Tuesday, May 20, 2014

இது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை!

மும்பையின் இரவு நேர விடுதி ஒன்றிலிருந்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்ற 5 குண்டர்கள், அவளை பாலியல் பலாத்காரம் செய்து வீதியில் வீசிச் சென்றுவிட்டனர்' என்று சமீபத்தில் ஒரு வழக்கு பதிவானது. பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்தபோது, 'என்ன நடந்தது என்பது சிறிதளவுகூட என் நினைவில் இல்லை' என்றார். ஆனால், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது.

'அந்தப் பெண்ணுக்கே தெரியாமல், இது எப்படி நடந்திருக்க முடியும்? என்று அதிர்ந்த மருத்துவர்கள்... மேற்கொண்டு அந்தப் பெண்ணை பரிசோதித்ததில், ஒரு மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்துகொடுத்து, சீரழித்துள்ளனர் என்பது தெரிந்தது.

'ஃபேஸ்புக்'கில் சுழன்றுகொண்டிருக்கும் இந்தச் செய்தியை... சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் சொன்னபோது, ''இது மும்பையில் மட்டும் நடந்திருக்கும் கொடுமையல்ல... எல்லா இடங்களிலும் இந்த வகை குற்றம் தற்போது பெருகி வருகிறது'' என்று அதிரவைத்தார்.

தொடர்ந்தவர், ''தற்போது விதம்விதமான மயக்க மருந்து மற்றும் மாத்திரைகள் சந்தைக்கு வருகின்றன. இவற்றில் சில, மிக எளிதில் கிடைக்கக் கூடியனவாக இருக்கின்றன. குளிர்பானம், ஐஸ்க்ரீம் என எதில் வேண்டுமானாலும் இவற்றை எளிதில் கலந்துவிட முடியும். மூடி போடப்பட்டிருக்கும் குளிர்பானங்களில்கூட ஊசி மூலம் கலக்கலாம். அவை எவ்வித சுவை, வண்ண மாற்றமும் ஏற்படுத்தாமல், கண்டுபிடிக்க முடியாதபடி உணவுப் பொருளோடு முற்றிலும் கலந்துவிடும்.

சதிகாரர்கள் இதை பெண்களை உட்கொள்ளச் செய்து, சிறிது நேரத்தில் போதையேற்றி, தன்னிலை மறக்கச் செய்து, 10, 12 மணிநேரம் வரை என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்கு மயக்க நிலைக்குத் தள்ளுகிறார்கள். மிக எளிதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். இப்படி பலியாகும் பெண்களுக்கு, தங்களை யார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர் என்பதுகூடத் தெரியாது. இம்மருந்துகளை சாப்பிட நேரிடும் பெண்கள், கருவுறமுடியாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் பல பக்கவிளைவுகளையும் வாழ்நாள் முழுக்க எதிர்கொள்ள நேரிடலாம்'' என்று எச்சரிக்கையாகச் சொன்னார் டாக்டர்.

இரவு நேர கொண்டாட்டங்களுக்குச் செல்லும் பெண்கள், ஆண் நண்பர்களுடன் அவுட்டிங் செல்லும் பெண்கள் மட்டுமல்ல, எல்லா வயதுப் பெண்களுமே உஷாராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையுமே சந்தேகப்பட வேண்டும் என்பதைத் தவிர, வேறெதையும் சொல்லத் தோன்றவில்லை.