Monday, December 3, 2012

9 காரட் தங்கம் என்றால் என்ன?

''திருச்சியில், ஹால்மார்க் முத்திரையுடன் 9 காரட் தங்கம் ஒரு கிராம் 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். 22 காரட் தங்கம் 3,600 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். 9 காரட் தங்கம் என்றால் என்ன? அதை வாங்குவது நல்லதா? மறுபடியும் விற்பனை செய்ய முடியுமா? இதை வாங்கி விற்கும் தொழிலை மேற்கொண்டால் பலன் கிடைக்குமா?''




''சொக்கத் தங்கம் என்பது 24 காரட். இதில் 99.9 சதவிகிதம் தங்கமாக இருக்கும். சொக்கத் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. செம்பு (காப்பர்) கலந்து செய்தால்தான் நகை உறுதிபெறும். சாதாரணமாக 8 முதல் 9 சதவிகிதம் செம்பை கலந்து செய்வார்கள். இப்படி தயாராகும் நகைகள் 22 காரட். இதற்கும் கீழே... 18, 14, 9 ஆகிய காரட்களிலும் நகைகள் கிடைக்கும். எந்த அளவுக்கு செம்பு சேர்க்கப்படுகிறதோ... அதை வைத்து தங்க நகையின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.


10 கிராம் செம்பு விலை 5 ரூபாய் மட்டுமே. செம்பை கலந்து நகை செய்யும்போது, தங்கத்தின் விலை குறையும். ஆனால், குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக செம்பு சேர்த்து, 22 காரட் தங்கம் என்று கூறி விற்பனை செய்வது தாராளமாக நடக்கிறது. எனவே, வாங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!


10 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பொருளையே, தரம் பார்த்து குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்கும் நாம், பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் தங்க நகைகளின் தரம் அறியாமல், விலை அதிகம் கொடுத்து வாங்கி ஏமாந்துவிடக் கூடாது.


இந்தியாவில் இருக்கும் தரக்கட்டுப்பாடு மையம் (Bureau of Indian Standards),  தங்கத்தின் தரத்தை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய வேண்டும் என தர நிர்ணய முத்திரையை நகையில் பதித்து விற்பனை செய்வதற்கு உதவுகின்றது. 'ஹால்மார்க் பி.ஐ.எஸ்-916' (Hallmark BIS-916) தங்க நகைதான் உண்மையான 22 காரட் தங்க நகை. இதில் 91.6% தங்கம் இருக்கும். ஒரு கிராமுக்கு குறைவான எடை உடைய நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை தேவையில்லை. அதனால் மூக்குத்தி, சிறிய தோடு முதலியவற்றை குறைந்த காரட் தங்கத்திலேயே தயாரித்து, 22 காரட் விலையில் விற்பனை செய்வதும் நடக்கிறது! இதில், விலைகுறைந்த கற்களை வேறு பதித்து விற்பதால், நகையில் உள்ள கற்களுக்கும் தங்கத்தின் விலையையே கொடுத்தாக வேண்டியுள்ளது. இதுவும் வாங்குபவர்களுக்கு நஷ்டத்தையே தரும்!


தோடு, மூக்குத்தி போன்றவற்றில் உள்ள திருகாணி 22 காரட் தங்கம் அல்ல. தங்கத்தில் அந்தப் பகுதியை செய்ய முடியாது. தங்க நகை வியாபாரிகளில் பலரும் செய்கூலி, சேதாரம் எனக் கூறி 10% முதல் 25% வரை விலையை கூட்டி விற்பார்கள்.


18 காரட், 14 காரட், 9 காரட் தங்க நகைகளும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். இதற்கும் தர நிர்ணய முத்திரை உண்டு. 9 காரட் தங்க நகை என்பது 'ஹால்மார்க் பி.ஐ.டி.எஸ்-375' (Hallmark BIS-375). அதில் 37.5% தங்கம் இருக்க வேண்டும். அதனால் 38% டு 40% தங்கம்தான் அந்த நகையில் இருக்கும். அதனால், சொக்கத் தங்க விலையில் அல்லாமல், கிராம் 1,600 ரூபாய்க்கு தர முடியும். இதை மறுவிற்பனை செய்தால்... செய்கூலி, சேதாரம் போக, அந்த நகையில் உள்ள தங்கத்தின் அடிப்படையில் மறு விற்பனைக்கு ஏற்றுக்கொண்டு பணம் தருவார்கள்.


9 காரட் நகைகள் குறைந்த விலையில், அதாவது அதன் உண்மையான மதிப்புக்கு விற்பனை செய்யப்பட்டால் வாங்கலாம். 9 காரட் நகைகள் உறுதியானவை. இதில் தகடுகள் நன்றாக வரும். எனவே, எடை குறைவான (Light Weight) நகைகள் செய்யலாம்.


தாங்கள் 9 காரட் தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்தால், 'ஹால்மார்க்' முத்திரையுடன் கூடிய நகைகளை வாங்கி விற்பனை செய்யுங்கள். முக்கியமான விஷயம்... '9 காரட் நகை' எனக் கூறி, அதற்குரிய விலையிலேயே விற்பனை செய்யுங்கள். தங்கம் எத்தனை காரட் என்பதை அறிய உதவும் காரட் மீட்டரையும் கடையில் பயன்படுத்துங்கள். உங்களின் நேர்மைக்குப் பரிசாக லாபம் கொட்டட்டும்!''