Saturday, April 2, 2016

ஒட்டுமொத்த உழைப்பு



இரை தேடி ஊரெல்லாம் அலைந்த காக்கா நிலத்துக்கு அடியில் உள்ள நீரோடு சேர்த்து நிலத்துக்கு மேலுள்ள நீரும் வற்றிப்போனது தெரியாமல் தண்ணீருக்காவும் ஊரெல்லாம் அலைந்து கொண்டு இருந்தது, ஒரு குடத்தில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதை பார்த்து ஒவ்வொரு கல்லாய் எடுத்துபோட்டது நெடுநேரம் ஆகியும் தண்ணீர் மேலே வராததால் கொஞ்சம் பெரிதான ஒரு வெள்ளைக்கல்லை போட்டது இப்போது தண்ணீர் மேலே வர முக்குமுட்ட குடித்துவிட்டு வானத்தை பார்த்து யோசித்தது இவ்வளவு நேரம் எத்தனையோ கற்களை போட்டோம் தண்ணீர் மேலே வரவில்லை ஆனால் கடைசியாக அந்த வெள்ளைக்கல்லை போட்டதும் தண்ணீர் மேலே வந்துவிட்டது அப்படியானால் அந்த வெள்ளைக்கல்லில் ஏதோ சக்தி இருக்கிறது, அது ஒரு அதிர்ஷ்டக்கல், ஆகவே அந்த கல்லை நம்மோடு வைத்துக் கொள்ளவேண்டும் என முடிவெடுத்து பானையில் இருந்து அந்த கல்லை வெளியே எடுத்தது, ஒரு பெட்டிக்கடையில் நூலை திருடி அந்த கல்லை கட்டியது, 

அதன் பின் எங்கு சென்றாலும் தினமும் அந்த கல்லை தன்னுடன் எடுத்து செல்லும், குளம் நிறைய தண்ணீர் இருந்தாலும் கல்லைத்தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு தண்ணீர் மேலே வருகிறதா என நூலைப்பிடித்து கொண்டு கரையிலேயே உட்கார்ந்து இருக்கும் தண்ணீர் மேலே வராது 

இன்று நேரம் சரியில்லை என்று தானாக இறங்கி குடித்துவிட்டு, கல்லை திரும்ப எடுத்து நூலில் சுற்றிக்கொண்டு கிளம்பிவிடும், இப்படியே குளம், குட்டை, ஆறு, கிணறு என்று எல்லா இடத்திலும் கல்லை போட்டு போட்டு பார்க்கும் ஆனால்தண்ணீர் மேலே வராது! அன்று ஒருமுறை போட்டதும் மேலே வந்த தண்ணீர் இன்று ஏன் வரவில்லை, இந்த கல்லில் இருந்த சக்தி எங்கே போனது என்று யோசித்து யோசித்து tired ஆகிவிட்டது, ஏற்கனவே நாள்கணக்கில் கல்லை சுமந்து அலைந்ததில் பாதி உடல் இளைத்து போயிருந்தது! அதிர்ஷ்டக்கல் என்று நம்பிவிட்டதால் தூக்கிப்போடவும் மனம் வரவில்லை, கடைசிவரை அது ஒரு சாதாரண கல் என்பதை உணராமலேயே காக்கா உயிரைவிட்டது! 

நாமும் அதுபோல் தான், எத்தனையோ முயற்சிகளின், கடின உழைப்பின் பலனாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வெற்றியை தொடும் தருணத்தில் அன்றைய நாளையோ தேதியையோ நேரத்தையோ நம்பரையோ காரணம் காட்டி மொத்த சக்தியையும் அதிர்ஷ்டம் என்ற ஒரு வார்த்தைக்குள் அடைத்துவிடுகிறோம், அதன் பின் அந்த நாளையும் நம்பரையும் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு முயற்சியிலும் உழைப்பையும் திறமையையும் உதாசீனப் படுத்துகிறோம், 

கடைசி வரை காக்காவை போல் நமக்கும் தெரிவதே இல்லை அந்த ஒரு கல்லை அதிர்ஷ்டக்கல்லாக்கியது எத்தனையோ கற்களின் ஒட்டுமொத்த உழைப்புதான் என்று!