Friday, April 1, 2016

அகத்தில் அன்பு கொள்!

ழைய, குழந்தைகளுக்கான கதை ஒண்ணு உண்டுங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். ஒரு காக்கா தாகத்தால தவிச்சு, தண்ணி தேடிப் பறந்துச்சு. வழியில, ஒரு ஜாடியில கீழே கொஞ்சூண்டு தண்ணி இருக்கிறது தெரிஞ்சுது. காக்காவோட அலகுக்கு அது எட்டலே. சுத்துமுத்தும் பாத்துது காக்கா. அங்கே சின்னச் சின்ன கூழாங்கற்கள் கிடக்கவும், ஒவ்வொண்ணா அலகால எடுத்து வந்து ஜாடிக்குள்ளே போட்டுச்சு. தண்ணி கொஞ்சம் கொஞ்சமா மேலே வரவும், திருப்தியா குடிச்சுட்டுப் பறந்துச்சு.

இது சாத்தியமாங்கிறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்' என்பதற்கு அருமையான உதாரணம் இது. இதன் தொடர்ச்சியா இன்னும் ரெண்டு மூணு கதைகள்கூட வந்துது.

ஒரு காக்கா கல்லால அந்த மண் ஜாடியின் அடியில ஓங்கித் தட்டவும், ஜாடி உடைஞ்சு, ஓட்டை வழியா தண்ணி வெளியே கசிஞ்சுது. காக்கா ரொம்ப சிரமப்படாம, அதைக் குடிச்சுட்டுப் பறந்துச்சு. இதுல, காக்காவின் சுயநலம்தான் இருக்கு; ஒரு நல்ல ஜாடியை உடைச்சது சரியில்லே; இது குழந்தைகளைக் குறுக்கு வழியில திசை திருப்பற நெகட்டிவ் அப்ரோச் கதைன்னு விமர்சனங்கள் உண்டு.

இன்னொரு காக்கா பறந்து போய், எங்கிருந்தோ ஒரு ஸ்ட்ராவைக் கொண்டு வரும், அதை ஜாடிக்குள்ளே விட்டு தண்ணியை உறிஞ்சிக் குடிக்கும்னும் கதையை டெவலப் பண்ணிச் சொல்வாங்க. ஜாடி உயரத்துக்கு எங்கேயாவது ஸ்ட்ரா இருக்குமா, அப்படியே இருந்தாலும் மனுஷங்க உறியற மாதிரி காக்காவால ஸ்ட்ராவால உறிஞ்சிக் குடிக்க முடியுமான்னெல்லாம் கேள்விகள் எழலாம். ஆனா, நாம இந்தக் கதைகள்லேர்ந்து தெரிஞ்சுக்க வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்! மாற்றி யோசித்தல்! பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்!

https://www.youtube.com/watch?v=03ykewnc0oE இந்த யு.ஆர்.எல். லின்க்கைக் கிளிக் பண்ணிப் பாருங்க; அசந்து போவீங்க! டம்ளருக்குள்ள இருக்கிற பொருளை ஒரு கம்பியால எடுக்க முயற்சி பண்ணுற காக்கா, முடியலேன்னதும் அந்தக் கம்பியைக் கொக்கி மாதிரி வளைச்சு அந்தப் பொருளை எடுக்குது.

காக்கா என்ன, அவ்ளோ பெரிய அப்பா டக்கரா… இல்லே, யாராச்சும் கிரியேட்டிவ்வா யோசனை பண்ணி இப்படி ஒரு ஃபன்னி வீடியோவைத் தயாரிச்சுப் பதிவேத்திருக்காங்களான்னு தெரியலே.
போகட்டும், நாம மேட்டருக்கு வருவோம். 'பெட்டிக்கு வெளியே சிந்திப்பது' பத்திப் பேசிட்டிருக்கோம். அப்படிச் சிந்திக்க நாம பழகிக்கணுமா, அதனால நமக்கு ஏதாவது பிரயோசனம் உண்டானு உங்கள்ல சில பேர் நினைக்கலாம்.

ஒண்ணு ரெண்டு இல்லே… ஏராளமான பயன்கள் உண்டு. வழக்கமான ரூட்டுல சிந்திக்கும்போது, பலமுறை பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறதில்லே. அதுவே 'பெட்டிக்கு வெளியே' சிந்திக்கும்போது சுலபமான தீர்வுகள் கிடைப்பதுண்டு.

கடுமையான உழைப்பைக் கொட்டி, வியர்வை சிந்தி ஒரு வேலையை முடிக்கிறதைவிட, அதை சாமர்த்தியமா, அதிக சிரமமில்லாம சுலபமா முடிக் கிறதுதான் புத்திசாலித்தனம். ராப்பகலா வேலை செய்யறவனைவிட, ஜஸ்ட் லைக் தட் ஒரு காரியத்தை சுலபமா முடிச்சுக் கடாசிட்டுப் போறவனைத்தான் கம்பெனிகளும் ஸ்மார்ட் வொர்க்கர்னு கொண்டாடுது. அப்படியான ஸ்மார்ட் வொர்க்கரா ஆகுறதுக்கு இந்தப் 'பெட்டிக்கு வெளியே சிந்தித்தல்' ரொம்பவே உதவும்.

தவிர, 'பேரடைம்' பத்திப் பார்த்தோமே, ஞாபகமிருக்கா? ஒருத்தரைப் பத்தி நாம முன்கூட்டியே முடிவெடுக்கிற மனப்பான்மையைத்தான் 'பேரடைம்'னு சொல்றோம். அதனால பல மனச் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள் வர்றதுண்டு. 'பெட்டிக்கு வெளியே' சிந்திக்கும்போது, இந்த 'பேரடைம்' மனப்பான்மையை நாம கழட்டி வெச்சுடறோம்.

மரத்திலிருந்து பழம் விழுந்தா, 'ஆஹா, திங்கிறதுக்கு ஒரு சுவையான பழம் கிடைச்சுது'ங்கிறதோட நம்ம சிந்தனை முடிஞ்சுடும். ஒரு பொருளைப் போட்டா, அது கீழே விழத்தான் செய்யும் என்பது நம்ம மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. அதனால, அது அப்படித்தான்னு முடிவு கட்டிடறோம். அதுக்கு மேல நமக்கு யோசிக்கத் தோணறதில்லே. ஆனா, நியூட்டன் கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சார். பழம் ஏன் கீழே விழணும், அப்படியே மேலே பறந்து போயிருக்கலாமேனு யோசிச்சார். புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிச்சார்.

காவல்துறையில் ஒரு சிலர் செய்யும் தவறுகளால், காவல் துறையில் இருக்கிற அத்தனை பேருமே அதிகார துஷ்பிரயோகம் செய்யறவங்கதான்னு நினைக்கிறது; அரசு ஊழியர்கள் அத்தனை பேருமே லஞ்சம் வாங்கறவங்கதான்னு ஒரு முடிவுக்கு வர்றது; ஒரு சாதியிலேயோ, மதத்திலோயோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால அந்தச் சாதிக்காரர்களே, மதத்துக்காரர்களே அப்படித்தான்னு தீர்மானிக்கிறது... இதெல்லாம் 'பேரடைம்' மனப்பான்மையில் வரும்.

பாண்டவர்கள்னா அந்த அஞ்சு பேரும் நல்லவங்க, துரியோதனாதிகள்னா அவங்க 101 பேருமே தீய எண்ணம் கொண்டவங்கதான்னு நமக்குள்ளே ஒரு அழுத்தமான எண்ணம் பதிஞ்சிருக்கு இல்லியா? நாம என்னிக்காவது துரியோதனனின் நூறு சகோதரர்களில் ஒருவர் கூடவா நல்லவரா இருக்க மாட்டார்னு யோசிச்சுப் பார்த்திருக்கோமா?

துரியோதனனின் சகோதரர்கள் நூறு பேரில் இரண்டு பேர் உத்தமர்கள்; நீதி, நியாயம் பக்கம் நிற்பவர்கள். ஆனா, அவங்களையும் அயோக்கியர்கள் லிஸ்ட்டுல சேர்த்துட்டோம்.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சூதாட்டம் நடக்குது. தருமன் தோற்கிறான். இனி பணயம் வைக்க ஏதுமில்லை என்கிற நிலையில், மனைவி திரௌபதியைப் பணயம் வைக்குமாறு சகுனி சொல்றான். தருமனும் அப்படியே செய்து ஆட, மறுபடியும் தோத்துடறான்.  ``சூதாட்டத்தில் `இதைப் பணயம் வை'ன்னு எதிராளி சொல்லக் கூடாது என்பது விதி.ஆனால், சகுனி சொல்லித்தான் தருமன் தன் மனைவியைப் பணயமாக வைக்கிறான். அதனால் அவள் பணயப் பொருள் அல்ல. அது தர்மமும் அல்ல!'' என்று அந்தச் சபையிலேயே அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கண்டித்தவன் துரியோதனனின் தம்பி விகர்ணன்.

நல்லா யோசிச்சுப் பாருங்க, பீஷ்மாச்சாரியார், துரோணாச்சாரியார் போன்ற பெரிய மனிதர்கள் எல்லாம் கண்ணெதிரே நடக்குற அநியாயத்தைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாம, அரசன் எவ்வழி, நாமும் அவ்வழின்னு பம்மிப் பதுங்கி, வாய் மூடி மௌனமா உட்கார்ந்திருக்கிறப்போ, அத்தனை பெரிய சபையில தைரியமா எழுந்து நின்னு நியாயத்தை எடுத்துச் சொல்ல எவ்வளவு தைரியமும் மனத் துணிவும் வேணும்?

ஆனா, அதர்மம் நிறைந்த அந்தச் சபையில் அவன் பேச்சு எடுபடவில்லை. போதாக்குறைக்கு கர்ணன் வேறு இவனை கோடாலிக் காம்புன்னு கேலி செஞ்சு, திட்டினான். அப்பவும், `நீங்க அத்தனை பேரும் நரகத்துக்குதான் போவீங்க' ன்னு சொல்லிட்டு உட்கார்ந்தான் விகர்ணன்.

மகாபாரதப் போர்ல துரியோதனனின் சகோதரர்களில் எட்டு பேரை பீமன் ஒரே நேரத்துல அடிச்சுக் கொன்னான். அந்த எட்டு பேரில் விகர்ணனும் ஒருத்தன். அப்போ, `விதிவசத்தால், உத்தமனான உன்னையும் நான் கொல்ல நேர்ந்ததே'ன்னு இதயம் வெடிச்சு அழுதானாம் பீமன். அந்த அளவுக்கு உத்தமன் விகர்ணன்.

விகர்ணனைப் போலவே துரியோதனனின் தம்பியான `யுயுத்ஸு'ங்கிறவனும் நல்ல குணங்கள் கொண்டவனா இருந்தான். ஒவ்வொரு முறையும் தன் அண்ணன்மார்களின் அடாத செயல்களைக் கண்டு வெட்கித் தலைகுனிந்து நின்னவன் அவன். போர்க்களத்தில் அபிமன்யு கொல்லப்பட்ட விதம் அநியாயமானது, அதர்மமானதுன்னு சொல்லி, போர்க்களத்திலிருந்தே வெளியேறியவன் இந்த யுயுத்ஸு.

இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, நம்ம பொதுப் புத்தியில படிஞ்சிருக்கிற சில எண்ணப் படிமங்களை வெச்சு சட்டுனு எந்த முன்முடிவுக்கும் வரவேணாம்; கண், காதுகளை மட்டுமில்ல, நம்ம மனசையும் விசாலமா வெச்சுப்போம். வழக்கமான, சம்பிரதாயமான போக்குல சிந்திக்காம கொஞ்சம் வித்தியாசமா சிந்திப்போம்; மாத்தி யோசிப்போம்! ரைட்டா?