Thursday, May 15, 2014

எக்குத்தப்பாகப் பெருகும் குப்பை உணவு

''என்ன செய்யப்போகிறோம்? அதன் அபாயம் குறித்த புரிதல் நம்மிடம் இருக்கிறதா? எப்படி நம் சந்ததியினரைக் காப்பாற்றப் போகிறோம்? என்ன திட்டம் வைத்திருக்கிறோம்?' - இப்படி ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கியிருக்கிறது புது டெல்லி நீதிமன்றம்... எதற்கு?

தேசிய அளவில் எக்குத்தப்பாகப் பெருகும் குப்பை உணவுக்காக!

அதீதக் கொழுப்பு மற்றும் எண்ணெய்ச் சத்துடன் உடல் எடையை அதிகரித்து, ரசாயன மாற்றங்களைத் தாறுமாறாக ஊக்குவிக்கும் உணவுகளே... குப்பை உணவுகள். இவை, உண்டாக்கும் அபாயங்களைக் கட்டுப்படுத்த வல்லுநர்களை வழிகாட்டச் சொல்லிக் கேட்டிருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம்.

அதற்கான கூட்டத்தில் கலந்துகொண்ட பெரு உணவு நிறுவனங்களின் கூட்டமைப்புகள், 'உணவில், குப்பை உணவு என்று ஒன்று எப்படி இருக்க முடியும்? எங்கள் உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளை ஓடியாடி விளையாடச் சொல்லுங்கள்; குதிக்கச் சொல்லுங்கள்; கூடுதல் உப்பும் சர்க்கரையும் நல்லதுதானே?' என்று பகீர் லாஜிக் சொல்லி வாதிட்டதாகப் பிரபல சூழலியலாளர் சுனிதா நாராயண், தனது 'டவுண் டு எர்த்' இதழில் பொங்கியிருக்கிறார்.

இந்திய உணவு வணிகத்தில் உச்சத்தில் இருக்கும் நூடுல்ஸ் தயாரிப்போர், நொறுக்குத் தீனி தயாரிப்போர், குளிர்பான கம்பெனிகள் தலைமையேற்று வழிநடத்தும் National Restaurant Association of India, All India food processors Association ஆகிய இருபெரும் கூட்டமைப்பும், குழந்தை மருத்துவர்கள் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், 'நாம என்ன செய்ய முடியும்? பிள்ளைகளைக் கவனித்துச் சாப்பிட அறிவுறுத்தலாம் (eat responsibily)' என்ற ரீதியில் விவாதித்திருக்கிறார்கள்.

அந்த விவாதத்தில், சிக்ஸ் பேக், சிக் இடை, சிக்ஸர் பிரபலங்களை இனி இந்தக் குப்பை விளம்பரத்துக்குப் பயன்படுத்துவதைத் தடை செய்யலாம் என்று வந்து விழுந்த ஒரு யோசனையை நினைத்து அழுவதா... சிரிப்பதா எனத் தெரியவில்லை. பள்ளி அருகில் குப்பை உணவுகள் விற்பதைக் குறைத்துக்கொள்ளச் சொல்லலாம் எனவும் யோசனை சொல்லியிருக்கிறார்கள்.

பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றும் போராட்டங்களே இன்னமும் தொடரும் நிலையில், குப்பை உணவுக் கடைகளை எப்படி நிறுத்தப்போகிறோம்? நீதிமன்ற உத்தரவுக்காகக் குப்பை உணவு விவகாரம் இப்போது ஊறப்போடப்பட்டிருக்கிறது. அதே சமயம், எது குப்பை உணவு என்பதில் நமக்கும் கொஞ்சம் தெளிவு வேண்டும்.

இத்தாலியின் ரோம் நகர ஆயா சுட்ட பீட்சா, அவர்களுக்கு குப்பை இல்லை. பெய்ஜிங்க்குப் பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் யுவான் சுவாங் பெரியம்மா வீட்டில் செய்த நூடுல்ஸ் அவர்களுக்குக் குப்பை இல்லை. ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு வெளியே அந்த ஊர் grobmutter (பாட்டிக்கு ஜெர்மானியப் பெயர்) செய்யும் பர்கர் அவர்களுக்குக் குப்பை இல்லை. ஆனால், இவற்றில், அவரவர் நாட்டில் விளையும் பொருள்களையும் சேர்த்துக் கூடுதலாக உப்பு, எண்ணெய், இனிப்பு, வாசனைத் திரவியம், சுவையூட்டி, கெட்டுப்போகாது இருக்கும் ரசாயனம், புதிதாகத் தெரிய உதவும் உப்பு, தனக்கான பிரத்யேகச் சுவை தரும் பேட்டன்ட் மர்மப் பொருள்கள் ஆகியவை சேர்த்து, அமைந்தகரையிலும் ஆலங்குளத்திலும் சுடச்சுட விற்கப்படும்போதுதான் அந்த உணவு குப்பை ஆகிறது.

ரோம் நகர ஆயாவுக்கும் பெய்ஜிங் பெரியம்மாவுக்கும் சந்தை தெரியாது. நம் அப்பச்சி போல, அவர்களுக்கும் நம் சந்ததி நலம் மட்டும்தான் முக்கியம். வணிகத்துக்காக மட்டும் வடை சுடும் கம்பெனிகளுக்கோ இந்த 'கேர்' கணக்கைவிட, 'ஷேர்' கணக்குதான் முக்கியம்.

விஷயம் தெரியாத அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத இளைஞர்களோ 'கெமிக்கல் சேர்த்துச் சாப்பிட்டால்தான் எங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகுது' என்று அந்தக் குப்பை உணவைச் சட்டி நிறைய வைத்துக்கொண்டு வயிற்றை நிரப்பி உப்ப வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதே சமயம், கொஞ்சம் வேகமாகவே பிரபலமாகிவரும் சிறுதானியம் குறித்தும் எனக்குக் கொஞ்சம் பயம் உண்டு. சோளப் பணியாரம், கம்பங்கூழ் வகையறாக்களுக்கு நம்மவர்களிடையே பெருகிவரும் ஆதரவைக் கண்டு, அதிலும் பணம் பண்ணலாம் எனப் பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரித்தால், வெகுவிரைவிலேயே தெருவுக்குத் தெரு ஃபிரெஞ்சு விண்டோ போட்ட வண்ணமயமான கடைகள் 'கடலைக் கறி பீட்சா, கொள்ளு பர்கர், வெந்தய பாஸ்தா' என விற்கக்கூடும். என்ன ஒரு சந்தேகம்... அதில் வெறும் மோர், சின்ன வெங்காயம் ஆகியவை மட்டும் சேர்ப்பார்களா அல்லது சந்திரன், செவ்வாயில் இருந்தது எல்லாம் பெயர்த்து எடுத்துவந்த ரசாயனம் தூவி விற்பார்களா என்பது தெரியாது!

குப்பை உணவுகள்தான் இன்று குட்டி குண்டர்களையும் நாளைய நீரழிவு நோயாளிகளையும் படைக்கின்றன. ஏழு வயசுப் பையன், 'கேஸ் டிரபிள் அங்கிள்...' என்பதும், உடனே, 'அதுக்கென்ன இப்போ குழந்தைங்க அல்சருக்கு ஸ்பெஷல் அல்சர் மருந்து எல்லாம் பிச்சுக்கிட்டுப் போகுது சார்...' என மருந்து நிறுவனங்கள் குஷியாவதும் இந்தக் குப்பை உணவுகளால்தான்.

வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் அதிகம் தாகம் எடுத்து, உடற்பயிற்சிக்கு என ஒரு துளி வியர்வை சிந்தாமலே தடாலடியாக ஐந்து கிலோ எடை குறைந்து, பசி வரும்போது 10 பேரை அடிக்க வேண்டும்போல டென்ஷன் வந்து, அலுவலக மெடிக்கல் க்ளைமுக்காகப் பரிசோதித்தபோது, 'உங்களுக்கு சுகர்' என மருத்துவர் 'ஸ்வீட் நியூஸ்' சொல்லும்போதுதான் நமக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறது என்பதே தெரியவரும்.

ஆனால், அதற்கு 4-5 வருடங்களுக்கு முன்னரே, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையிலே, ரத்தக்குழாயில் கொழுப்புப் படிவதில் தொடங்கி, சின்னச் சின்ன ரத்த நாளங்களில் சோர்வும் சிதைவும் படிய ஆரம்பித்திருக்கும்.

'தடுக்குமா... தடுக்காதா?' எனப் பல சர்ச்சைகளில் இருக்கும் பல தொற்றுநோய்களுக்கும் பக்கம் பக்கமாகத் தடுப்பூசி போடச் சொல்லும் அரசும் மருத்துவர்களும், நிச்சயம் நோயைத் தரக்கூடிய இந்தக் குப்பை உணவைத் தடுப்பதற்கு மட்டும் இத்தனை அலட்சியம் காட்டுவது ஏன்?

உலகம் முழுக்கவே குப்பை உணவுக்கு அதிக வரி விதிக்கிறார்கள். பள்ளிகளில் தடை விதிக்கப்படுகிறது. ஹாலிவுட் பிரபலங்கள், 'இனி நான் இதற்கு விளம்பரம் செய்ய மாட்டேன்' எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  அமெரிக்காவின் முதல் பெண் மிச்சல் ஒபாமா, குப்பை உணவுக்கான எதிர்ப் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார். கொத்துக்கொத்தாகச் செத்துப்போகும் அபாயம் தரும் குப்பை உணவின் பிடியில் 10 வயதிலும், குடிப்பழக்கப் பிடியில் 20 வயதிலும் இருப்பதை இப்போது தடுக்காமல் நாளைய நலவாழ்வைத் திட்டமிடுவது எப்போது?