Saturday, December 8, 2012

நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்!

ஹலோ சார்.. நான் ஹேமா. மும்பையில் இருக்கேன்... உங்களின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். ஐ லைக் யூ! நீங்க சென்னையில பிஸினஸ் செய்றீங்களா? என்னை உங்கள் நண்பியாக ஏத்துக்குவீங்களா?'
இப்படி ஒரு எஸ்.எம்.எஸ். அந்த பிஸினஸ் பிரமுகரின் செல்போனில் வந்து விழுந்தது.  என்ன மூடில் அந்த பிஸினஸ் பிரமுகர் இருந்தாரோ, 'நான் ரெடி' என்று தகவல் அனுப்பினார்.


செல்போனில் இப்படி ஆரம்பித்த உறவு, மூன்றே மாதங்களில் ஒரு நாளைக்கு பல எஸ்.எம்.எஸ்.கள், மெயில்கள் என்று பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு வளர்ந்தது. இத்தனைக்கும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்காமலே!


செல்போனில் ஜொள்ளுவிட்டு வந்த அந்த பிஸினஸ் பிரமுகர், நடுவயதுக்காரர். பல மொழிகளைத் தெரிந்தவர். திருமணம் ஆனவர். ஆனால், மனைவியுடன் வாழவில்லை. யாரையும் சந்தேகப் பார்வையுடன்தான் பார்ப்பார். லேப்-டாப் எப்போதும் தோளில் தொங்கிக்கொண்டிருக்கும். வெளிநாட்டு வங்கிகளில் இவர் பெயரில் இருந்த பணம் பல பில்லியன்கள்.


சாதாரண கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அது வெளிஉலக பார்வைக்காக! நிழல் உலகில் பிஸினஸ் மேக்னட் ஆக வலம் வந்தது சிலருக்குத் தெரியும். பினாமி பெயரில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். வெளிநாடுகளுடன் நல்ல தொடர்பில் இருந்தார். இவற்றில் எங்குமே அந்த பிஸினஸ் பிரமுகரின் பெயர் இல்லை. சென்னை, ஹைதராபாத், பெங்களூரு என பெரிய நகரங்களில் கைநிறைய சம்பளத்தில் ஐ.டி. வேலை வாங்கித் தருகிறேன் என பல ஆயிரம்பேரை ஏமாற்றி இவர் சேர்த்தது பல நூறு கோடி ரூபாய்.
ஆனால், இவருக்கு உடல் முழுக்கவே கிரிமினல் மூளை என்பதால் இவரைப் பற்றிய எந்த பின்னணி தகவலையும் ஏமாற்றப்பட்டவர்களால் சேகரிக்க முடியவில்லை. பெரிய ஆதாரம் எதுவும் இல்லாமல் அவர் மீது கை வைக்கவும் போலீஸ் தயங்கியது. இருந்தாலும், ஒரு முயற்சி செய்து பார்ப்போமே? என்று யோசித்தபோதுதான் ஹனி டிராப்பர்ஸ் ஐடியா வந்தது.


ஹனி டிராப்பர்ஸ்... குற்றவாளியைப் பொறிவைத்துப் பிடிக்க அனுப்பப்படும் ஆள். இவர் ஆணாக இருந்தால் 'மேல் ஹனி டிராப்பர்ஸ்' என்றும், பெண்ணாக இருந்தால் 'ஃபீமேல் ஹனி டிராப்பர்ஸ்' என்றும் போலீஸார் ரகசிய சங்கேத வார்த்தையில் சொல்வார்கள். இதில் நல்ல தேர்ச்சி உள்ள ஹேமாவை வைத்துதான் அந்த பிஸினஸ் பிரமுகருக்கு வலைவிரிக்க திட்டமிட்டது போலீஸ். டென்ஷனான ஒருநேரத்தில், அந்த பிஸினஸ் பிரமுகருக்கு ஆறுதலான வார்த்தைகள் ஹேமாவிடம் இருந்து வரவே, சந்தோஷமானார். இப்படியாக, பிஸினஸ் பிரமுகரை தனது கஸ்டடிக்குள் போலீஸ் கொண்டுவந்தது.


ஹேமாவின் கிறக்கப் பேச்சு... தொடர் சீண்டுதல்கள் ஒரு கட்டத்தில் அந்த பிஸினஸ் பிரமுகரை அடிமை ஆக்கியது. தனது புகைப்படம் என்று சொல்லி, வெளிநாட்டு பெண்ணின் படத்தை இந்த பிரமுகரின் மெயில் அட்ரஸுக்கு அனுப்பினாள். அதைப் பார்த்த பிரமுகர் பரவசமானார். செக்ஸ் ஜோக்குகள், நகைச்சுவை பிட்டுகள் என்று தன்பக்கம் வளைத்தேவிட்டார் ஹேமா. அடுத்த கட்டமாக, ஹேமாவுக்கு லவ் புரபோசல் அனுப்பினார். கூடவே, அவரின் பயோ-டேட்டாவும் இருந்தது.

அதைப் பார்த்து, 'ஸாரி... ஒரு கம்பெனியில் நாற்பதாயிரம் வாங்கும் உன்னுடன் எப்படி நான் வாழமுடியும்?' என்று ஹேமா மெயிலில் பதில் அனுப்பினார். அதன்பிறகு, 'இந்த கம்பெனி ஒரு ஹம்பக். நான் பெரிய பில்லியனர். பிற்காலத்தில் அது வெளியே தெரியும். அதுவரை சொல்ல முடியாத சூழ்நிலை' என்று பிஸினஸ் பிரமுகர் அத்தனை உண்மைகளையும் கக்கினார். செல்போனில் தொடர்புகொண்ட ஹேமா, 'இதையெல்லாம் நான் எப்படி நம்புவது? எதையாவது ஆதாரத்துடன் காட்டு' என்று கேட்க... தயங்கி தயங்கி தனது பிஸினஸ் ரகசியங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு உடைத்தார்.


இந்த ரகசியங்களை அக்குவேறு ஆணிவேறாக போலீஸ் அலசியது. காதல் வார்த்தைகளைப் போட்டு பல துணைக் கேள்விகளுக்குப் பதிலைக் கேட்டு வாங்கினார். அந்த பதில்களை போலீஸ் கிராஸ் செக் செய்தபோது, அந்த பிஸினஸ் பிரமுகரின் இன்னொரு பக்கம் அம்பலமானது.

நாட்கள் நகர்ந்தன. நேரில் சந்திக்காமல், இன்டர்நெட்டில் பழகிவந்த இந்த காதல் ஜோடி க்ளைமாக்ஸில், சென்னையில் சந்திக்க நாள் குறித்தனர். படு ஸ்டைலான டிரெஸ்ஸில் குஷியுடன் சந்திப்புக்குத் தயாரானார் அந்த பிஸினஸ் பிரமுகர். தூரத்தில் ஹேமா! நடுவில் வந்து நின்றது போலீஸ் படை. வேர்க்க விறுவிறுக்க வாதம் செய்து பார்த்தார். ஆனால், ஹேமாவுக்கு அவர் அனுப்பிய விவரங்களை மேற்கோள்காட்டி விசாரித்தபோது, பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றார்.


ஹனி டிராப்பர்ஸின் மாயவலையில் சிக்கிய பிஸினஸ் பிரமுகர் சில ஆண்டுகள் கம்பிகளை எண்ணவேண்டிய கட்டாயத்துக்குள்ளானார். ஒரு தேனியின் உதவியால் குள்ளநரியை வளைத்துப் பிடித்ததுதான் போலீஸின் சாதுர்யம்!



மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் !

இணையதளம் மூலம் விளம்பரம் செய்து இளைஞர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் சென்னையைச் சுற்றியுள்ள ஏரியாக்களில் பெருகிவிட்டது. இந்த கும்பலிடம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 40 பேர்கள் சிக்கி பணத்தை இழப்பதாகச் சொல்கிறது சைபர் க்ரைம் பிரிவு போலீஸ்.


அது தவிர, பார்ட் டைம் வேலை, வீட்டிலிருந்தே வேலை, கொள்ளை லாபம் தரும் முதலீடுகள் என பல ஆளை மயக்கும் ஆசை வார்த்தைகளைச் சொல்லிவரும் எஸ்.எம்.எஸ். ஏகத்துக்கும் பெருகிவிட்டன. இந்த விளம்பரங்கள் மற்றும் எஸ்.எம்.எஸ். தகவல்களைப் படித்து ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என சைபர் க்ரைம் வட்டாரத்தில் விசாரித்தோம்!


''இது மாதிரியான விளம்பரங்கள், மெசேஜ்களைப் பார்த்தால், முதலில் சந்தேகப்படுங்கள்! ரிஜிஸ்ட்ரேஷன் பீஸ் அது-இது என்று அளப்பார்கள். அதையும் ஆன்-லைனில் கட்டச் சொல்லுவார்கள். இப்படிச் சொன்னாலே, அது ஃபிராடு என்று முடிவு செய்துவிடலாம். அதேபோல், உங்களது மெயில் அட்ரஸுக்கு வேலை வாங்கித் தருவது தொடர்பாக கடிதம் வரும். அதை நம்பி போட்டோ, பயோ-டேட்டாக்களை அனுப்பாதீர்கள். எந்த கம்பெனி என்று கேட்டு, அங்கே தொடர்புகொண்டு தீர விசாரியுங்கள்.


உங்கள் விசாரணையில் அது தவறான நிறுவனமாக உங்களுக்கு சந்தேகம் வந்தால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்லுங்கள். சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றி விசாரிக்க அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சைபர் க்ரைம் தொடர்பான பிரச்னைகளுக்கு 044-23452350 என்கிற எண்ணுடனும், வங்கி மோசடி எனில் 044-23452317 என்கிற எண்ணுடனும் தொடர்புகொள்ளுங்கள்.