Friday, March 11, 2011

பாட்டு கேட்டால் பதற்றம் குறையும்!

பாட்டு கேட்டால் பதற்றம் குறையும்!

 
Driving anxiety... சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கார் ஓட்டுபவர்களைத் துரத்தும் லேட்டஸ்ட் பிரச்னை இதுதான்! கார் ஓட்டும்போது இனம் புரியாத பதற்றம், தலைச் சுற்றல், மயக்கம், குமட்டல் போன்றவை ஏற்பட்டால், அவை 'டிரைவிங் பதற்ற'த்துக்கான அறிகுறிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

95 சதவிகித விபத்துகள் ஓட்டுனரின் கவனக் குறைவாலேயே நடைபெறுகின்றன என்பதுதான் ஆய்வுகள் சொல்லும் முடிவு. ஆனால், 'இதை ஓட்டுனரின் கவனக்குறைவு என்று மட்டுமே சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. மருத்துவரீதியான தொந்தரவுகள்தான் பல நேரங்களில் கவனக்குறைவை ஏற்படுத்துகின்றன!' என்கிறார்கள் மருத்துவர்கள்.

கார் ஓட்டும்போது காரணமே இல்லாமல் பதற்றமடைவதற்கு உளக் கோளாறுதான் (Neurosis) காரணம். 'டிரைவிங் பதற்றம்' வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது. குறிப்பாக, இது ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்கும் என்கிறது மருத்துவ ஆய்வு. சரியான தூக்கம் இல்லாமல் தொடர்ந்து கார் ஓட்டுவது, தினமும் டிராஃபிக் நெருக்கடியில் கார் ஓட்டுவது, மனக் கவலையுடன் கார் ஓட்டுவது உள்ளிட்ட வேளைகளில்தான் இது போன்ற பதற்றம் ஏற்படும். மூச்சுத் திணறல் போன்ற உணர்வு, மயக்கம், தலைச்சுற்றல், எதன்மீதாவது மோதி விடுவோமோ என்கிற பயம், தேவையில்லாத எரிச்சல் ஆகியவைதான் பதற்றத்துக்கான அறிகுறிகள்.

'டிரைவிங் பதற்றம்' குறித்து 'செட்டிநாடு ஹெல்த் சிட்டி' மருத்துவமனையின், அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ரங்கநாதன் அண்ணாமலையிடம் பேசினோம். ''சரியாகச் சாப்பிடாமல், தேவையான தண்ணீர் குடிக்காமல் காரை எடுத்துக் கொண்டு நீண்ட தூரப் பயணங்களுக்குக் கிளம்பக்கூடாது என்பது அடிப்படை விதி! எக்காரணத்தைக் கொண்டும் போதுமான தூக்கம் இல்லாமல், சாப்பிடாமல் காரை ஓட்டக்கூடாது. எப்போதுமே காருக்குள் தண்ணீர் பாட்டில், சாக்லேட், பிஸ்கெட் போன்றவற்றை வைத்திருப்பது நல்லது. நீண்ட தூரம் டிரைவ் செய்யப் போகிறோம் என்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது காரை நிறுத்தி தண்ணீர் குடிப்பது, பிஸ்கெட் அல்லது பழங்கள் சாப்பிடுவது, சிறுநீர் கழிப்பது என அத்தியாவசியக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இவற்றைச் செய்தாலே தலைச்சுற்றல், மயக்கம், பதற்றம் ஆகியவை வராது.

கார் ஓட்டும்போது தலை சுற்றுவது போன்றோ, மயக்கம் வருவது போன்றோ தோன்றினால், உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு, கார் கண்ணாடிகளை இறக்கி விட்டு நீர் அருந்த வேண்டும். சாக்லேட் அல்லது பிஸ்கெட் சாப்பிடுவது நல்லது. பின் சீட்டில் ஃப்ளாட்டாக, அதாவது 180 டிகிரியில் 15-30 நிமிடங்களாவது படுத்து ஓய்வு எடுப்பது நல்லது. செல்போனை ரீ-சார்ஜ் செய்வதுபோல, உடம்பை ரீ-சார்ஜ் செய்ய தூக்கம் மிகவும் அவசியம். கொஞ்சநேரம் தூங்கினாலே இந்த பதற்றம், தலைச்சுற்றல் போன்ற அனைத்தும் சரியாகிவிடும். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இருப்பவர்கள் கார் ஓட்டுவதற்கு முன்பு அதற்கான மாத்திரைகளை உட்கொள்வது நல்லது!'' என்கிறார், எளிய எச்சரிக்கையாக!

''கார் ஓட்டும்போது முதலில் கடைப்பிடிக்க வேண்டியது டைமிங். சென்னை போன்ற பெருநகரங்களில் கார் ஓட்டுவது அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தினமும் அலுவலகத்துக்கு காரில்தான் செல்கிறோம் என்றால், பெரும்பாலும் டிராஃபிக் நெருக்கடி உள்ள சாலைகளைத் தவிர்க்கவும். டிராஃபிக்கான சாலைகள்தான் ஒரே வழி என்றால், வீட்டில் இருந்து 30 நிமிடங்களுக்கு முன்பாகவே கிளம்பிவிடுவது நல்லது. நேரம் ஆக ஆக பதற்றம்தான் கூடிக்கொண்டே போகும். பதற்றம், நம் இயல்பான டிரைவிங் ஸ்டைலைக் கெடுத்துவிடும் என்பதோடு, தேவையில்லாத சண்டைகளில் கொண்டுபோய் விடும். பதற்றம்தான் படிப்படியாக தலைச்சுற்றல், மயக்கத்தையும் ஏற்படுத்துகிறது. மனக் கவலைகளை அசை போட்டபடியே கார் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். நல்ல பாடல்கள் அல்லது இசையைக் கேட்பது மனதை ரிலாக்ஸ் செய்யும். அதேபோல், அனுபவமில்லாதவர்கள் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்வது நல்லதல்ல!'' என்கிறார் முதலுதவி மற்றும் சாலை விபத்துகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் 'அலர்ட்' தொண்டு நிறுவனத்தின் கலா பாலசுந்தரம்!

தலைச் சுற்றல், மயக்கம் ஏற்படாமல் தவிர்க்க...

சரியான தூக்கம் இல்லாமல் கார் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

உரிய நேரங்களில் உணவு உட்கொள்ளாமல் தொடர்ந்து டிரைவ் செய்யக் கூடாது.

4 மணி நேரத்துக்கு ஒருமுறை காரை நிறுத்தி விட்டு, 15-30 நிமிடங்கள் பிரேக் எடுக்க வேண்டும்.

மது, போதை தரும் பொருட்களை உட்கொண்டு விட்டு கார் ஓட்டுவதை அறவே தவிர்க்கவும்.

டிராஃபிக் நெருக்கடிகளில் கார் ஓட்டும்போது, பிடித்த பாடல்கள் கேட்பது மனதை ரிலாக்ஸ் செய்யும்.

எந்த இடத்துக்குச் செல்வதாக இருந்தாலும் அவசர அவசரமாக கார் ஓட்டாமல், நிதானமாகச் செல்வது நல்லது. அவசரமான பயணம் பதற்றத்தை ஏற்படுத்தும்.

அடிக்கடி தலைச் சுற்றல், தலைவலி ஏற்பட்டால் கண் டாக்டரிடம் பரிசோதனை செய்வது நல்லது. பார்வைக் கோளாறுகள் தலைவலியை ஏற்படுத்தும்.

அனுபவம் இல்லாமல் இரவில் கார் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது!

தலைச் சுற்றல், மயக்கம் ஏற்பட்டால்....

உடனடியாக காரை சாலையின் ஓரமாக நிறுத்தி, கார் கண்ணாடிகளை இறக்கிவிட வேண்டும்!

சாக்லேட், பிஸ்கெட், டீ, காஃபி போன்றவை எடுத்துக் கொள்வது நல்லது!

15-30 நிமிடங்கள் தூங்குவது உடலை ரீ-சார்ஜ் செய்யும்!

சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கார் ஓட்டுவதற்கு முன்பு அதற்கான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்!

கார் ஓட்டும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிப்பது நல்லது!