Tuesday, June 14, 2016

Life-ல பிடிப்பே இல்ல பெரியவா…!

 
Life-ல பிடிப்பே இல்ல பெரியவா…!

பல வர்ஷங்களுக்கு முன் நடந்த ஸம்பவம்.

ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்ஶனம் பண்ண "க்யூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர்.

"பெரியவா..நா.. ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்…கொழந்தேள்-ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணணுன்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரஹம் பண்ணணும்"

பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி.

"வாழறதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்ல-ன்னுதானே கவலைப்படற?"

"ஆமா………"

"எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?"

"உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்"

அவரை அப்படியே விட்டுவிட்டு, அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குஶலப்ரஶ்னம் பண்ண ஆரம்பித்தார். அவர்களும் வயஸானவர்கள்தான். அவர்களுடைய பெண்ணும், கூட வந்திருந்தாள்.

"இவ, எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். நல்ல வரன் வந்திருக்கு…பெரியவாதான் ஆஸிர்வாதம் பண்ணணும்…."

கையை உயர்த்தி ஆஶிர்வதித்தார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பினார்….

"Life-ல பிடிப்பு வேணுன்னியே! இதோ……இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் ஸொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்"

ரெண்டு தம்பதிகளும் முதலில் முழித்தார்கள். பெண்ணின் பெற்றோர் நல்ல வஸதி படைத்தவர்கள்தான்! பின் எதற்கு யாரோ ஒருவர் செலவு பண்ணி, கன்யாதானமும் பண்ணணும்?…..

"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்….பெரியவா உத்தரவு"

பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார்.

பெரியவா அவர் மனைவியை காட்டி, அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டினார்.

அவருக்கு புரிந்தது………

"ஆமா, இவ என் ரெண்டாவது ஸம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவள… கல்யாணம் பண்ணிண்டேன்".

பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்!

"ஸெரி….ஒனக்கு மூத்த தாரத்தோடது, பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?……"

"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு"!!!

எங்கேயிருந்து எங்கேயோ கொக்கி போட்டு இழுத்துட்டாரே! பெரியவாளுக்கு எப்டி தெரியும்?

ரொம்ப கூனிக்குறுகி, ஒத்துக் கொண்டார்.

"ஆமா…ஒரு பொண் கொழந்த இருந்தா..! இவ, சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தைய படாதபாடு படுத்தினதுனால, அந்தக் கொழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா..! நானும் தேடாத எடமில்ல! போனவ போனவதான்………….."

துக்கத்தால் குரல் அடைத்தது.

"ம்ம்ம்ம்.. பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ…….இந்தா! பிடிச்சுக்கோ! ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போயி… நல்லபடியா கல்யாணம் பண்ணிவை….….."

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி!

என்னது? ..இது ஸத்யம் ! ஸத்யம்!

பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்!

உண்மைதான்!

" ஆமா..பெரியவா! ரொம்ப வர்ஷம் முந்தி, நாங்க ட்ரெய்ன்ல ஊருக்கு போய்ண்டிருந்தோம். அப்போ ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல இந்தக் கொழந்தை அழுதுண்டு நின்னுண்டிருந்தா..! விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால அவள, அங்க தனியா விட மனஸு ஒப்பல…பொண் கொழந்தையாச்சே! அதான், நாங்களே கூட்டிண்டு போயி, எங்க கொழந்தையா வளத்துண்டு வரோம்…"

பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் ஸந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.


இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே pre planned " என்பது.

மஹான்களின் ஸந்நிதியில் அது ஸஹஜமாக, அனுபவத்திலும் வரும்.

" இந்தா…பிடி! பதினெட்டு வர்ஷத்துக்கு முன்னால தொலைஞ்சு போன ஒம்பொண்ணு!" என்று 'திருப்பதி லட்டு' மாதிரி, பெற்றவரிடம் casual-லாக ஒப்படைக்க, பெரியவாளால்தான் முடியும்.

நம் வீடுகளில் கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும், வீட்டில் யாராவது "இதோ இருக்கு" என்று எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் குடுப்பது போல், ஸர்வ ஸாதாரணமாக "cosmic level " ல் விளையாடக்கூடியவா, பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்தான்