Friday, April 1, 2016

யார் அந்த சாப்பாட்டுப் பிரியன்?!

'யார் அந்த சாப்பாட்டுப் பிரியன்?!'பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

ம்மிடம் ஒரு பழக்கம் உண்டு. நல்லதை எவ்வளவு போ் சொன்னாலும் கேட்க மாட்டோம். கெட்டதையோ, யாரும் பாடம் நடத்தவே வேண்டாம், நாமாகப் போய் விழுவோம். போக்கு வரத்தில் சிவப்பு விளக்கு எரியும்; காத்திருப்போம். அதை மீறி, யாராவது ஒருவா் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனால் போதும்; நாமும் பின்னாலேயே கிளம்பிவிடுவோம்!

நம் கெட்டநேரம் அங்கே தலைநீட்டும். முன்னால் போனவா் போய்விடுவார்; நாம் காவலரிடம் அகப்பட்டுக்கொள்வோம். முன்னால் போனவரை ஏன் பிடிக்கவில்லை எனக் கேட்க முடியாது. ஆனால், நாம் கேட்போம். பிரச்னை பெரிதாகும். தவறு யார் மீது? முன்னால் போனவரை நமக்கு வழிகாட்டியாகக் கொண்டோமே! அவரா நம்மைப் பின்தொடரச் சொன்னார்? இல்லையே! நம்மைப் பிடித்த காவல்துறையின் தவறா? இல்லை. பிறகு?

ஒருசில விநாடிகள் காத்திருக்கப் பொறுமை இன்றி, அவசரத்தோடு போக்குவரத்து விதியை மீறியதன் விளைவு இது.

பொறுத்தார் பூமியாள்வார்; பொறுக்காதார் ஆளப்படுவாரா! இதைக் கைவல்லிய நவநீதம் சொல்லும் பாங்கைப் பார்க்கலாம்.

நலமெய் ஐயனே! எல்லவர்க்கும் தெய்வ
    நாயகன்  பொதுவானால்
சிலரை வாழ்வித்தும் சிலரோடு கோபித்தும்
    செய்வது ஏன் என்றாயேல்
குலவு மைந்தரைத் தந்தைபோல் சிட்டரைக்
    குளிர்ந்து துட்டரைக் காய்வன்
கலைகள் நல்வழி வரச்செயும் தண்டமும்
    கருணை என்று அறிவாயே


  - (சந்தேகம் தெளிதல் படலம்-60)  
 
எல்லோருக்கும் பொதுவான தெய்வம் சிலரை வாழ்விக்கிறது; சிலா் மீது கோபம் கொள்கிறது. தெய்வ கோபம் தண்டனை மூலம் வெளிப்படுகிறது. அது, தந்தை ஒருவா் நல்ல மைந்தனுக்குப் பாராட்டும், கெட்ட மைந்தனுக்குத் தண்டனையும் அளிப்பதைப் போன்றது. முறை தவறியவா்களை முறைப்படுத்துவதற்காகவே தெய்வம் தண்டனை அளிக்கிறதே தவிர, தெய்வத்துக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் கிடையாது.

சூரபதுமனோ ராவணனோ தவம் செய்தால் அவா்களுக்கு தெய்வம் அருளவும் செய்யும். குபேரனோ, இந்திரனோ, துர்வாசரோ தவறு செய்தால், அவர்களுக்குத் தண்டனை வழங்கவும் தவறாது. ஆகையால் தெய்வத்துக்குப் பாரபட்சம் என்பதே கிடையாது.

எனில், தெய்வம் எல்லோரையும் ரட்சித்து விட்டுப் போகவேண்டியதுதானே, ஏன் அப்படிச் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தால், அதற்கும் விளக்கம் சொல்கிறது அடுத்த பாடல். 

மனை விலங்கு அறு மைந்தனே கற்பக
    மரம் கனல் புனல் மூன்றும்
தனை அடைந்தவர் வறுமையும் சீதமும்
    தாகமும் தவிர்த்து ஆளும்
அனைய ஈசனும் அடைந்தவர்க்கு அருள் செய்வான்  
    அகன்றவர்க்கு அருள் செய்யான்
இனைய குற்றங்கள் எவர் குற்றம் ஆகும் என்று
    எண்ணி நீ அறிவாயே 


  - (சந்தேகம் தெளிதல் படலம்-61) 


கற்பக மரத்திடம் போய் எதைக் கேட்டாலும் கொடுக்கும்; அக்னியிடம் நெருங்கினால் குளிர் விலகுவதைப்போல், தண்ணீரை அருந்தினால், தாகம் நீங்குவதுபோல், ஈசனை அடைந்தவா்களுக்கு ஈசனருள் கிடைக்கும்; அடையாதவா்க்குக் கிடைக்காது.

இந்தப் பாடலின் முதல் அடியில் சீடனை 'மனைவிலங்கு அறு மைந்தனே' என குருநாதர் அழைப்பது, சீடனின் தகுதியைக் குறிக்கிறது. சம்சார, குடும்ப விலங்குகளை அறுத்தெறிந்தவனாம் சீடன். அதுமட்டுமல்ல! அப்படிப்பட்ட சீடனை 'மைந்தனே' எனக் கூறியிருப்பதும் கூா்ந்து நோக்கத்தகுந்தது. 'மைந்து' என்ற சொல்லுக்கு வலிமை, வீரம் எனப் பொருள் உண்டு. மைந்து உடையவன் மைந்தன்; அதாவது, வலிமையும் வீரமும் உடையவன் மைந்தன்.

குடும்ப விலங்குகளை அறுத்து எறிய மிகுந்த வலிமையும் வீரமும் வேண்டும். அவை இல்லா மல், ''நான் சாமியாராகப் போறேன். இனி, உங்கள் வில்லங்கமே வேண்டாம்'' என்று வீர வசனம் பேசிவிட்டுப் போனவா்கள், இன்னொன்றைப் பிடித்துக்கொண்டு திரும்புவதைப்போல ஆகிவிடக்கூடாது. 

கைவல்லிய நவநீத குருநாதரின் சீடன் உடல் - உள்ளம் எனும் இரண்டிலும் வலிமையும், வீரமும் பொருந்தியவன். அப்படி இல்லாவிட்டால், எதை வெறுத்து, பயந்து ஓடினோமோ, அவற்றிலேயே மறுபடியும் போய் விழ நேரிடும். சீடன் மிகுந்த மன வலிமை படைத்தவன் என்பது இங்கே குறிப்பிடப்படுவதோடு, அப்படிப்பட்டவா்களே கைவல்லிய நவநீதத்துக்கு அதிகாரிகள் என்றும் குறிப்பிடுகிறது.

மற்றொரு விதமாகப் பார்த்தால்... நல்லதைச் செய்பவா்களுக்குத் தைரியம் ஊட்ட வேண்டும். ''இதெல்லாம் சுலபத்துல முடியாதுப்பா! அதுவும் உன்னை மாதிரி ஆளுங்களால முடியவே முடியாது" என்று சொல்லக் கூடாது. நல்வழியில் செல்ல முயல்பவனைத் தடுத்துத் திருப்பிவிட்டு, பிறகு ஏசிக்கொண்டிருப்பதில் என்ன லாபம்?

இந்த முறையை அனுசரித்து, ''மைந்தனே" என்று அழைப் பதாக... அதாவது, "வலிமையும் வீரமும் கொண்டவன் நீ! போனதெல்லாம் போகட்டும். வா! நான் வழிகாட்டுகிறேன். நீ உயா்நிலை அடை!" எனக் குருநாதா் கூறுவதான குறிப்பும் உண்டு. இப்படிப்பட்ட குருநாதா் தொடர்ந்து மேலும் பல விளக் கங்களை சீடனுக்கு வழங்கினார். அவற்றை அறியுமுன் ஒரு கதையைப் பார்ப்போம்.

வயிற்றுக்கு வஞ்சனையே செய்யாத ஒருவா் இருந்தார். அவர், செல்வந்தர் ஒருவரது வீட்டுக் கல்யாணத்துக்குச் சென்றார். அங்கே, வயிறார உண்டார். வாயைத் திறந்தால் காக்கா கொத்தும்! அந்த அளவுக்குச் சாப்பிட்டிருந்ததால், 'உஸ்-புஸ்' என்று மூச்சுவிட்டுக்கொண்டு வந்தவா், ஒரு வீட்டின் திண்ணையில் படுத்தார். அப்படியும் இப்படியுமாகப் புரண்டார். 

இவா் நிலையைப் பார்த்து இரங்கிய அந்த வீட்டுக்காரா், ''ஜீரண மாத்திரை தரட்டுமா?'' என்று கேட்டார். அவரை அருகில் அழைத்த இந்த ஆசாமி, அவர் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டு, ''ஏனய்யா... ஜீரண மாத்திரை கொள்ளுகிற அளவுக்கு வயிற்றில் இடம் இருந்திருந்தால், இன்னும் கொஞ்சம் அயிட்டத்தை உள்ளே தள்ளியிருக்க மாட்டேனா?'' என்றாராம்.

சிரிக்காதீர்கள்... அந்தச் சாப்பாட்டுக்காரா் வேறு யாருமல்ல, நாம்தான்!

உலக விவகாரங்கள், உலகத்தைத் தாண்டிய விவகாரங்கள் எனப் பலவற்றையும் வாரி உள்ளே கொட்டிக் கொண்டிருக்கிறோம். ஜீரண மாத்திரைபோல, எதையாவது நல்லதை உள்ளே செலுத்தலாம் என்றால், இடம் இல்லை. ஆகவே, பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறோம்.  வெளியில்  இருந்து எதுவும் நம்மைப் பாதிக்க வில்லை. நம்முள்ளே இருப்பவைதான் பாரமாக இருந்து நம்மை களைப்படையச் செய்து, கீழே தள்ளுகின்றன. அவற்றின் அழுத்தம் தாங்காமல் - பாரம் தாங்காமல் நாம் கீழே விழுகிறோம். வெளி பாதிப்புகள் என்றால், விலகிப் போய்விடலாம். மனதில் ஏற்றிக் கொண்டவை, நாம் எங்கு போனாலும் கூடவே வருமே! எப்படித் தப்புவது? வேறு வழியே இல்லை. கைவல்லிய நவநீதம் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்!