குடியிருப்பதற்காக வீட்டைக் கடனில் வாங்கியிருந்தால், திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இருக்கிறது. கணவன்/மனைவி சேர்ந்து கூட்டாக வீட்டுக் கடன் வாங்கி, தனித் தனியாக வரி விலக்கு கோரினால் கூடுதல் வரியை மிச்சப்படுத்த முடியும்.

கல்விக் கட்டணம்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மகன்/மகளுக்கு பெற்றோர் கட்டும் கல்விக் கட்டணத்துக்கு வரிச்சலுகை கோரலாம். இந்த சலுகை இரண்டு பிள்ளைகளுக்குதான் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் வருமானம் ஈட்டும் பட்சத்தில் இரு பிள்ளைகள் என்றால் ஒருவருக்கு தந்தையும், மற்றவருக்கு தாயும் வரிச்சலுகை பெறலாம்.

மேற்கண்ட அனைத்து முதலீடு மற்றும் செலவு எல்லாம் சேர்த்து நிதி ஆண்டில் 80 - சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச்சலுகை பெற முடியும்.

செலவுகளுக்கும் வரிச்சலுகை

நாம் செய்யும் பல முக்கிய செலவுகளுக்கும் வரிச்சலுகை கிடைக்கும்.

வீட்டு வாடகை - 10 (13 ஏ)

வசிக்கும் வீட்டுக்கு கொடுக்கும் வாடகைக்கு வரி தள்ளுபடி பெறமுடியும். வசிக்கும் நகரம், பணியாளர்பெறும் வீட்டு வாடகைப்படி ஆகியவற்றைப் பொறுத்து இந்த வரிக் கழிவு இருக்கிறது. வீட்டு உரிமையாளரிட மிருந்து ரசீது பெறுவதோடு, அவரின் பான் எண்ணை குறிப்பிட வேண்டும்.

மெடிக்ளைம் - 80 டி

தனக்கு மற்றும் தன் குடும்பத்துக்கான மெடிக்ளைம் பிரீமியத்தில் ஆண்டுக்கு 15,000 ரூபாய் (மூத்த குடிமக்களுக்கு 20,000 ரூபாய்) வரை வரிச்சலுகை கிடைக்கும். பெற்றோருக்கு கட்டும் பிரீமியத்துக்கும் சேர்த்து பிள்ளைகள் வரிச்சலுகை பெற முடியும்.


கல்விக் கடன் - 80 இ

வரி கட்டுபவர் தன் உயர் கல்விக்காக வாங்கும்/வாங்கிய கடனில் வட்டியில் வரிச்சலுகை இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு கட்டும் வட்டிக்கு மட்டுமே வரிச்சலுகை கிடைக்கும். திரும்பக் கட்டும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை.

வீட்டுக் கடன் வட்டி - 24 பிரிவு

திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் வட்டியில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 1.5 லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும். வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் பட்சத் தில் முழுவட்டிக்கும் வரிச்சலுகை உண்டு. ஆனால், வாடகையை வருமானமாக காட்டியிருக்க வேண்டும்.

கவனிக்க..!

புதிய வருமான வரிச் சட்டம் 2012-13-ம் ஆண்டில் அமல் படுத்தப்பட இருக்கிறது. அதில், தற்போதுள்ள பல விஷயங்கள் மாற்றப்படுகிறது. குறிப்பாக, இன்ஷூரன்ஸ் பாலிசியில் டேர்ம் பிளான் மற்றும் ஆண்டு பிரீமியத்தைபோல் 20 மடங்கு கவரேஜ் இருக்கும் பாலிசிகளுக்கு தான் வரிச்சலுகை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை கவனத்தில் கொண்டு இப்போதே பாலிசி எடுப்பது அவசியம்.  

இதேபோல் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் முதலீட்டுக்கு தற்போதைய நிலையில் புதிய வருமான வரிச் சட்டத்தில் வரிச்சலுகை இல்லை. எனவே, ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்பவர்கள், 2012 மார்ச் மாதம் முடியும்படி பார்த்துக் கொள்ளவது நல்லது.

சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு. இனி உடனடியாக களத்தில் இறங்க வேண்டியது நீங்கள்தான்!