Wednesday, March 16, 2011

டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!

டும் டும் டும்முக்கு முன் ஒரு நிமிஷம்!

 

 

சில நாட்களுக்கு முன் திருமண மண்டபத்தில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி... மாலையும் கழுத்துமாக நிற்க வேண்டிய மணமக்கள் படுக்கையில் படுத்து ரத்த தானம் செய்துகொண்டு இருந்தார்கள். தொடர்ந்து திருமண வரவேற்புக்கு வந்தவர்களில் சிலரும் ரத்த தானம் செய்தார்கள். இது தவிர, 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன வகை ரத்தம் என்பதை அறியும் பரிசோதனையும் நடந்துகொண்டு இருந்தது.

 

ரத்த தானம், ரத்தப் பரிசோதனை என மணவிழாவில் ரத்த மேளா ஏன்?

 

''திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கிறோமோ இல்லையோ... ரத்தப் பொருத்தம் பார்ப்பது அவசியம்!'' ரத்தப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது குறித்த விழிப்பு உணர்வு ஏற்படாத காலம் அது. என் நண்பரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது குறைப் பிரசவமாகவும், மஞ்சள் காமாலை நோய்த் தொற்றுடன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது குழந்தையின் உடலில் இருந்து ஒரு பகுதி ரத்தத்தை மாற்றவும் செய்தனர். 'ரத்தத்தில் rh  என்று ஒரு பொருள்இருக்கிறது. rh  உள்ள ஆணுக்கும் rh இல்லாத பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தையின் ரத்தம் போதுமான அளவுக்கு வலிமையுடன் அமைவது இல்லை. பெற்றோரின் பொருந்தாத ரத்தத்தின் விளைவால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையிலேயே இறந்துவிடுகிறது, அல்லது பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் பிறக்கிறது. இதுபோன்று பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ரத்த மாற்றம் செய்து குணப்படுத்துகின்றனர். பொருந்தாத ரத்தம் உடைய பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளில் 25-ல் ஒன்று பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்னரே ரத்தத்தில் rh பரிசோதனை செய்துகொள்வது அவசியம். முடியாவிட்டால், திருமணம் முடித்தவர்கள் ரத்தத்தை ஆய்வு செய்து, பொருந்தாது எனத் தெரிந்தால் மருத்துவமனையை நாடவேண்டும்!

 

துருக்கியின் முன்னாள் அதிபர் கமால் பாட்ஷா, 'திருமணம் செய்பவர்கள் ரத்தப் பொருத்தம் பார்க்காவிட்டால் அந்தத் திருமணமே செல்லுபடி ஆகாது!' என சட்டமே கொண்டு வந்தார்.

 

ஓர் ஆணுக்கு ரத்தத்தில் பாசிட்டிவ்வும், பெண் ரத்தத்தில் நெகடிவ்வும் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ரத்தம் பாசிட்டிவ்வாக அமையும் பட்சத்தில், 72 மணி நேரத்துக்குள் பெண்ணுக்கு இம்முனோகுளோபின் இன்ஜெக்ஷன் போட வேண்டும். இல்லையெனில், அந்தப் பெண்ணுக்கும், அடுத்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். இத்தகைய விழிப்பு உணர்வு மக்களிடத்தில் இன்னமும் ஏற்படவில்லை.

 

ரத்தப் பொருத்தம் பார்ப்பதை அரசு சட்டமாக அறிவிக்க வேண்டும். வருங்கால சந்ததி வளமானதாக அமைய, அதுதான் வழிசெய்யும்!'' என்றார் அக்கறையோடு.

 

ரத்த தானம் யார் செய்யலாம்?

 

18 வயது முடிந்தவர்கள், 45 கிலோ எடைக்குக் குறையாதவர்கள், 60 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் ரத்தம் தரலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

 

யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

 

ரத்த அழுத்தம் சீராக இல்லாதவர்கள், சளி, ஜுரம், இருமல் உள்ளவர்கள், ஆறாத புண் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. மது அருந்திய 24 மணி நேரத்துக்குள் தானம் செய்யக்கூடாது. சிகரெட் பிடிப்பவர்கள், புகைத்த ஒரு மணி நேரம் கழித்தே ரத்தம் தர முடியும். ரத்தம் கொடுத்து இரண்டு மணிநேரத்துக்கு மீண்டும் சிகரெட் பிடிக்கக்கூடாது. சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகே ரத்தம் தரலாம். பெரிய அறுவைச் சிகிச்சை செய்தவர்கள் என்றால் ஒரு வருடம் கழித்தே தர முடியும். கருவுற்ற பெண்கள், தாய்ப்பால் தரும் பெண்கள் ரத்தம் தர முடியாது. உடலில் உள்ள ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5-க்குக் குறைந்தால் ரத்தம் தர முடியாது.