Saturday, April 2, 2011

நெத்தியடி பதில்கள் !

வினோபா பாவேவை நான்கைந்து செய்தியாளர்கள் பேட்டி காணப் போனார்கள். வினோபாஜி அவர் களிடம், ''நீங்கள் எந்த மொழியில் பேட்டி காணப் போகிறீர்கள்?'' என்று கேட்டார். ஏனெனில், வினோபாஜிக்கு பல மொழிகள் சரளமாகத் தெரியும்.

''உங்களுக்கு எந்த மொழியில் பதில் சொல்ல விருப்பம்?'' என்றார் ஒரு செய்தியாளர்.

''எனக்குப் பிடித்த மொழி மௌனம்'' - என்றபடியே வினோபாஜி அறைக்குள் போய்விட்டார்.

ஒரு தடவை, சர்ச்சில் கடைத் தெருவில் நடந்துகொண்டிருந்தார். அங்கே, ஒரு கடையில் அவரது படங்கள் நிறையத் தொங்கிக்கொண்டு இருந்தன. சர்ச்சிலுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆவலுடன் கடைக்காரரிடம், ''என்னுடைய படங்களை மட்டுமே விற்பனைக்கு வைத்துள்ளாய். மற்றவர்களின் படங்களையும் விற்பதுதானே'' என்று கேட்டார்.

கடைக்காரர், ''மற்றவர்களின் படங்கள் எல்லாம் விற்று விட்டன'' என்று அமைதியாகக் கூறினார். சர்ச்சிலுக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. சற்றுமுன் இருந்த மகிழ்ச்சி மாறி, வெட்கமாகிப்போனது.

 

 

புகழ் பெற்ற மெய்யியல் அறிஞரான ஹோபனேரின் நூலில் சிலவற்றை ஒரு பதிப்பகத் தார் வெளியிட்ட னர். அதற்கு பதிப் பகத்தார், கடிகாரம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந் தனர்.

ஹோபனேர் அதற்கு நன்றி தெரிவித்ததோடு, 'தாங்கள் அன்பளிப்பாய் கொடுத்த கடிகாரம் ஓடமாட்டேன் என்கிறது' என்றும் எழுதியிருந்தார்.

பதிப்பகத்தாரின் பதில்: உங்கள் புத்தகமும்தான்!

 

ஒரு பெண், தான் வளர்க்கும் நாய்க் குட்டிக்கு அறிஞர் பெர்னாட்ஷா வின் பெயரை வைக்க விரும்பி, அவரிடம் இசைவு கேட்டுக் கடிதம் எழுதினாள். அதற்கு பெர்னாட்ஷா எழுதிய பதில் என்ன தெரியுமா?

'பெண்ணே! அப்படி பெயர் வைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், உன் நாய்க் குட்டிக்கு ஏதேனும் மறுப்புண்டா என்று எதற்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்' என்று எழுதி இருந்தார்.