Monday, April 11, 2016

மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் !




மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் !

உண்மையிலேயே கடவுளைக் காண முடியுமா, அப்படிக் கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால், பதில், ஆம். இருக்கிறார்கள் என்பதுதான். கடவுளைக் கண்டது மட்டுமல்ல; அவ்வாறு கண்டதை அவர்கள் பதிவு செய்தும் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இது.

Colonel Lionel Blaze (கலோனெல் லையோனெல் ப்ளேஸ்) என்பவர் 1795 – 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஒரு ஆங்கிலேயே அதிகாரி. இந்துக்கள் என்றாலே முட்டாள்கள், படிக்காதவர்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், மூடர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல; சிலையை வணங்கும் இந்துக்கள் பைத்தியக்காரர்கள் என்பதும் அவர் எண்ணம்.

ஒருநாள்… அவரது ஆட்சிக்குட்பட்ட மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. அவ்வாறு உடைந்தால் அந்த ஊரும் சுற்றி உள்ள சின்னச் சின்ன கிராமங்களும் வெள்ளத்தால் அழிந்து விடும். அதனால் அந்த ஊர்ப் பொதுமக்கள் அவரைச் சந்தித்து ஏதாவது செய்யும் படி வேண்டிக் கொண்டனர். அந்த அதிகாரி உடனே மக்களிடம், "நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! ஒரு தெய்வம். அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க வேண்டியதுதானே?" என்று கேட்டார்.

உடனே அங்குள்ள பெரியவர் ஒருவர், "ஐயா, அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் ஸ்ரீராமர் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும், ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார்" என்றார் நம்பிக்கையுடன். "ம், அதையும் தான் பார்ப்போமே" என்று சொல்லி விட்டு தனது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார் அந்த அதிகாரி. மக்களும் ஸ்ரீ ராம பிரானை நோக்கிப் பிரார்த்தனை செய்தவாறே கலைந்து சென்றனர்.

நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி. சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார்.

வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. " இந்த மழைக்கு நிச்சயம் இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும்" என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.

அந்த வெளிச்சம் அடங்கும்போது , ஏரியின் கரை மீது இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். இருவர் கைகளிலும் வில்லேந்தியிருந்தார்கள். ஒரே கணம்தான் அந்தக் காட்சியை அந்த அதிகாரி கண்டார். அடுத்தாற்போல் அக்காட்சியைக் கண்ட அந்த ஆங்கிலேய அதிகாரி, தரையில் மண்டியிட்டு விழுந்து ஏதேதோ சொல்லிச் சொல்லி அரற்றினாராம். 

மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது. ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி, தான் கடவுளைக் கண்ட சம்பவத்தை மக்களுக்குச் சொன்னதுடன் அன்று முதல் ஸ்ரீ ராமபிரானின் பக்தராகவும் ஆனார். ஸ்ரீ தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்ததுடன், பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார். நடந்த சம்பவத்தை அந்த ஆலயக் கல்வெட்டிலும் வெ பதிப்பித்தார். – "இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது" என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம்.


அந்த ராமர் கோயிலின் பெயர் 'ஏரி காத்த பெருமாள்'....