Friday, March 11, 2011

தினமும் உன்னைக் கவனி!

ஹோட்டல் முதலாளி: ''இன்றுதான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாய். உன்னால் வாடிக்கையாளர்களுக்குத் திருப்திகரமாக சேவை செய்ய முடியுமா?''

வெயிட்டர்: ''நிச்சயமாக சார். என்னால் அவர்களுக்கு இரண்டு விதமாகவும் சேவை புரிய முடியும்!''

ஹோட்டல் முதலாளி: ''இரண்டு விதமாகவா... எப்படி?''

வெயிட்டர்: ''அவர்கள் மீண்டும் எப்போதும் நம் ஹோட்டலுக்கே வரும்படி அல்லது எப்போதும் இனி வராதபடி!''

'The Power Of Humor At The Workplace' புத்தகம் முழுக்க இப்படி பணியிட சூழல் நகைச்சுவைத் துணுக்குகளாக நிரம்பிக் கிடக்கின்றன. இந்த 24X7 வாடிக்கையாளர் சேவை உலகத்தில் வீட்டில் செலவழிக்கும் நேரத்தைவிட, அலுவலகத்தில்தான் பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கிறார்கள். என்னதான் கார்ப்பரேட், புரொஃபஷனல் அலுவலகம் என்றாலும், அங்கே இருக்கும் சமயம் முழுக்க இறுக்கமாகவே இருக்க முடியாதே! கிடைக்கும் இடைவெளிகளில் ஜோக் அடித்துக்கொள்வதன் மூலம்தான் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள முடியும். அப்படி அலுவலகத்தில் இறுக்கி நெருக்கும் தருணங்களின்போது சமயோசித மாகச் சமாளிக்கும் வழிகளைக் கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்!

லொப லொபா பலாப் பழம்!

அந்த டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரின் பழ அங்காடிப் பிரிவில் சின்ன கசமுசா. கழுத்து நிறைய நகைகளும், உடலை ஏகமாகச் சுற்றி தலையிலும் முக்காடாகச் சுருண்ட சேலையுமாக ஒரு மார்வாடிப் பெண், பணிப்பெண்ணிடம் காச்மூச் என்று சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார். 'எங்கள் வீட்டில் இரண்டு பேர்தான். எனக்குப் பாதி பலாப் பழம் வேண்டும். முழுப் பழத்தில் இருந்து அறுத்துக் கொடுங்கள்!' என்று மார்வாடிப் பெண் கூற, 'இல்லை மேடம் புரிந்து கொள்ளுங்கள். பலாப் பழத்தைப் பாதி அறுத்து விற்பதில்லை. முழுப் பழமாகத்தான் விற்போம் என்று போர்டில் எழுதியே வைத்திருக்கிறோம் பாருங்கள்!' என்று சமாதானங்கள் சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால், எதையும்கேட்பதாக இல்லை அந்த மார்வாடிப் பெண். தொடர்ந்து தனது கூச்சலின் டெசிபலை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நிலைமை யைச் சமாளிக்க முடியாமல், 'கொஞ்சம் பொறுங் கள்... மேனேஜரிடம் கேட்டுப் பார்க்கிறேன்!' என்று அந்த இடத்தில் இருந்து தப்பித்து, மேனேஜரின் இருப்பிடத்துக்கு வந்தார் பணிப் பெண்.

கண்களில் கேள்வியுடன் எதிர்கொண்ட மேனேஜரிடம், ''ஐயோ, இன்னிக்கு யார் மூஞ்சில முழிச்சேன்னு தெரியலை. காலையிலேயே இம்சை. லொப லொப லொபான்னு சத்தம் போடுற ஒரு வாயாடிப் பொம்பளை பாதி பலாப் பழம்தான் வேணும்னு அடம்பிடிக்...'' என்று கூறிக்கொண்டே திரும்பினால், அங்கு உக்கிரமாக நின்று கொண்டு இருக்கிறார் அந்த மார்வாடிப் பெண். அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பணிப்பெண் சட்டென்று சுதாரித்து, ''மீதம் இருக்குற பாதிப் பழத்தை இதோ இவங்க கேட்குறாங்க... கொடுக்கலாமா?'' என்று சமாளித்தார்.

எந்த நேரமும் பாயும் ரௌத்ர புலிதான் வாடிக்கையாளர்கள். சமாளிக்க அஞ்சாதீர்கள்!

'ஆமாம் ஆமாம்... பெரியய்யா!'

ஃபோர்டு தொழிற்சாலையில் பரபரப்பாக விவாதம் நடந்துகொண்டு இருந்தது. தொழிற்சாலையின் உரிமையாளர் ஹென்றி ஃபோர்டின் கூற்றை மறுத்துப் பேசினார் ஒரு மேனேஜர். உடனே இறுக்கமான முகத்துடன், 'இப்போதே நாம் இருவரும் வெளியே செல்வோம். இந்தக் கட்டடத்தின் முகப்பில் யார் பெயர் எழுதியிருக்கிறது என்று பார்ப்போம்!' என்றார் ஃபோர்டு.

இதற்கு நேர் எதிர் சம்பவம் ஒன்று, ஹாலிவுட்டின் பெரும் புள்ளியான சாமுவேல் கோல்ட்வின் தனது விவாதக் குழுவினரிடம் இப்படிச் சொன்னார், 'என்னைச் சுற்றி 'ஆமாம் ஆமாம்' போடும் ஆசாமிகள் தேவையில்லை. என்னிடம் எல்லோரும் உண்மையை மட்டுமே பேச வேண்டும். அதனால், அவர்கள் வேலையே பறிபோனாலும் பரவாயில்லை!'

'ஆமாம்' என்பது கைப்பிடியில்லாத கத்தி!

அத்தைக்கு வளராது மீசை!

அந்த நிதி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு நேர்முகத் தேர்வு நடந்துகொண்டு இருந்தது. பலரிலிருந்து வடிகட்டி, கிட்டத்தட்ட ஒருவரைத் தேர்வு செய்யும் நேரம், ஒரு பெண்ணின் பயோடேட்டா வந்தது. அந்த வேலைக்கு மிகப் பொருத்தமான அதிகபட்சத் தகுதி களுடன் இருந்தது அந்த பயோடேட்டா. ஒரு ஆர்வத்தில் அந்தப் பெண்ணை எதற்கும் இருக்கட்டும் என்று நேர்முகத் தேர்வுக்கு அனுமதித்தனர் அதிகாரிகள். 10 நிமிடங்கள் பேசியதில் இருந்தே அந்தப் பெண் முன்னர் தேர்வு செய்தவரைக் காட்டிலும் வேலைக்கு மிகப் பொருத்தமானவர் என்பதை உணர்ந்தார்கள். ஆனாலும், 'ஒரு பெண்ணுக்கு அந்த வேலையை வழங்கலாமா?' என்ற தயக்கம் அவர்களுக்கு. அதை அந்தப் பெண் ணிடமே தெரிவிக்கவும் செய்தார்கள். அதற்கு எந்த ஒரு எதிர்மறை ரியாக்ஷனும் காட்டாத அந்தப் பெண், சின்னதாகப் புன்னகைத்துவிட்டு பேசத் துவங்கினார்.

''உங்கள் தயக்கத்தின் நியாயம் எனக்குப் புரிகிறது. ஆனால், நான் உங்களுக்கு ஓர் உத்தரவாதம் தருகிறேன். ஒரு ஆணைப்போல அலுவலகத்துக்குநான்  ஃபுல் கோட் சூட் அணிந்து வருவேன். திருமணமான ஆண் எந்தளவு முதிர்ச்சியோடு ஒரு விஷயத்தை அணுகுவாரோ, அதே போல நான் எந்த விஷயத்திலும் முடிவு எடுப்பேன். இரவு, பகல் எனக் கால நேரம் பார்க்காமல் நான் வேலை பார்ப்பேன். தினமும் அந்நியர்களைச் சமாதானப்படுத்தும் பணி என்றாலும், சளைக்காமல் அவர்களைச் சந்திப்பேன். ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னால் முடியவே முடியாது. அதை மட்டும் செய்யச் சொல்லி என்னை வற்புறுத் தாதீர்கள். ஆமாம்... அது மட்டும் என்னால் முடியவே முடியாது!'' என்று கூறி நிறுத்தினார் அந்தப் பெண். அதிகாரிகள் அதீத ஆர்வத்துடன், 'என்ன அது?' என்று விசாரிக்க, ''என்னால் ஆண்களைப் போல மீசை வைத்துக்கொள்ள முடியாது. அது வளரவும் வளராது!'' என்று குறும்பாகச் சொல்லி கலகலவெனச் சிரிக்க, அந்த வேலை யாருக்குக் கிடைத்திருக்கும் என்பதை இனிமேல் சொல்லவும் வேண்டுமோ!

சூழ்நிலையில் கலகலப்பை உண்டாக்குபவர் பக்கம் அதிர்ஷ்டக் காற்று மையம் கொள்ளும்!  

'தினமும் உன்னைக் கவனி!'

ராபர்ட் ஆர்பன் என்பவர் அமெரிக்க எழுத்தாளர். அவர் ஒருமுறை இப்படிக் கூறினார், ''நான் ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலைப் பார்ப்பேன். அதில் என் பேர் இல்லையென்றால், உடனே உழைக்கக் கிளம்பிவிடுவேன்!''

தினமும் உன் முன்னேற்றத்தை அளவிடு!