Wednesday, May 4, 2011

16 நாட்களில் ஒல்லி ஆகலாம்!

ருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியம் இல்லை... அறுவை சிகிச்சை தேவை இல்லை... வலி இல்லை... தழும்பு இல்லை... உணவுக் கட்டுப்பாடு இல்லை என்பதுபோன்று ஏகப்பட்ட 'இல்லை'களுடன் அறிமுகம் ஆகி இருக்கிறது செரோனா பாடி லிப்போ சிகிச்சை! அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேசர் சிகிச்சை, இப்போது தமிழகத்திலும் வந்துவிட்டது. இந்தக் கருவியை, சென்னை, தி.நகரில் உள்ள லைஃப் அலைவ்மருத்துவமனையில் அறிமுகப்படுத்தி உள்ளனர். இதனுடன் இணைந்த, புதிய மெடிக்கல் வெயிட் லாஸ் முறையும் அறிமுகம். 

இதுகுறித்து, டாக்டர் சுனிதா ரவி சொல்கிறார்.

''உடல் எடை கூடுவது, இன்றைய உலகில் மனிதனுக்கு மிகப் பெரிய பிரச்னையாக, கவலையாக உள்ளது. உடல் எடை திடீரென்று ஒரே நாளில் அதிகரித்துவிடுவது இல்லை. ஆனால், உடல் எடை குறைப்பு மட்டும் ஒரு சில நாளில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதற்காகப் பல்வேறு உடல் எடைக் குறைப்பு முறைகளை மேற்கொள்கின்றனர்.

ஜிம்முக்குச் சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, ஓரளவு எடையைக் குறைக்கிறார்கள். உடல் எடை குறைந்ததும், 'ஆஹா சாதித்து விட்டோம்' என்ற சந்தோஷத்தில் பயிற்சியை நிறுத்துகிறார்கள். அதனால் உடல் எடை மீண்டும் அதிகரிக்கிறது. பல நேரங்களில் உடல் எடையைக் குறைக்கிறோம் என்ற பெயரில், புரதம் மற்றும் ஊட்டச் சத்துகளை வெளியேற்றிவிடுகிறார்கள். கொழுப்பைக் குறைக்கிறோம் என்று, உடலில் உள்ள நல்ல கொழுப்புகளையும் வெளியேற்றி விடுகிறார்கள். இதனால் வேறு சில பாதிப்புகளும் உடலுக்கு ஏற்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்து உடல் பருமன் குறைக்கப்படுவது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், சிகிச்சையின்போது, இரைப்பை அளவைக் குறைத்துவிடுவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளைக் கிரகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் ஊட்டச் சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அதனால், உடல் பருமனைக் குறைப்பதற்காக எவ்விதமான குறைபாடுகளும் இல்லாத 'மெடிக்கல் வெயிட் லாஸ்' என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறோம். சமீபத்தில் அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்ற புதிய லேசர் சிகிச்சையும் இதில் இணைந்து உள்ளது. இந்த சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாடுகள் இல்லை, பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்து மாத்திரைகள் இல்லை, அறுவை சிகிச்சை கிடையாது, உடல் கொழுப்பைக் குறைக்க ஊசி போடுவதும் இல்லை.

உடல் பருமன் பொதுவான பிரச்னையாக இருந்தாலும், ஒவ்வொரு நோயாளிக்கும் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதனால், ஒவ்வொரு நோயாளியையும் முழுமையாகப் பரிசோதனை செய்கிறோம். ரத்தம், ஹார்மோன் தொடங்கி உளவியல், உடல் நிலை மாற்றங்களையும் கவனத்தில் கொள்கிறோம். வேறு பிரச்னைகளுக்காக மருந்து சாப்பிட்டு வருகிறார்களா என்பதையும் பரிசோதனை செய்கிறோம். இப்படிச் செய்யப்படும் அனைத்துப் பரிசோதனை முடிவுகளையும் ஆராய்ந்து, எதனால் உடல் எடை அதிகரிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறோம். பிறகு ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்யேக சிகிச்சையை வடிவமைக்கிறோம். பாதுகாப்பான மருந்துகள், மிகச் சரியான டயட் மற்றும் ஊட்டச்சத்து துணைப் பொருட்கள் மூலம் கொழுப்பு குறைக்கப்படுகிறது. டயட் என்றால், இதைச் சாப்பிடக் கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது என்பது இல்லை. விரும்பியதை எல்லாம் சாப்பிடலாம். ஆனால், எந்த அளவு சாப்பிடலாம் என்பதை நாங்கள் வரையறுப்போம்.

இது தவிர, செரோனா பாடி லிப்போ லேசர் சிகிச்சை அளித்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அழகான உடல் அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இந்த லேசர் சிகிச்சை தோலின் அடியில் உள்ள கொழுப்பைக் கரைத்து வியர்வை, சிறுநீர் வழியே வெளியேற்றிவிடுகிறது. இந்த லேசர், தோலுக்கு அடியில் உள்ள தேவையற்ற கொழுப்பை மட்டுமே தாக்கும். இதனால், தோலுக்கோ, மற்ற உறுப்புகளுக்கோ துளிகூட பாதிப்பு ஏற்படாது. இதனால், உடலில் உள்ள நீர்ச்சத்து, திசுக்கள், எலும்பில் உள்ள புரோட்டீன் போன்றவை பாதிப்பு அடைவது இல்லை.

லேசர் கதிர் என்றால் சுடும், வலிக்கும் என்ற பயம் இல்லை. நோயாளிகள் ரிலாக்ஸ் செய்வதைப்போன்ற அனுபவத்தையே இந்த சிகிச்சையில் பெறுவார்கள். நோயாளியின் இடுப்பு, கை, தொடை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாளாக எட்டு நாட்களுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படும். ஒரு நாளைக்கு 40 நிமிடங்களுக்கு லேசர் கதிர்கள் செலுத்தப்பட்டு கொழுப்பு கரைக்கப்படும். இந்த 16 நாட்களும் அவர்களின் உடல் நிலை பற்றி தீவிரமாகக் கண்காணிப்போம். 16 நாள் சிகிச்சையின் முடிவில் உடல் பருமன் 6 முதல் 11 இன்ச் வரை குறைகிறது.

நாங்கள் பரிந்துரைத்ததுபோன்று உணவு முறை மற்றும் எளிய உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், கொழுப்பு மீண்டும் சேராமல் தடுத்துவிட முடியும். இந்த சிகிச்சையை 16 முதல் 80 வயது வரை உள்ள அனைவருமே செய்துகொள்ள முடியும். கர்ப்பிணிகள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் மட்டும் இந்த சிகிச்சை செய்துகொள்ள முடியாது. ஜிம் கட்டணம் மற்றும் சிறப்புப் பயிற்சியாளருக்கு மாதம் தோறும் கட்டணம் செலுத்துவதைக் கணக்கிட்டால், இந்த சிகிச்சைக்கான செலவு குறைவுதான்!'' என்கிறார்.

சரியான உடல் அமைப்பைப் பெறுவது இத்தனை எளிதா?